ஆடவந்த தெய்வம் |
---|
 திரைப்பட சுவரொட்டி |
இயக்கம் | பி. நீலகண்டன் |
---|
தயாரிப்பு | டபிள்யு. எம். சிவகுருநாதன் |
---|
கதை | விருதை இராமசுவாமி குருசுவாமி கே. சோமன் |
---|
மூலக்கதை | எல். ஆர். வி. எழுதிய கலீர் கலீர் நாவல் |
---|
திரைக்கதை | இரா. சண்முகம் |
---|
இசை | கே. வி. மகாதேவன் |
---|
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் ஈ. வி. சரோஜா எம். ஆர். ராதா அஞ்சலிதேவி |
---|
ஒளிப்பதிவு | ஜி. துரை |
---|
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
---|
கலையகம் | மெஜெஸ்டிக் ஸ்டூடியோஸ் |
---|
விநியோகம் | இந்திரா ஃபிலிம்ஸ் |
---|
வெளியீடு | ஏப்ரல் 1, 1960 (1960-04-01) (இந்தியா) |
---|
ஓட்டம் | 160 நிமி. |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
ஆடவந்த தெய்வம் 1960 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், ஈ. வி. சரோஜா, எம். ஆர். ராதா, அஞ்சலிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.
திரைக்கதை
இசை, நடனம் போன்ற நுண்கலைகளில் விருப்பமுடையவனான ஆனந்தன் மருதூர் மிட்டாதார்.
பைரவி பூஞ்சோலை கிராமத்துத் தெரு நடனக்காரி. எதிர்பாராத சந்திப்பால் இருவரிடையே காதல் மலர்கிறது.
ஆனந்தனின் தாய் சரஸ்வதி தன் அண்ணன் சிங்காரம் பிள்ளையின் மகள் கல்யாணியை ஆனந்தனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணியிருக்கிறாள்.
மலையப்பன் ஒரு தபுதாரன் (தாரமிழந்தவன்). அவனுக்குக் கல்யாணி மீது ஒரு கண்.
ஒரு நாள் கல்யாணி நடனமாடுவதைக் கண்ட ஆனந்தன் அவளைப் பாராட்ட, கல்யாணி ஆனந்தன் தன்னை விரும்புவதாக நினைக்கிறாள்.
சரஸ்வதி ஊரில் இல்லாத நேரத்தில் மலையப்பன் சதி செய்து சிங்காரத்தை ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறான்.
தந்தையை மீட்பதற்காகக் கல்யாணி ஆனந்தன் நடத்தும் நடனப் போட்டியில் கலந்து கொள்கிறாள். மலையப்பனின் சூழ்ச்சியால் மேடையில் உடைந்த கண்ணாடித்துண்டுகள் தூவப்படுகின்றன. கல்யாணி ஆட முடியாமல் மயங்கி விழ, அதைப் பார்த்த ஆனந்தன் அதிர்ச்சியால் பைத்தியமாகிறான்.
மலையப்பன் கல்யாணியைக் கடத்திக் கொண்டுபோகிறான். ஆனால் அவள் தப்பி விடுகிறாள். தப்பியவள் பைரவியிடம் சென்றடைகிறாள். பைரவியுடன் தங்கியிருக்கும்போது தனக்குத் தெரிந்த நடனங்களை பைரவிக்குக் கற்றுக் கொடுக்கிறாள்.
கல்யாணி ஆனந்தனுக்கு ஒரு கடிதம் எழுத, அக்கடிதம் மலையப்பன் கையில் சிக்குகிறது. அவள் இருக்குமிடத்தை அறிந்து கொண்ட மலையப்பன் கல்யாணியைப் பிடித்து வர ஆட்களை அனுப்புகிறான். அவர்கள் தவறுதலாக பைரவியைப் பிடித்து வருகின்றனர்.
பைரவி ஆனந்தனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவனைக் குணப்படுத்த பாடுபடுகிறாள். கல்யாணி கற்றுக்கொடுத்த ஒரு நடனத்தை பைரவி ஆட ஆனந்தனுக்குப் பைத்தியம் தெளிகிறது.
ஆனந்தனுக்குப் பைத்தியம் என அறிந்த கல்யாணி மருதூருக்கு வருகிறாள். ஆனந்தனும் பைரவியும் காதலர்கள் என அறிகிறாள். அவர்கள் இருவரையும் மலையப்பன் தீர்த்துக் கட்ட திட்டமிடுவதை அறிந்து, அவர்களைக் காப்பாற்ற சமையற்காரியாக வேடம் போட்டு அவர்களுடன் தங்குகிறாள்.
பைரவி ஆனந்தனை அழைத்துக்கொண்டு பூஞ்சோலை கிராமத்துக்கு வருகிறாள். கல்யாணியின் துணி மூட்டைக்குள் அவள் ஆனந்தனுக்கு எழுதி வைத்திருந்த காதல் கடிதத்தை பைரவி கண்டு ஆனந்தனை சந்தேகிக்கிறாள். கல்யாணியை கலைத்தெய்வம் என்றும், அவளைத்தான் ஒருபோதும் காதலித்ததில்லை என்றும் ஆனந்தன் கூறுகிறான். மாறுவேடத்தில் இருக்கும் கல்யாணி இதைக் கேட்டு வேதனைப்படுகிறாள். அதே நேரம், ஜெயிலில் அவள் தகப்பன் இறந்துவிட்டதாகச் சேதி வருகிறது.
இந்தச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சமையற்காரி வேடத்தில் இருப்பது கல்யாணிதான் என மலையப்பனுக்கு தெரியச் செய்து விடுகிறது. அவனிடமிருந்து தப்பி தன் வாழ்வை முடித்துக் கொள்ள கல்யாணி ஓடுகிறாள்.
அதே சமயம் பைரவியும் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் ஓடி வருகிறாள். அதைக் கண்ட கல்யாணி அவளைத் தடுத்து ஆனந்தனுக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பதற்காக மலையப்பனைத் தான் திருமணம் செய்வதாகச் சொல்கிறாள். ஆனந்தன் பைரவி திருமணம் நடக்கிறது. ஆனால் மலையப்பன் கல்யாணி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, கல்யாணி விஷமருந்தி உயிர் விடுகிறாள்.
ஆனந்தனும் பைரவியும் அவளைத் தெய்வமாக மதிக்கின்றனர்.
நடிகர்கள்
தயாரிப்புக் குழு
- இயக்குநர் = ப. நீலகண்டன்
- இசை = கே. வி. மகாதேவன்
- கலை = சையத் அகமது
- நிழற்படம் = ஆர். வேங்கடாச்சாரி
- பதனம் செய்தல் (Processing) = வி. ராமசாமி, கே. பரதன்
- படத்தொகுப்பு = ஆர். தேவராஜன்
- ஒளிப்பதிவு = ஜி. துரை
- ஒலிப்பதிவு = டி. எஸ். ரங்கசாமி
- கலையகம் = மெஜஸ்டிக்
- விளம்பரம் = அருணா அன் கோ
- நடனப்பயிற்சி = பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்பு விபரம்
இத் திரைப்படத்தின் கதை எழுத்தாளர் எல்லார்வி எழுதிய கலீர் கலீர் என்ற நாவலைத் தழுவி எழுதப்பட்டதாகும். மெஜஸ்டிக் ஸ்டூடியோ அதிபர் முத்துக்கருப்ப ரெட்டியாரின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை இந்திரா ஃபிலிம்ஸ் வெளியிட்டனர். மெஜஸ்டிக் ஸ்டூடியோவை பின்நாளில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே. எஸ். கோபாலகிருஷ்ணன் விலைக்கு வாங்கி கற்பகம் ஸ்டூடியோஸ் எனப் பெயரிட்டார்.
பாடல்கள்
இசையமைப்பு: கே. வி. மகாதேவன். பாடல்களை இயற்றியவர்: ஏ. மருதகாசி
மேற்கோள்கள்