ராமகிருஷ்ணானந்தர்
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சசி பூஷண் சக்கரவர்த்தி. இவரது பெற்றோர் ஈஸ்வர சந்திர சக்கரவர்த்தி, பாவசுந்தரி தேவி ஆவர். ஈஸ்வர சந்திரர் வங்கத்தின் மிகப்பெரிய தாந்திரீக சாதகரான ஜகன்மோகன் தர்க்காலங்கரின் சீடர். சசி பூஷண் சக்கரவர்த்தி பிரம்ம சமாஜத்தின் கேசவ சந்திர சேன் மூலம் கேள்விப்பட்டு 1883 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தட்சிணேசுவரம் சென்று ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார்.[1] சென்னையில் இராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர்.[2] [3] இளமைப் பருவம்வங்காளத்தின் ஹுக்ளி மாவட்டம், மயால் இச்சாபூர் கிராமத்தில் பிறந்தவர் (1863). இவரது இயற்பெயர் சசி பூஷண் சக்கரவர்த்தி. துறவியரும் சீடர்களும் சசி மகராஜ் என இவரை அன்புடன் குறிப்பிடுவார்கள். தந்தை ஈசுவரமுர்த்தி, அம்பிகையின் பரம பக்தர், சாஸ்திர அறிவு மிகுந்தவர். தீவிரமான சாதகர். பிற்காலத்தில் பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் பூஜை, ஹோமம் முதலான சடங்குகளுக்கு துறவியர் இவரது துணையை நாடினர். தாய் பாவசுந்தரி, களங்கமற்ற சுபாவமும் தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த மாணவரான சசி, மெட்ரோபாலிடன் கல்லுரியில் பி.ஏ. பயின்றார். கல்வி சமஸ்கிருதம், ஆங்கில இலக்கியம், வானியல், தத்துவ சாஸ்திரம் ஆகியவற்றில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆத்ம சாதனையில் கல்லுரி நாட்களிலேயே ஆர்வம் மிகுந்திருந்தது. விவிலியம், சைதன்ய சரிதாமிருதம் உள்ளிட்ட புனித நுல்களைப் பயின்றார். கல்லுரியில் படிக்கும் போது பிரம்ம சமாஜத் தலைவர் கேசவசந்திர சேனருடன் தொடர்பு ஏற்பட்டது. தனது ஒன்றுவிட்ட சகோதரர் சரத் சந்திர சக்கரவர்த்தியுடன் இவர் பிரம்ம சமாஜ உறுப்பினரானார். அங்கு அவ்வப்போது வரும் ராமகிருஷ்ண பரமஹம்சரை தரிசித்து உரையாடவேண்டும் என இவர்கள் இருவரும் ஆசைப்பட்டனர். துறவுதட்சிணேசுவரம் காளிகோவில் தோட்டத்தில் நடைபெற்ற பிரம்ம சமாஜ ஆண்டு விழாவில் பங்கேற்றபோது சசியும் சரத்தும் குருதேவர் அறைக்குச் சென்றனர். அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த அவர் இருவரையும் புன்முறுவலுடன் வரவேற்றார். இந்த முதல் சந்திப்பு பற்றி பின்னர் நினைவுகூர்ந்தபோது, “அன்று நான் மிக அதிகமாகவே பேசினேன். அந்த நான் மட்டும்தான் அவ்வாறு பேசினேன். பின்னர் ஒரு தடவைகூட அவ்வாறு பேசவில்லை“ என சசி மகராஜ் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் இவர் வாழ்க்கையில் புது அத்தியாயம் மலர்ந்தது. அடிக்கடி தட்சிணேசுவரம் சென்று வந்தார். ஒவ்வொரு முறையும் புதிய ஒளியோ, விளக்கமோ வாய்க்காமல் இருந்ததில்லை. குருதேவர் வாக்கை அட்சரம் பிசகாமல் அப்படியே பின்பற்றினார். அந்த மகான் இவரை தன் அந்தரங்க சீடராக ஏற்றுக்கொண்டார். விரைவிலேயே நரேந்திரருடன் (சுவாமி விவேகானந்தர்) தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கிடையே அற்புதமான சகோதர உறவு செழித்து வளர்ந்தது. குருதேவர் உடலை உதிர்த்த, 1886 ஆகஸ்டு 16 அன்று, அவரது இறுதி மூச்சுப் பிரியும்வரை உடனிருந்து பணிவிடை செய்தார். அந்த இறுதித் தருணத்தில் ஓர் ஆனந்தப் பேருணர்ச்சி குருதேவர் மூலம் பாய்ந்து பரவியதை தான் அனுபவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்ற பெயரை முதலில் தான் ஏற்றுக்கொள்ள நரேந்திரர் விரும்பினாலும் அந்த உரிமையை இவருக்கே அளித்தார். அந்தத் திருநாமம் சசிக்கே பொருந்தும் என்று கூறியதை மற்ற அனைத்து சீடர்களும் ஏற்றுக்கொண்டனர். வராக நகர் என்ற இடத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடு, ராமகிருஷ்ண சங்கத்தின் முதல் மடமாக அமைந்தது. வராக நகர் மடம் சென்றவர்கள், குருதேவர் உயிர்வாழ்ந்தபோது தட்சிணேசுவரம் சென்ற சமயங்களில் எவ்வாறு ஆத்ம திருப்தி அடைந்தனரோ அதைப்போன்றே இப்போதும் உணர்ந்தனர். ராமகிருஷ்ணானந்தர் பக்திப் பெருக்குடன் செய்யும் குருபூஜை, ஏதோ ஒரு படத்திற்கோ ஒரு சின்னத்திற்போ செய்யப்படும் பக்திபூர்வமான வழிபாடாக இல்லாமல், உயிர் வாழ்கிற ஒருவருக்குச் செய்யப்படும் உண்மையான பராமரிப்பும் பணிவிடையாகவும் அமைந்திருந்தது. சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பங்கேற்ற பிறகு சென்னை வருகை தந்த விவேகானந்தரிடம், சென்னையில் ராமகிருஷ்ண மடம் ஒன்றை நிறுவ, அவரது சகோதரச் சீடர் ஒருவரை அனுப்பியருள வேண்டும் என சில பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். பக்தியிலும் இறைவழிபாட்டிலும் தியானத்திலும் ஈடற்றவரான ஒருவரை அனுப்பிவைப்பதாக வாக்குக் கொடுத்தார். கல்கத்தா திரும்பிய சில நாட்களில், சென்னை சென்று குருதேவர் பெயரால் ஒரு மடத்தை ஏற்படுத்தும்படி ராமகிருஷ்ணானந்தரிடம் விவேகானந்தர் கூறினார். இதை குருதேவரின் ஆணையாக ஏற்று, விவேகானந்தரின் சீடரான சதானந்தருடன் 1897 மார்ச் மாத இறுதியில் சென்னை பயணமானார். சென்னையில் இராமகிருஷ்ண மடம் நிறுவுதல்சென்னை தங்கசாலைத் தெருவில் இருந்த ஆரிய சங்கத்தின் தொடக்க சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டார். இளைஞர்களுக்கான சமயக்கல்வியின் முக்கியத்துவம் குறித்து அங்கு ஆற்றிய உரைதான் இவரது முதல் நிகழ்ச்சி. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் அதையடுத்து, புறநகர்ப்பகுதிகளிலும் இவரது வகுப்புகள் தொடர்ந்தன. குதிரை வண்டியில் (ஜட்கா) செல்வதற்குக்கூட காசு இல்லாத நிலை போன்ற எத்தனையோ சிரமங்களுக்கு இடையேயும், வகுப்பு ஆரம்பிக்க ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக தமது இருக்கையில் அமர்ந்துவிடுவார். 1898ல் ராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழாவை சென்னையில் முதல் முறையாகக் கொண்டாடினார். இவரது முயற்சிகளின் பலனாக 6 நகரங்களில் விவேகானந்த சங்கங்கள் தொடங்கப்பட்டன. சென்னை வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தமது பணிகளுக்காக நிலையான ஒரு இடம் தேவை எனக் கருதி அதற்கான முனைப்புகளில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் முதலான பகுதிகளில் சில அன்பர்களுடன் வீடு வீடாகச் சென்று நன்கொடை திரட்டினார்.1,700 ரூபாய் வசூலிக்க 2 ஆண்டுகள் ஆயின. கட்டுமானப் பணிகள் எதையும் ஆரம்பிக்க முடியவில்லை. ஆனாலும் காலம் கனிந்தது. மயிலாப்பூர் ப்சாடீஸ் சாலையில் இருந்த சிறிய நிலப்பகுதியை அகுல கொண்டைய செட்டியார் மடத்திற்காக மனமுவந்து வழங்கினார். நன்கொடையாகக் கிடைத்திருந்த சொற்பத் தொகையுடன் வேலை தொடங்கியது. 55ஆயிரம் ரூபாய் செலவில் கட்டம் கட்டி முடிக்கப்பட்டது. 1907 நவம்பர் 17 ஞாயிறன்று சுவாமிகள் மயிலாப்பூர் மடத்தில் குடிபுகுந்தார். பேலுர் மடத்தின் கிளையாக முதன் முதலில் துவக்கப்பட்டது சென்னை இராமகிருஷ்ண மடம் தான்.. இராமகிருஷ்ண மாணவர் இல்லம்ஒரு முறை கோவையில் பரவிய பிளேக் நோய் ஏராளமானோரை பலி கொண்டது. ஒரு குடும்பத்தில் ஓரிரு குழந்தைகள் தவிர அனைவரும் மாண்டனர். உள்ளம் நொந்த சுவாமிகள் அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். இப்படிப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்து அவர்களுக்கு கல்வியும் போதிப்பதற்கான திட்டங்களை வகுத்தார். இதையடுத்து, 7 மாணவர்களுடன் மயிலாப்பூரில் இராமகிருஷ்ண மாணவர் இல்லம் 1905 பிப்ரவரி 17 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இன்று இது ராமகிருஷ்ண மிஷனின் முக்கியமான மாணவர் இல்லமாக வளர்ச்சியடைந்துள்ளது. 1903ல் பெங்களுருக்கும் அடுத்த ஆண்டில் திருவனந்தபுரத்திற்கும் சென்று வேதாந்தப் பிரசாரம் செய்தார். பல கட்ட தொடர் முயற்சிகளையடுத்து அங்கு ராமகிருஷ்ண மடம் ஆரம்பிக்கப்பட்டது. 1905-ல் ரங்கூனில் நடைபெற்ற குருதேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டார். பவுத்த நாடான பர்மாவுக்கு (மியான்மர்) முதன் முதலில் ராமகிருஷ்ணரின் அருள்மொழிகளைக் கொண்டு சென்றவரும் இவரே. நூல்கள்விவேகானந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய சன்னியாசி கீதம் என்ற பாடலை வங்க மொழியில் செய்யுள் நடையில் சுவைபட மொழிபெயர்த்தார். வங்கத்தின் அருட்கொடையான குருதேவரின் பெருமைகளை தென்னகத்தில் பரப்பிய சுவாமிகள், தமிழகத்தின் அருட்பொக்கிஷமான ராமானுஜரின் வரலாற்றை வங்க மக்களிடம் கொண்டு சேர்த்தார். ராமகிருஷ்ண மிஷனின் வங்க மொழி இதழ் உத்போதனில் இதனை சுமார் 8 ஆண்டு காலம் தொடராக எழுதினார். பின்னர் இது நுலாக வெளிவந்தது. மறைவுசென்னை வந்த நாளில் இருந்து 14 ஆண்டுகள் அளவுக்கு மீறி அயராது பாடுபட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஓய்வுக்காவும் சிகிச்சைக்காவும் கல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார். சுவாமிகளின் உடல் நிலையை நேரில் அறிந்து வருவதற்காக கல்கத்தா சென்ற ஒரு அன்பரிடம், சென்னை திரும்பி வந்து ஆசாரியர்களின் பிறப்பிடமான தென்னகத்திலேயே தாம் இறைவனடி அடைய விரும்புவதாகத் தெரிவித்தார். ராமகிருஷணரின் தென்னகத் தூதர் எனப் போற்றப்படுவரும் தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கப் பள்ளிகளுக்கு வித்திட்டவருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தர், 1911 ஆகஸ்டு மாதம் 48வது வயதில் மகாசமாதியில் லயித்தார். இவரைப்பற்றி சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு என்ற நூல் சென்னை மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia