வேற்றிடச்சூல்
வேற்றிடச்சூல் (Ectopic pregnancy) என்பது, கருக்கட்டலின் பின்னர் கருவானது கருப்பை தவிர்ந்த வேறு இடங்களில் பதியும் சிக்கலான ஒரு நிலமையைக் குறிக்கும்[1][2]. வேற்றிடச்சூல் கருத்தரிப்பில், கருப்பையில் பதிவதற்குப் பதிலாக, கருவானது பலோப்பியன் குழாய், கருப்பை வாய், சூலகம் போன்ற இடங்களில் பதிந்து விடுவதுண்டு. இப்படியான நிலைமைகளில் அவசர சிகிச்சைப் பிரிவின் உதவியை நாடுவது உடனடித் தேவையாகும். சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிடின், தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும். பொதுவாக அவ்வாறு பதியும் கரு முழு வளர்ச்சியடைந்து குழந்தையாக உருவாவதில்லை. தவிரவும் இப்படியான நிலை தாய்க்கு மிகவும் அபாயமானதும், உயிருக்கே ஊறு விளைவிக்கவல்லதுமாகும். இதனால் உள்ளான குருதிப்பெருக்கு ஏற்படுதலே பொதுவான சிக்கலாகும். மிகவும் முன்னேற்றமடைந்த நோய் கண்டறியும் முறைகளாலேயே இதனை ஆரம்ப கருத்தரிப்புக் காலத்தில் கண்டறிய முடிகிறது. இருப்பினும், உலகில் கர்ப்பிணிப்பெண்ணில் ஏற்படும் சிக்கல்கள், இறப்பிற்கு இந்த வேற்றிடசூலும் ஒரு முக்கிய காரணியாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில் நிகழும் மொத்த கருத்தரிப்பு எண்ணிக்கையில், 1% - 2% மான கருத்தரிப்பு இவ்வாறு வேற்றிடச்சூல் நிலையிலுள்ளதாகவும், அதேவேளை மலட்டுத்தன்மை சிகிச்சை மூலம் ஏற்படும் கருத்தரிப்பில் இந்த வீதம் 4% வரை அதிகரிப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.[2] உலகில், கர்ப்பம் தரித்த பெண்களில், கருத்தரிப்புக் காலத்தின் முப்பருவ காலத்தின் முதலாம் பருவத்தில் நிகழும் இறப்புக்கு இந்த வெற்றிடச்சூலும் முக்கியமான ஒரு காரணியாக அமைகின்றது. கிட்டத்தட்ட, இம் முதலாம் முப்பருவ காலத்தில் நிகழும் 10% மான இறப்புக்கு இவ்வகையான வேற்றிடச்சூலே காரணமாகின்றது.[3] வளர்ந்த நாடுகளில் இவ்வகையான இறப்பைத் தவித்தலில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் வேளையில், வளர்ந்துவரும் நாடுகளில் பெரியளவில் முன்னேற்றம் நிகழவில்லை.[4] இவ்வகையான இறப்பு வளர்ந்த நாடுகளில் 0.1 - 0.3 % வரை நிகழ்வதாகவும், வளர்ந்துவரும் நாடுகளில் 1 - 3 % வரை நிகழ்வதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஒரு கணிப்புக் கூறுகின்றது.[5] முதன் முதலில் அறியப்பட்ட வேற்றிடச்சூல் விளக்கம் அல்-சராவி en:Al-Zahrawi என்னும் ஒரு அறுவைச்சிகிச்சை நிபுணரால், 11ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்டுள்ளது.[4] பொதுவாக பாலோப்பியன் குழாயிலேயே கரு பதியும். அதனை குழாய் கருத்தரிப்பு எனக் கூறுவர். வேற்றிடச்சூல் கருத்தரிப்பில் 90% மானவை பலோப்பியன் குழாயிலேயே நிகழ்வதாக அறியப்படுகின்றது.[3] இவ்வாறு பலோப்பியன் குழாயில் கருவானது பதியும்போது, குழாயின் உட்சுவரில் ஆழமாகச் செல்வதால் குருதிப்பெருக்கு ஏற்படும். இவ்வகை அளவற்ற குருதிப்பெருக்கினால், கர்ப்பிணிப் பெண்ணிற்கு அதிக ஆபத்து ஏற்படுவதுடன், சில சமயம் இறக்கவும் நேரிடலாம். இப்படியான அதிகரித்த குருதிப் பெருக்கானது, வேற்றிடச்சூலை ஆரம்ப நிலைகளிலேயே கண்டு பிடிக்கத் தவறுவதாலோ, அல்லது கருப்பை க்கு மிக அண்மையாக இருக்கும் குழாய்ப் பகுதியில் இவ்வாறான வேற்றிடச்சூல் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட ஒரு தமனியை பாதிப்பதாலோ ஏற்படலாம். நோய் அறிகுறிகளும், உணர்குறிகளும்![]() வேற்றிடச்சூல் நிகழ்ந்துள்ளவர்களில் 10% மானோருக்கு எந்தவித உணர்குறிகளும் இருப்பதில்லை என்பதுடன், மூன்றில் ஒரு பகுதியினருக்கு மருத்துவ அறிகுறிகளும் தெரிவதில்லை.[2] காரணம் அனேகமான வேற்றிடச்சூல் நிகழ்வுக்கான அறிகுறிகளில் தனித்தன்மை இருப்பதில்லை. அந்த அறிகுறிகள் இனப்பெருக்கத் தொகுதி சீர்கேடு, சிறுநீர்த்தொகுதி சீர்கேடு, இரையகக் குடலிய நோய்கள், குடல்வாலழற்சி சூலகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகள், கருச்சிதைவு, சூல்பை முறுக்கம், சிறுநீர்ப்பாதைத் தொற்று போன்ற நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளையே ஒத்திருக்கின்றது.[2] பொதுவாக மருத்துவ கண்டறிதலானது, இறுதியான மாதவிடாய் நாளிலிருந்து 4 - 8 கிழமைகளில் (சராசரியாக 7.2 கிழமைகளில்) நிகழ்கின்றது. நவீன கண்டறிதல் முறைகள் இலகுவில் கிடைக்காத சமூகத்தில் இந்தக் கண்டறிதல் பிந்தியே நிகழ்கின்றது. பொதுவாக வயிற்று வலி, யோனியூடான குருதிப்பெருக்கு என்பன காணப்படும்.[6] 50% த்திற்கும் குறைவானவர்களிலேயே இவ்விரு அறிகுறிகளும் ஒன்றாகக் காணப்படும்.[6] வலியானது மிகவும் கூர்மையானதாகவோ, அல்லது மந்தமானதாகவோ அல்லது பிடிப்புப் போன்றதாகவோ இருக்கலாம். வயிற்றினுள்ளே குருதிப்பெருக்கு ஏற்படுமாயின், வலியானது தோள்பகுதியிலும் காணப்படலாம்.[6] தீவிரமான குருதிப்பெருக்கு ஏற்படுமாயின் இதயத் துடிப்பு மிகைப்பு, மயக்கம், அதிர்ச்சி என்பன ஏற்படும்.[2][6] மிக அரிதான சமயங்கள் தவிர, ஏனைய நிகழ்வுகளில் முதிர்கரு பிழைப்பதில்லை.[7] சடுதியாக ஏற்படும் கீழ் வயிற்று வலி, இடுப்பு வலி, இளகிய கருப்பை வாய் போன்றவற்றுடன், மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (en:hCG) அளவில் ஏற்படும் அதிகரிப்பு, உடலின் உள்ளே நிகழும் குருதிப்பெருக்கு என்பன உணர்குறி மற்றும் அறிகுறிகளாகக் காணப்படும்.[6] மீயொலி நோட்டம் செய்ய முடியாத நிலை, அல்லது மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கியை அளவீடு செய்ய முடியாத நிலை இருக்குமாயின், அளவுக்கதிகமான குருதிப்பெருக்கு, அந்த நிலையைக் கருச்சிதைவு எனத் தவறாகக் கண்டறியப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும்.[2] குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பன வேற்றிடச்சூல் நிலையில் மிக அரிதாகவே ஏற்படும்.[2] கரு வளர்வதற்கேற்ற சூழ்நிலை இல்லாத இடங்களில் இருப்பதனால், அந்தப் பகுதிகளில் கிழிவுகள் ஏற்பட்டு உடலில் உள்ளான குருதிப்பெருக்கு நிகழ்ந்து, அதுவே அதிர்ச்சி, இறப்புக்குக் காரணமாகிவிடும். காரணிகளும், இடர்களும்
இடுப்பு அழற்சி நோய், புகையிலை பிடித்தல் முன்னரே குழாய் அறுவைச் சிகிச்சை செய்திருத்தல், மலட்டுத்தன்மை பிரச்சனை இருந்திருத்தல், மலட்டுத்தன்மை சிகிச்சைக்கு உட்பட்டிருத்தல் போன்றன இவ்வகையான வேற்றிடச்சூல் நிலை உருவாவதற்கான சீழிடர்களாகக் கொள்ளப்படுகின்றன.[3] முன்னரே ஒரு தடவை வேற்றிடச்சூல் நிலை ஏற்பட்டவர்களில் மீண்டும் இதே நிலை தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.[3] மேலும் குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனமாகிய en:Intrauterine device பயன்படுத்தியிருத்தல், en:Diethylstilbestrol மருந்து பயன்படுத்தியிருத்தல், கருப்பையை விரிவாக்கிச் சுரண்டி எடுக்கும் செயல்முறை (en:Dilation and curettage போன்ற கருப்பை அறுவைச் சிகிச்சை செய்திருத்தல், இடமகல் கருப்பை அகப்படலம் காணப்படல், குடும்பக் கட்டுப்பாட்டின் முறையில் ஒன்றான குழாயைக் கவ்விப்பிடித்து வைத்திருக்கும் சிகிச்சை (en:Tubal ligation) செய்திருத்தல் போன்றனவும் காரணிகளாகக் கருதப்படுகின்றன.[8][9] முன்னர் கருக்கலைப்பு செய்யப்பட்டிருத்தல் சூழிடரை அதிகரிப்பதாகக் கொள்ளப்படவில்லை.[10] இவ்வகையான காரணிகள் சீழிடர்கள் இருந்தாலும், மூன்றில் ஒரு பங்கினர்[11] அல்லது அரைப் பங்கினரில்[12] எந்தவொரு சூழிடரையும் சரியாகக் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. நோய் கண்டறிதல்கருத்தரிப்புப் பரிசோதனையில் ஒரு பெண் கருத்தரிப்புக்கு உட்பட்டுள்ளார் என்று கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணுக்கு வயிற்று வலி மற்றும் குருதிப்பெருக்கு இருக்குமானால், அவருக்கு வேற்றிடச்சூல் கொள்ளப்பட்ட நிலையில் இருக்கின்றாரா என்பது அறியப்பட வேண்டும்.[6] யோனி ஊடான மீயொலி வரைவுயோனி ஊடான மீயொலி வரைவு (en:Vaginal ultrasonography) பாலோப்பியன் குழாயில் முதிர்கருவின் இதயத்தைக் காட்டுமாயின், வேற்றிடச்சூலை உறுதிப்படுத்தலாம்.
மீயொலி வரைவும், மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி அளவீடும்கருப்பையினுள்ளான கருத்தரிப்பு மீயொலி நோட்டத்தில் தெளிவாகத் தெரியாவிட்டால், மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (β-hCG) அளவீடு வெற்றிடச்சூலை கண்டறிவதில் உதவும். ஏனைய கண்டறிதல் முறைகள்லப்பிரச்கொப்பி, en:Culdocentesis, புரோஜெஸ்தரோன் en:Progesterone அளவீடு, Inhibin A அளவீடு, விரிவாக்கிச் சுரண்டி எடுக்கும் செயல்முறை en:Dilation and curettage போன்றன வேறு சில கண்டறியும் முறைகளாகும்.[2] தடுக்கும் முறையும், சிகிச்சையும்சூழிடர்கள் மற்றும் காரணிகளைத் தடுப்பதன் மூலம் வேற்றிடச்சூலைத் தவிர்க்கலாம். கிளமிடியா போன்ற நோய்க்காரணிகள் மூலம் தொற்றுநோய் ஏற்படாமல் தவிர்த்துக்கொள்ளலாம் அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பின் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.[4] சில வேற்றிடச்சூல்கள், தாமாகவே சீர்செய்யப்பட்டுவிடும் என்று கருதினும், 2014 வரையில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.[3] அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றல் முக்கியமான ஒரு சிகிச்சையாக இருக்கின்றது. அதற்கு இணையாக மெதாரெக்சேற்று (en:Methotrexate) என்ற மருந்துப் பயன்பாடும் அறியப்படுகின்றது.[3] முக்கியமாக மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) குறைவாக இருக்கும் சூழலில் இந்த மருந்து நன்றாகத் தொழிற்படுகின்றது.[3] ஆனாலும், குழாய் கிழிவு ஏற்பட்டிருந்தாலோ, இதயத் துடிப்பு இறப்புக்கான அறிகுறியைக் காட்டினாலோ, ஒருவரின் உயிராதாரமான அறிகுறிகளில் (en:Vital signs) நிலையற்ற தன்மை தோன்றினாலோ அறிவைச் சிகிச்சை செய்யப்படுவதே பரிந்துரைக்கப்படுகின்றது.[3] பையூடுருவி நோக்கி அல்லது en:Laparotomy அறுவைச் சிக்கிச்சையே செய்யப்படுகின்றன.[2] பொதுவாக இந்த சிகிச்சை முறைகள் நல்ல பயனையே தருகின்றன.[3] அடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia