ஆதியாகம காவியம்

ஆதியாகம காவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ச.சாமிமுத்து என்னும் கிறித்தவப் புலவர் படைத்துள்ளார். 2008இல் வெளியிடப்பட்ட இக்காவியம் விவிலியத்தின் முதல் நூலாகிய ஆதியாகமம் என்னும் தொடக்க நூலை அடிப்படையாகக் கொண்டு மரபுக் கவிதையில் உருவாக்கப்பட்டது ஆகும்.

காப்பியத்தின் ஆசிரியர்

ஆதியாகம காவியத்தைப் பாடிய ச.சாமிமுத்து திருச்சிராப்பள்ளி புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் துணை முதல்வராகவும் பணியாற்றியவர்.

காப்பியத்தின் பகுதிகள்

ஆதியாகம காவியம் விவிலிய நூலாகிய தொடக்க நூலைப் பின்பற்றி அதன் உள்ளடக்கத்தை முறையாக எடுத்துக்கூறும் வகையில் ஆறு பாகங்களையும் 33 படலங்களையும் 1444 பாடல்களையும் கொண்டுள்ளது. பெரும்பாலும் விருத்தப்பாக்களையும் சிறுபான்மை ஆசிரியப்பாக்களையும் கொண்ட இந்நூலின் பாகங்கள் பிரிவு கீழ்வருமாறு:

முதல் பாகம் -

இறைவன் இவ்வுலகைப் படைத்தது முதல் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவா இறைக்கட்டளையை மீறியதால் அடைந்த துன்பம் மற்றும் அதிதூதர் மிக்கேல் அவர்களைத் தேற்றுவதும் பேய்களைத் துரத்துவதும் ஆகிய நிகழ்வுகள் முதல் பாகத்தில் பாடப்பட்டுள்ளன.

இரண்டாம் பாகம் -

காயின் வரலாறு, இறைவன் நோவாவையும் நோவா குடும்பத்தினரையும் காத்துப் புதிய உலகை உருவாக்கல், பாபேல் கோபுரம் கட்டப்படல் ஆகியவை இரண்டாம் பாகத்தில் உள்ளன.

மூன்றாம் பாகம் -

ஆபிரகாம் வரலாறு இப்பாகத்தில் உள்ளது.

நான்காம் பாகம் -

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு இரேபேக்காவை மணந்தது முதல் யாக்கோபுக்கு கடவுள் பெத்தேலில் ஆசி வழங்குதல் வரை நான்காம் பாகத்தில் அடங்கியுள்ளன.

ஐந்தாம் பாகம் -

யாக்கோபுவின் அருமை மகனான யோசேப்பு வணிகரிடம் விற்கப்படுவது முதல் எகிப்தின் ஆளுநராக செயல்படுதல் வரையிலான நிகழ்வுகள் ஐந்தாம் பாகத்தில் விவரிக்கப்படுகின்றன.

ஆறாம் பாகம் -

யோசேப்பின் உடன்பிறப்புகள் தானியம் வாங்க எகிப்து செல்லுதல் முதல், யாக்கோபு கானான் நாட்டில் அடக்கம் செய்யப்படுதல், 110ஆவது வயதில் யோசேப்பு மரணமடைதல், இறைவனின் பேரன்பைப் போற்றுதல் ஆகியவை ஆறாம் பாகத்தில் உள்ளன.

ஏதேன் தோட்டத்தின் எழில்

கடவுள் படைத்த பல்வகைப் படைப்புகளும் படைத்தவனின் புகழ்பாடி மகிழும் காட்சியை ஆசிரியர் விவரிக்கின்றார்:

மணமணக்கும் கவைகுலவு பழங்கள் எல்லாம்
     மகிழ்ந்துலவும் பறவையினம் கவர்ந்திழுக்கும்!
குணமளிக்கும் செடிகொடிகள் படர்ந்து அடர்ந்தே குளிர்நிழலில்
     உறவுடனே படுத்து உறங்கும்!
இணரவிழ்ந்தே நாறுகின்ற மலர்கள் எல்லாம் எழிலணிந்த
     கோலத்தால் இசைந்தே பாடும்!
உணர்வடர்ந்த உயிர்கள் எல்லாம் படைத்தோன் உள்ளி
     ஒருங்கிணைந்தே புகழ்போற்றி உவந்தே பாடும்!

ஆதாரம்

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya