ஆனந்த குமாரசுவாமி
ஆனந்த கெந்திஷ் முத்து குமாரசுவாமி (Ananda Kentish Muthu Coomaraswamy, 22 ஆகத்து 1877 – 9 செப்டம்பர் 1947), இலங்கை மீமெய்யியலாளரும் வரலாற்றாளரும் இந்தியக் கலையின் மெய்யியலாளரும் ஆவார். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர், ஆய்வாளர், நூலாசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இவர் இந்தியப் பண்பாட்டைக்[4] குறிப்பாக "பழங்கால இந்தியக் கலையை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதற்குப் பெரிதும் காரணமானவர்" என அவர் விவரிக்கப்படுகிறார்.[5] வாழ்க்கைக் குறிப்புஆனந்த குமாரசுவாமி, இலங்கையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் பொன்னம்பலம்-குமாரசுவாமி குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சட்டமன்ற உறுப்பினரும் மெய்யியலாளருமான சர் முத்து குமாரசுவாமிக்கும் அவரது ஆங்கிலேய மனைவியான எலிசபெத் பீபிக்கும் மகனாக 1877 ஆகத்து 22 இல் பிறந்தார்.[6][7][8][9] தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் நகரைச் சேர்ந்தவர். ஆனந்தாவுக்கு அகவை இரண்டாக இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார், ஆனந்தா தனது குழந்தைப் பருவத்தையும் கல்வியின் பெரும்பகுதியையும் வெளிநாட்டில் கழித்தார்.[10] ஆனந்த குமாரசுவாமி தாயாருடன் 1979 ஏப்ரலில் இங்கிலாந்து சென்றார். அங்கு குளொசுடர்சயரில் வைக்கிளிஃப் கல்லூரியில் கல்வி பயின்றார். 1900 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று நிலவியல், தாவரவியலில் பட்டம் பெற்றார். 1902 சூன் 19 இல், குமாரசுவாமி ஒரு ஆங்கிலேயப் புகைப்படக் கலைஞரான எத்தெல் மேரி பார்ட்ரிட்ச் என்பவரை மணந்து, அவருடன் இலங்கை வந்தார். அவர்களது திருமணம் 1913 வரை நீடித்தது. ஆனந்த குமாரசுவாமி இடாய்ச்சு, பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம், சமக்கிருதம், பாளி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் சிறந்த புலமையுடையவராக விளங்கினார். 1902 இற்கும் 1906 இற்கும் இடையில் இலங்கையின் கனிமவியல் ஆய்வுக்காக குமாரசுவாமியின் செய்த களப்பணி, அவருக்கு அறிவியலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுத் தந்தது, இது இலங்கையின் நிலவியல் ஆய்வுத் துறையை உருவாக்கத் தூண்டியது.[11] இலங்கையில் இருந்தபோது, ஆனந்த குமாரசுவாமியும் எத்தெலும் இடைக்கால சிங்களக் கலையில் கூட்டாக ஆய்வை மேற்கொண்டனர். குமாரசுவாமி உரை எழுத, எத்தேல் புகைப்படங்களை வழங்கினார். இலங்கையில் அவரது பணி குமாரசுவாமியின் மேற்கத்தியவாத எதிர்ப்பு உணர்வுகளை தூண்டியது.[12] இவர்களின் மணமுறிவுக்குப் பிறகு, எத்தேல் இங்கிலாந்துக்குத் திரும்பி, அங்கு ஒரு பிரபலமான நெசவாளர் ஆனார், பின்னர் எழுத்தாளர் பிலிப் மைரெட் என்பவரை மணந்தார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணை மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார். இலங்கையில் சேவைஅந்தக் காலத்தில் விடுதலை (சுதேசிய) உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்தச் சங்கத்தை (1905) நிறுவினார். அதன் சார்பில் Ceylon National Review என்னும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் சேவையாற்றினார். 1906 ஆம் ஆண்டு சூன் நாலாம் நாள் முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்றார். அங்கு உரையாற்றும்போது "நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பினை உலகில் வேறெங்கும் காணமுடியாது....எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும் கைத்தொழிற்கல்வியையும் நாடுகின்றனர். இவை அவசியமானவையே! ஆனால் இவை எல்லாம் பண்பாடு என்னும் அடிப்படையிலிருந்து வரவேண்டும்..." எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் அவருக்கு வித்தியா விநோதன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.[13] கலைச் சேவை1907 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கலை முயற்சிகளில் ஈடுபட்டார். 1911 ஆம் ஆண்டில் அலகாபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்குப் பொறுப்பு வகித்தார். இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார். இந்தியக்கலைகளின் இறைமையை உலகிற்கு எடுத்துக் காட்டியசிறந்த தூதுவராகக் கருதப்படுபவர். இறைவனின் ஐந்தொழிலைப் (பஞ்சகிருத்தியத்தைப்) பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912-இல் 'சித்தாந்த தீபிகை'யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற இதழில் 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை எழுதினார்.[14] பொஸ்டனில் சேவை1917 முதல் ஐக்கிய அமெரிக்காவில் பொஸ்டன் (பாஸ்ட்டன்) நகரில் அமைந்திருந்த நுண்கலை அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். இங்கு அவர் டோனா லூசா (Dona Lusa) என்னும் ஆர்ஜெண்டீனா பெண்மணியைச் சந்தித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ராமா என்னும் பெயர் கொண்ட ஆண்குழந்தை பிறந்தது. ராமா பின்னர் இந்தியாவின் ஹரித்வாரில் உள்ள குருகுல (Gurukul) பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று அமெரிக்காவின் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில் வைத்தியராகப் பயிற்சி பெற்று அமெரிக்காவில் வைத்தியராகத் தொழிலாற்றியவர்.[15] ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் செப்டம்பர் 9 1947 இல் அமெரிக்காவில் பொஸ்டன் (பாஸ்ட்டன்) நகரில் காலமானார். வெளிவந்த நூல்கள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia