இயேசுநாதர் சரிதை (நூல்)

இயேசுநாதர் சரிதை (Yesunathar sarithai) என்பது சுவாமி சுத்தானந்த பாரதியார் என்னும் அறிஞரால் 1926 ஆம் ஆண்டு பாடப்பட்ட கிறித்தவத் தமிழ்க் காப்பியம் ஆகும்.[1] இந்நூலை சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்நூலை ஒரு சிறுகாவியம் என்று கவிஞர் முன்னுரையில் கூறுகிறார்.

நூல் சிறப்புகள்

பெரியோர் கதைகளைப் படித்து சனங்களுக்கு சமரசமும் ஆத்மசுத்தியும் பிறக்க வேண்டும் என்பதே என் இலக்கிய முயற்சிகளின் நோக்கம் என்று நூலாசிரியர் தம் குறிக்கோளைக் குறிப்பிடுகிறார்.

இயேசு நாதர் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து மக்களுக்கு மீட்புப் பற்றிய போதனையை வழங்கி, சிலுவையில் உயிர்துறந்து, சாவினின்று உயிர்பெற்றெழுந்தது வரையிலான நிகழ்ச்சிகளை இக்குறுங்காவியம் பாடுகிறது.

இலக்கிய நயம்

இயேசுவின் அன்னை மரியாவின் மாண்பினைக் கவிஞர் இவ்வாறு பாடுகிறார்:

அணிக்கு அணிசெய்யும் செவ்வி அகத்திலும் புறத்தும் தூயள்
கணிக்கரும் கற்பின் மிக்காள் கருணையின் அன்னை தெய்வப்
பணிக்கு அணியாக வந்திப் பாரினைக் காத்தோன் அன்னாள்
மணிவயிற்று உதித்தான் என்னில் மாண்புஇதில் பிறிதுமுண்டோ.

மன்னரும் பாக்கியத்தாள் பரிவுடைத் திருவின் மிக்காள்
அன்னையாம் மரியாள் அன்பின் ஆழியாம் உளத்தாள் செய்ய
கன்னியர் திலகமானாள் கடவுளம் குணத்தாள் அந்த
அன்னத்தின் அகட்டில் அன்றோ ஆண்டவன் கருவளர்ந்தான்.

கிறித்தவ மறையைச் சாராதவராயினும், சுத்தானந்த பாரதியார் அன்னை மரியாவின் புகழை இத்துணை உயர்வாகப் போற்றியுரைப்பது கருதத்தக்கது. மரியா எழில்முகம் கொண்டவர், அகமும் புறமும் தூயவர், கற்பில் உயர்ந்தவர், கருணை வடிவினர், தெய்வப் பணிக்கு அணியாக வந்தவர், பாக்கியம் பெற்றவர், திருவுடையார், அன்பின் ஆழி, கன்னியர் திலகம், கடவுள் குணம் கொண்டவர் என்றெல்லாம் கவிஞர் புகழ்கின்றார்.

இயேசுவுக்கு யூத வீரர்கள் இழைத்த கொடுமையைக் கண்டு நெஞ்சுருகிப் பாடுகிறார் சுத்தானந்த பாரதியார்:

முண்முடி சூட்டினர் மூங்கில் ஈந்தனர்
புண்படு மேனியில் புனைந்து செவ்வுடை
எண்கடந்து ஏசினர் இன்னல் கைத்திட
மண்படு மருளினர் மமதைக்கு ஆளரே.

துப்பினர் திருமுகம் தூய மேனியில்
தப்பினர் பிரம்பினால் தளரக் கைகளை
அப்பமாய் வீங்கியது ஐயன் மேனியே
அப்படு பாவிகள் அகந்தை வீங்கிற்றே.

குறுங்காப்பியமாக இயேசுநாதர் சரிதை பாடப்பட்டாலும் கூறவேண்டிய கருத்துகளைத் திட்பநுட்பத்துடன் விளக்கும் திறம் கொண்டதால் இந்நூல் விளங்குகிறது.

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya