தகைவிலான் அல்லது தகைவிலாங் குருவி (Barn Swallow - Hirundo rustica) இவ்வகை பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.[2]
உடல் தோற்றம்
ஊர்க்குருவியின் அளவுடையது[3]; 18 செ.மீ நீளமுள்ளது.[4] மேல் சிறகுத்தொகுதி பளபளப்பான அடர்நீல நிறமும் செம்பழுப்புக் கழுத்தும் வெண்ணிற அடிப்பகுதியும் கொண்டு பிளவுண்ட வாலும் உடையது; பறக்கும் போது அடிப்பகுதியை நோக்கினால் வாலில் கொடி போன்று வெண்புள்ளிகள் தென்படும்.[5]
துணையினங்கள்
தமிழ்நாட்டில் காணப்படும் Hirundo rustica gutturalis[6] என்ற தகைவிலான் இமயமலைத் தொடரில் இனப்பெருக்கம் செய்யும் கிழக்குத் தகைவிலான் துணையினமாகும். இந்தியாவிற்கு வரும் இன்னொரு துணையினமான (Hirundo rustica tytleri) [7] என்ற டைட்லர் தகைவிலான் வங்காளம், அசாம் ஆகிய இடங்களில் காணப்படும்.[3]
இந்த பறவை மதுரைப்பகுதிக்கு மழைக்காலத்திற்கு முந்தியே வரத்துவங்குகின்றன. இதன் வலசை அதிகமாக இருந்தால் அந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[8]
தகைவிலானில் பொதுவாக ஆறு துணையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:
H. r. transitiva 1910 இல் எர்ன்சுட் ஆர்டெர்ட்டால் விவரிக்கப்பட்டது. இது தெற்கு துருக்கியில் இருந்து இசுரேல் வரை மத்திய கிழக்கில் இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சில பறவைகள் குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து வசிக்கின்றன.[9] இவற்றின் வருடாந்திர வலசையின்போது 11,660 கி.மீ. (7,250 மைல்) தொலைவு வரை பயணிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[10]
H. r. savignii, இது எகிப்தில் வாழும் துணையினம் ஆகும். இது 1817 இல் ஜேம்ஸ் ஸ்டீபன்சால் விவரிக்கப்பட்டது. பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் மேரி ஜூல்ஸ் சீசர் சாவிக்னியின் நினைவாக பெயரிடப்பட்டது.[11]
கிழக்கத்திய தகைவிலான்H. r. gutturalis இந்தத் துணையினத்தை 1786 இல் ஜியோவானி அன்டோனியோ ஸ்கோபோலி விவரித்தார்.[12] நடு மற்றும் கிழக்கு இமயமலையில் இனப்பெருக்கம் செய்யும் தகைவிலான்கள் இந்த கிளையினத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.[13] இருப்பினும் இந்த துணையினத்தின் முதன்மை இனப்பெருக்கமானது யப்பானிலும், கொரியாவிலும் நடக்கிறது. கிழக்காசியவில் இனப்பெருக்கம் ஆகும் பறவைகள் வெப்பமண்டல ஆசியா முழுவதும் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கைக்கும்,[14] கிழக்கே இந்தோனேசியா மற்றும் நியூ கினி வரை குளிர்காலத்தில் வலசை போகின்றன.
H. r. tytleri இது முதன்முதலில் 1783 இல் தாமஸ் சி. ஜெர்டனால் விவரிக்கபட்டது. இதற்கு பிரிட்த்தானிய படைவீரரும், இயற்கை ஆர்வலரும், ஒளிப்படக் கலைஞருமான ராபர்ட் கிறிஸ்டோபர் டைட்லரின் நினைவாக பெயரிடப்பட்டது.[12] இது மத்திய சைபீரியாவின் தெற்கிலிருந்து வடக்கு மங்கோலியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர்காலத்தில் கிழக்கு வங்காளத்திலிருந்து தாய்லாந்து மற்றும் மலேசியா வரையிலும் வலசை போகிறது.[9]
H. r. erythrogaster இதை 1783 இல் பீட்டர் போடாவர்ட் விவரித்தார்.[12] இது வட அமெரிக்கா முழுவதும், அலாஸ்கா முதல் தெற்கு மெக்சிகோ வரை இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் சிறிய அண்டிலிசு, கோஸ்டாரிகா, பனாமா மற்றும் தென் அமெரிக்கா வரை குளிர்காலம் வரை வலசை போகிறது.[15]H. r. erythrogaster அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில்.
கள இயல்புகள்
ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரத்தொடங்கும் தகைவிலான் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் தம் இனப்பெருக்க உறைவிடங்களான இமயமலைத் தொடருக்கு வலசை போகும். மாலை வேளைகளில் பெருந்திரளாக இவற்றைக் காணலாம். நாணல் கதிர்கள் நிறைந்த ஏரிகள், வயல்கள் ஆகிய இடங்களில் அங்கும் இங்குமாக வேகமாகப் பறந்தபடியே பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.[3]
↑"Bird ringing across the world". EURING Newsletter — Volume 1, November 1996. Euring. Archived from the original on 3 December 2007. Retrieved 1 December 2007.