வெள்ளீயம்(II) அசிட்டேட்டு (Tin(II) acetate) Sn(CH3COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளீயத்தின் அசிட்டேட்டு உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. 1822 ஆம் ஆண்டில் முதன் முதலாக வெள்ளீயம்(II) அசிட்டேட்டு கண்டறியப்பட்டது.[1]
தயாரிப்பு
வெள்ளீய்யம்(II) ஆக்சைடை உறைந்த அசிட்டிக் அமிலத்தில் கரைத்து குளிர்விக்கும் போது மஞ்சள் Sn(CH3COO)2·2CH3COOH உருவாகிறது. அசிட்டிக் அமிலத்தை குறைக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் வெப்பப்படுத்துவதன் மூலம் அகற்றலாம். மேலும் வெள்ளை நிற Sn(CH3COO)2 படிகங்களை பதங்கமாதல் மூலம் பெறலாம்.[1]
பண்புகள்
Sn(CH3COO)2·2CH3COOH ஆனது சாதாரண அழுத்தத்தின் கீழ் வெப்பமடையும் போது விகிதாச்சாரத்திற்கும் சிதைவிற்கும் உள்ளாகிறது. மேலும் வெள்ளீயம்(IV) ஆக்சைடு மற்றும் ஐதரசன் போன்ற பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. நீரற்ற Sn(CH3COO)2 இன் சிதைவு நீல-கருப்பு நிற வெள்ளீய(II) ஆக்சைடை கொடுக்கிறது.[2]
நீரற்ற Sn(CH3COO)2 நீரில் சிதைவடைகிறது. ஆனால் KSn(CH3COO2)3 மற்றும் Ba[Sn(CH3COO)3]2 போன்ற அணைவுச் சேர்மங்கள் கார உலோகம் அல்லது கார மண் உலோக அசிடேட்டுகளில் உருவாகலாம்.[3]