வளையஎக்சனால் (Cyclohexanol) (CH2)5CHOH என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இந்த மூலக்கூறானது வளையஎக்சேனின் ஒரு ஐதரசன் அணுவை அய்தராக்சைடு தொகுதியால் இடப்பெயர்வு செய்து கிடைக்கப்பெறும் சேர்மமாகும்.[4] இந்தச் சேர்மமானது, நீர் உறிஞ்சும் திறன் கொண்ட, கற்பூரத்தின் மணம் கொண்ட, துாய்மையான நிலையில் அறை வெப்பநிலைக்கு அருகாமையிலான வெப்பநிலையில் உருகக்கூடிய வெண்ணிறத் திண்மம் ஆகும். இது நைலான் தயாரிப்பில் முன்னோடி சேர்மமாக உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி கிலோகிராம்கள் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.[5]
தயாரிப்பு
வளையஎக்சனாலானது, வளையஎக்சேனை கோபால்ட்டை வினையூக்கியாகப் பயன்படுத்தி காற்றில் ஆக்சிசனேற்றம் செய்வதால் தயாரிக்கப்படுகிறது:
C6H12 + 1/2 O2 → C6H11OH
இந்த செயல்முறையானது, வளையஎக்சனோனையும் உடன் விளைபொருளாகத் தருகிறது. இந்தக் கலவையானது ("KA எண்ணெய்" அதாவது கீட்டோன்-ஆல்ககால் எண்ணெய் என்பதன் சுருக்கம்) அடிப்பிக் அமிலத் தயாரிப்பிற்கு நுழைநிலை மூலப்பொருளாக உள்ளது. ஆக்சிசனேற்றமானது தனிஉறுப்புக்களையும், ஐதரோபெராக்சைடின் இடைவினையையும் உள்ளடக்கியுள்ளது. C6H11O2H.
மாற்றாக, வளையஎக்சனாலானது, பீனாலின் ஐதரசனேற்ற வினை மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது:
C6H5OH + 3 H2 → C6H11OH
இந்தச் செயல்முறையானது வளையஎக்சனோனை உருவாக்கும் விதமாக மாற்றி அமைக்கப்படலாம்.
அடிப்படை வினைகள்
வளையஎக்சனால் ஒரு ஈரிணைய ஆல்ககாலால் எதிர்பார்க்கப்படும் வினைகளில் ஈடுபடுகின்றன. ஆக்சிசனேற்றமானது வளையஎக்சனோனைத் தருகிறது. தொழிற்துறையில், வளையஎக்சனோனானது கேப்ரோலாக்டத்தின் முன்னோடியான ஆக்சைமாக பெருமளவில் மாற்றப்படுகிறது. ஆய்வகத்தில் செய்யப்படும் சோதனை முயற்சியாக குரோமிக் அமிலத்துடனும் இந்த ஆக்சிசனேற்றமானது மேற்கொள்ளப்படலாம். எசுத்தராக்குதல் வினையானது இருவளையஎக்சைலடிப்பேட்டு மற்றும் இருவளையஎக்சைல்ப்தாலேட்டு போன்ற வணிகரீதியில் பயன்படக்கூடிய நெகிழியாக்கிகளைத் தருகிறது. அமில வினையூக்கிகள் முன்னிலையில் வெப்பப்படுத்துதல் மூலமாக வளையஎக்சனாலானது வளையஎக்சீனாக மாறுகிறது.[5]
அமைப்பு
வளையஎக்சனாலானது குறைந்தபட்சம் இரண்டு திண்ம நிலைகளையாவது கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்று நெகிழிப் படிக (Plastic Crystal) நிலையாகும்.
பயன்பாடுகள்
நைலானுடைய முன்னோடிச் சேர்மமாக இருப்பதால் பலபடித் தொழிற்துறையில் இச்சேர்மமானது ஒரு முக்கியமான நுழைநிலை மூலப்பொருளாக உள்ளது. மேலும் பல நெகிழியாக்கிகளைத் தயாரிக்கவும் இச்சேர்மம் பயன்படுகிறது. மிகச் சிறிய அளவில் இது ஒரு கரைப்பானாகப் பயன்படுகிறது.
பாதுகாப்பு
வளையஎக்சனாலானது ஓரளவு நச்சுத்தன்மை உடையது. இதன் ஆவியின் தொடக்கநிலை வரம்பு மதிப்பானது எட்டு மணி நேரத்திற்கு 50 ப.ஒ.ப (பத்து இலட்சத்தில் ஒரு பங்கு) ஆகும்.[5] இச்சேர்மத்தின் உயிர் வாழ்தல் அல்லது உடல்நலத்திற்கு உடனடித் தீங்கேற்படுத்தும் செறிவு மதிப்பானது (Immediately Dangerous to Life or Health) IDLH]] 400 ப.ஒ.ப (பத்து இலட்சத்தில் ஒரு பங்காக உள்ளது. விலங்குகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்பட்டு கண்டறியப்பட்ட தீவிர நச்சுத்தன்மை ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகளானது தரப்பட்டுள்ளது.[6] இச்சேர்மத்தின் புற்றுநோய்க்காரணியாக செயல்படக்கூடிய தன்மையும் சில ஆய்வுகளில் சோதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ஆய்வு மட்டும் எலிகளில் புற்றுநோய்க்காரணிக்கு துணை செய்யும் இணைக்காரணியாகக் கண்டறிந்துள்ளது.[7]
↑[1]பரணிடப்பட்டது 2013-01-05 at Archive.today Lucrecia Márquez-Rosado, Cristina Trejo-Solís 2, María del Pilar Cabrales-Romero, Evelia Arce-Popoca, Adolfo Sierra-Santoyo, Leticia Alemán-Lazarini, Samia Fatel-Fazenda, Claudia E. Carrasco-Legleu, Saúl Villa-Treviño, "Co-carcinogenic effect of cyclohexanol on the development of preneoplastic lesions in a rat hepatocarcinogenesis model", Molecular Carcinogenesis, Vol. 46, No. 7, Pages 524 - 533, March 2007.