மலையாற்றூர் ராமகிருஷ்ணன்

மலயாற்றூர் ராமகிருஷ்ணன்
பிறப்புகே. வி. ராமகிருஷ்ண ஐயர்
(1927-05-27)27 மே 1927
கல்பாத்தி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு27 திசம்பர் 1997(1997-12-27) (அகவை 70)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தொழில்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்கிருஷ்ணவேணி (1954–1997)
பிள்ளைகள்2
பெற்றோர்
  • கே. எஸ். விஸ்வநாத ஐயர்
  • ஜானகி அம்மாள்
குடும்பத்தினர்ஜெயராம் (மருமகன்)[1]

மலயாற்றூர் ராமகிருஷ்ணன் (Malayattoor Ramakrishnan) (27 மே 1927 - 27 டிசம்பர் 1997) என்ற புனைபெயரால் நன்கு அறியப்பட்ட கே. வி. ராமகிருஷ்ண ஐயர், என்பவர் மலையாள இலக்கியவாதி, எழுத்தாளர், கேலிச்சித்திரக்காரர், வழக்கறிஞர், நீதித் துறை நடுவர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் தனது புதினங்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாற்று ஓவியங்களுக்காக மிகவும் பிரபலமானவர். யந்திரம், வேருகள், யட்சி , சர்வீஸ் ஸ்டோரி - என்டே ஐஏஎஸ் தினங்கள் ஆகிய இவரது படைப்புகளுக்காக அறியப்படுகிறார். 1967 ஆம் ஆண்டு இவர் புதினத்துக்கான கேரள சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார். 1979 ஆம் ஆண்டு வயலார் விருதையும் இவர் பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

ராமகிருஷ்ணன் படித்த இயூனியன் கிருத்துவக் கல்லூரியும் பணியாற்றிய இடமும்

மலயாற்றூர் ராமகிருஷ்ணன் 1927 ஆம் ஆண்டு மே 27 ஆம் நாள், பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தின் மலபார் மாவட்டத்தில் பாலக்காடு அருகே கல்பாத்தி தேர்த் திருவிழாவிற்குப் பெயர் பெற்ற கல்பாத்தி என்ற சிற்றூரில் பிறந்தார். அரசு அதிகாரியான கே. ஆர். விஸ்வநாத ஐயர், ஜானகி அம்மாள் இணையரின் ஆறு குழந்தைகளில் ஒருவராக தமிழ் குடும்பத்தில் பிறந்தார்.[2] பின்னர் அந்தக் குடும்பம் பெரியாற்றங் கரையோரத்தில் சேரநல்லூருக்கு அருகிலுள்ள தோட்டுவாவில் குடியேறியது. இவரின் தந்தை கேரளத்தின் பல இடங்களில் பணிபுரிந்ததால், இவரது பள்ளிப் படிப்பு கேரளத்தின் பல்வேறு பள்ளிகளில் நடந்தது. இவர் தனது கல்லூரிப் படிப்பை ஆலுவாவில் இயூனியன் கிறித்தவக் கல்லூரியில் தொடங்கினார். அங்கு பிரபல விமர்சகர் குட்டிப்புழா கிருஷ்ணப் பிள்ளையிடம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில்தான், இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் கலந்துகொண்டார். அதற்காக ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் சிறிது காலம் தான் படித்த ஆலுவாவில் உள்ள இயூனியன் கிருத்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். [2]

பின்னர், ராமகிருஷ்ணன் சட்டம் பயின்றார், சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆனால் பின்னர் பம்பைக்குச் சென்று ஃபிரீ பிரஸ் ஜர்னல் என்ற நாளிதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு இவர் டி. ஜே. எஸ். ஜார்ஜுடன் இணைந்து பணியாற்றினார். [3] பின்னர், கேரளம் திரும்பி, மீண்டும் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நேரத்தில்தான் இவர் 1954 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து, ஃபிரீ பிரஸ் ஜர்னலின் துணை ஆசிரியராக மீண்டும் மும்பைக்குத் திரும்பினார். அதன் மாலைச் செய்தித்தாளில் சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். ஆனால் மீண்டும் கேரளத்திற்குத் திரும்பியதால் மும்பையில் தங்கிய காலம் மீண்டும் குறுகியதாக இருந்தது. விரைவில், நகராட்சி ஆணையர் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார், ஆனால் இடதுசாரி சித்தாந்தத்தின் மீது இவர் கொண்டிருந்த சாய்வு காரணமாக வேலை கிடைக்கவில்லை. இருப்பினும், சட்டப் பணிகளில் நீதித் துறை நடுவர் தேர்வில் முதல் தரவரிசையில் தேர்ச்சி பெற்றார். மேலும் நீதித் துறை நடுவராகப் பணியாற்றிக்கொண்டே, 1957 இல் இந்திய ஆட்சிப் பணிக்கான குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றார். இ.ஆ.ப. வாழ்க்கையில் பல்வேறு பதவிகளில் இருந்தார். பின்னர் எழுத்தில் கவனம் செலுத்துவதற்காக பணியில் இருந்து விலகினார். [2]

ராமகிருஷ்ணன் கிருஷ்ணவேணி என்பவரை 1954 இல் மணந்தார். இந்த இணையருக்கு இரு குழந்தைகள் உண்டு. இவர் 1997 திசம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் தனது 70 வயதில் இறந்தார். இவர் இறந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது மனைவி 1999 இல் இறந்தார். [4] பிரபல மலையாள திரைப்பட நடிகரான ஜெயராம், இவரது மருமகன் ஆவார். [5] [6]

மரபு

அரசு நிர்வாகப் பணி வாழ்க்கையைத் தவிர, ராமகிருஷ்ணன் இதழ்கள், இலக்கியம், கேலிச்சித்திரங்கள், திரைப்படங்கள் ஆகிய துறைகளில் பங்களிப்புகளைச் செய்துள்ளார். [2] பம்பையில் உள்ள தி ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஷங்கர்ஸ் வீக்லி இதழுக்கு கேலிச்சிதிரங்களை வரைந்தார். இவரது இலக்கிய வாழ்க்கையானது துப்பறிவுப் புனைகதைகளுடன் தொடங்கியது. இவர் ராத்ரி என்ற குற்றப் புதினத்தை எழுதினார். செர்லக் ஓம்சின் சில புதினங்களை மொழிபெயர்த்தார். டிராகுலாவை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இதன் வழியாக பிராம் ஸ்டோக்கரின் புதினத்தை மலையாளத்தில் முதன்முறையாக மொழிபெயர்த்தவர் என்ற பெயரைப் பெற்றார். [3]

மலயாற்றூர் ராமகிருஷ்ணன் 1965 ஆம் ஆண்டு விருது பெற்ற வேருகள் என்ற புதினத்தை எழுதினார். இது கேரளத்தில் குடியேறிய தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தின் கதையைச் சொல்லும் அரை தன்வரலாற்றுப் படைப்பாகும்.[7] இந்தப் புதினம் பின்னர் வி. அப்துல்லா என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஓரியண்ட் லாங்மேன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[8] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் மல்லேசுவரம் மலைகளில் வாழும் அட்டப்பாடியின் ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட பொன்னி (1967) என்ற புதினத்தை வெளியிட்டார். 1981 ஆம் ஆண்டு, எழுத்துப் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விலகினார். 1981 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில்தான் இவரது மிகவும் பிரபலமான படைப்புகளான யட்சி, யந்திரம், நெட்டூர் மாத்தோம், அமிர்தம் தேடி ஆகியவை எழுதப்பட்டன.[4] ஆறாம் விரல் என்பது இவரது கடைசி புதினமாகும். இவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதை எழுதினார்; இந்தப் படைப்பு பிரேமா ஜெயக்குமாரால் தி சிக்ஸ்த் ஃபிங்கர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[9] இவர் ஒரு ஆட்சிப் பணி அதிகாரியாக தனது வாழ்க்கையின் நினைவுகளை ஆவணப்படுத்தும் விதமாக சர்வீஸ் ஸ்டோரி - என்டே ஐஏஎஸ் தினங்கள் என்ற புத்தகத்தை எழுதினார்.

ராமகிருஷ்ணன் 1968 ஆம் ஆண்டு பு. பாஸ்கரன் இயக்கிய லட்சப்பிரபு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையிலும் நுழைந்தார். அப்படத்திற்கான கதை, திரைக்கதை, உரையாடலை எழுதினார்.[10] ஒட்டுமொத்தமாக, சாயம், காயத்ரி, பஞ்சமி, கல்கி போன்ற நான்கு படங்களுக்கு திரைக்கதை உரையாடலை எழுதினார். யட்சி, செம்பரதி, பொன்னி, சரபஞ்சரம், ஐயர் தி கிரேட், அகம் ஆகிய ஆறு படங்களும் இவரது கதையை அடிப்படையாக கொண்டவை.[11] 1982 ஆம் ஆண்டு எம்.ஓ. ஜோசப் தயாரித்த 'ஒடுக்கம் தொடங்கம்' திரைப்படத்தின் வழியாக இயக்குநராக ஆனார். இப்படம் இவரது கதையை அடிப்படையாகக் கொண்டது. இவரே இந்தப் படத்திற்கான திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை எழுதினார்.[12] இரண்டு திரைப்படப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். ஒன்று இவரது இயக்கத்தில் வெளியான 'ஒடுக்கம் தொடங்கம்' படத்திற்கும் மற்றொன்று 'கல்கி' படத்திற்கும் ஆகும்.[13]

விருதுகளும் கௌரவங்களும்

1967 ஆம் ஆண்டு கேரளச் சாகித்திய அகாதமி இவது வேருகள் புதினத்தை அந்த ஆண்டுக்கான சிறந்த புதினமாக தேர்ந்தெடுத்தது.[14] 1979 ஆம் ஆண்டு "யந்திரம்" என்ற புதினத்துக்காக வயலார் விருதைப் பெற்றார்.[15] மலயாற்றூர் ராமகிருஷ்ணன் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டது. அது இரண்டு விருதுகளை வழங்குகிறது. நுண்கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒரு விருதாக மலயாற்றூர் ஓவியம் மற்றும் சிற்ப விருது என்னும் விருதும், மலையாள மொழியின் சிறந்த இலக்கியத்துக்கு மலயாற்றூர் விருது என்ற விருதும் வழங்கப்படுகிறது. பிரபல ஓவியரும், சிற்பியுமான எம். வி. தேவன் மலயாற்றூர் ஓவியம் மற்றும் சிற்பக்கலை விருதைப் பெற்றவர்களில் ஒருவராவார். [16] [17] அதே நேரத்தில் பிரபா வர்மா, தா. தா. இராமகிருஷ்ணன், பெரும்பதவம் ஸ்ரீதரன் ஆகியோர் இவரது பெயரிலான இலக்கிய விருதைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.[18] [19]

நூல் பட்டியல்

புதினங்கள்

  • டோக்டர் வேழாம்பல் (1964)
  • வேருகள் (1966)
  • யக்ஷி (1967)
  • பொன்னி (1967)
  • துவந்த்வயுத்தம் (1970)
  • யந்த்ரம் (நோவல்) (1976)
  • அநந்தசர்ய (1988)
  • நெட்டூர் மடம் (1988)
  • மிருதியுடெ கவாடம் (1989)
  • ஆறாம் விரல்
  • ஸ்வரம்
  • முக்திசக்ரம்
  • மனசிலெ மாணிக்யம்
  • அம்ருதம் தேடி
  • அஞ்சு சென்ற்
  • துடக்கம் ஒடுக்கம்
  • அநன்தயாத்ர
  • ரக்தசந்தனம்
  • ராத்ரி
  • மிருதுலபிரபு
  • சிரஸ்சில் வரச்சத்
  • விஷபீஜம்

சிறுகதைகள்

  • ஆத்யத்தெ கேஸ் (1952)
  • அவகாசி (1956)
  • சூசிமுகி (1957)
  • வேருகள்க்கொரநுபந்தம்
  • பிரிகேடியர் கதகள்
  • பிரிகேடியரும் பெண்மறுகும்
  • தெரிந்தெடுத்த கதைகள்
  • அறபியும் ஒட்டகவும்
  • பறக்குன்ன தளிக
  • நால் அஞ்ச்
  • மலபார் ஹில்லும் பொறாட் றோடும்
  • பாம்ப்
  • ஸ்புட்நிக்கும் கோட்டி தோமசும்
  • ஷெர்லக்ஹோம்ஸ் கதைகள்

பிற

  • நம்முடெ சிக்‌ஷாநியமம் (1958)
  • சர்வீஸ் ஸ்டோரி - எந்றெ ஐ.எ.எஸ். தினங்கள் (1986)
  • ஓர்ம்மகளுடெ ஆல்பம் (1996)

மொழிபெயர்ப்புகள்

  • மஞ்ஞமுகம்

Original Title :- The Adventure of the Yellow Face by Sir Arthur Conan Doyle

  • நாடோடிக்கப்பலில் நாலுமாசம்

பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கபட்டவை

  • Ramakrishnan Malayatoor; V. Abdulla (translator) (2002). Roots. Hyderabad: Orient longman. ISBN 9788125022206. {{cite book}}: |last2= has generic name (help)
  • Ramakrishnan Malayatoor; V. Abdulla (translator) (1995). Roots. Penguin Books India. ISBN 9780140255614. {{cite book}}: |last2= has generic name (help)
  • Ramakrishnan Malayatoor; R. Viswanathan (translator) (1998). Five Cents of Land. Penguin Books India. ISBN 9780140272185. {{cite book}}: |last2= has generic name (help)

திரைப்படங்கள்

இயக்கம்

  • ஒடுக்கம் துடக்கம்

திரைக்கதை, உரையாடல்

  • லட்சபிரபு
  • சாயம்
  • காயத்ரி
  • பஞ்சமி
  • கல்கி
  • ஒடுக்கம் துடக்கம்

கதை

  • இலட்சப்பிரபு
  • சாயம்
  • காயத்திரி
  • பஞ்சமி
  • கல்கி
  • ஒடுக்கம் துடக்கம்
  • யட்சி
  • செம்பரத்தி
  • பொன்னி
  • சரபஞ்சாரம்
  • ஐயர் தி கிரேட்
  • அகம்

மேற்கோள்கள்

  1. Chandra Kumar, Sujit (29 October 2015). "An obsession that's too big". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/151029/entertainment-mollywood/article/obsession-that%E2%80%99s-too-big. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-03-10. Retrieved 2019-03-10.
  3. 3.0 3.1 "Malayattoor Ramakrishnan - Good Reads profile". www.goodreads.com. 2019-03-10. Retrieved 2019-03-10.
  4. 4.0 4.1 "Profile of Malayalam Story Writer Malayattoor Ramakrishnan". malayalasangeetham.info. 2019-03-11. Retrieved 2019-03-11.
  5. "An obsession that's too big". Deccan Chronicle. October 29, 2015. Retrieved 2019-03-11.
  6. "Jayaram speaking..." gulfnews.com (in ஆங்கிலம்). 7 September 2011. Retrieved 2019-03-11.
  7. "Verukal (Roots) : Novel Review". Archived from the original on 24 March 2014. Retrieved 2 March 2014.
  8. "Desiccated roots". தி இந்து. Archived from the original on 2003-07-18. Retrieved 2019-03-11.
  9. "A Divine Finger Pointed At Him". outlookindia.com/. Retrieved 2019-03-11.
  10. "Lakshaprabhu (1968)". www.malayalachalachithram.com. Retrieved 2019-03-11.
  11. "Malayattoor Ramakrishnan on Malayala Chalachithram". malayalachalachithram.com. 2019-03-11. Retrieved 2019-03-11.
  12. "Odukkam Thudakkam (1982)". www.malayalachalachithram.com. Retrieved 2019-03-11.
  13. "List of Malayalam Songs written by Malayattoor Ramakrishnan". www.malayalachalachithram.com. 2019-03-11. Retrieved 2019-03-11.
  14. "Kerala Sahitya Akademi Award for Novel". Kerala Sahitya Akademi. 2019-03-11. Archived from the original on 9 November 2013. Retrieved 2019-03-11.
  15. "Vayalar Award". Kerala Sahitya Akademi. 2019-03-11. Retrieved 2019-03-11.
  16. Devasia, T. k. "Eminent artist and writer M.V. Devan dead". Khaleej Times. Retrieved 2019-03-11.
  17. "Remembering M V Devan-Catalogue of Drawings, Paintings, Graphic paints, and Sculptures". www.welcomekeralaonline.com (in ஆங்கிலம்). Retrieved 2019-03-11.
  18. "Prabha Varma". Mathrubhumi (in ஆங்கிலம்). 13 January 2019. Retrieved 2019-03-11.
  19. "Malayattoor Award Winners". www.goodreads.com. Retrieved 2019-03-11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya