இருகிசு ஆற்று யுத்தம்
இருகிசு ஆற்று யுத்தம் என்பது குவாரசமியப் பேரரசு மற்றும் மங்கோலியப் பேரரசு ஆகியவற்றின் படைகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு யுத்தமாகும். இது 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்றது. இந்த யுத்ததைப் பற்றிப் பல பதிவுகள் உள்ள போதும் இது எந்த ஆண்டு நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. ஏனெனில் முக்கிய வரலாற்றாளர்கள் வேறுபட்ட ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர். நவீன வரலாற்றாளர்கள் 1209 அல்லது 1219 ஆகிய ஆண்டுகளை யுத்தம் நடந்த ஆண்டுகளாகக் கொடுக்கின்றனர்.[1] இந்தப் போருக்கான பின் புலங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் ஒத்துப் போகின்றன. எதிரிகளான மெர்கிடுகள் அல்லது தப்பித்து ஓடிய நைமர்களின் இளவரசனான குசலுகுவை காரா கிதை அரசமரபின் முந்தைய நிலப்பகுதிகளில் தாக்குவதற்காக ஒரு மங்கோலிய இராணுவத்தைச் சுபுதை, செபே மற்றும் ஒருவேளை சூச்சியின் தலைமையில் செங்கிஸ் கான் அனுப்பினார். குவாரசமிய பேரரசின் ஆட்சியாளரான ஷா முகம்மது தன் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிக்கு நெடுகில் பெரிய இராணுவங்கள் செயல்படுவதைப் பற்றிய செய்தியை அறிந்தார். அவர்களை எதிர்ப்பதற்காகப் புறப்பட்டார். மங்கோலியர்கள் தங்களது பணியை முடித்த பிறகு ஷாவால் வியப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். அமைதிப் பேச்சுகளுக்கு ஷா மறுத்தார். யுத்தத்தை ஆரம்பித்தார். இருபக்கமும் சரிசமமான வீரர்களைக் கொண்ட இரண்டு இராணுவங்களுக்கு இடையிலான ஆக்ரோசமான இந்தச் சண்டையானது அந்தி வரை நீடித்தது. இந்த யுத்தத்தில் பெரும்பாலும் மங்கோலியர்களின் கை ஓங்கியிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் வேறு யாருடனும் போர் புரியக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருந்ததால் இரகசியமாக இரவு நேரத்தில் தங்களது முகாம்களை அப்படியே விட்டுவிட்டு மங்கோலியர்கள் வெளியேறினர். மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்புக்கு முன்னர் இந்த யுத்தம் நடைபெற்றது. மங்கோலியர்கள் குவாரசமியப் பேரரசு மீது 1220-21இல் படையெடுத்தபோது, ஷா தாக்குதலில் கவனம் செலுத்தாமல் தன் நாட்டைத் தற்காத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்தியதற்கு, இந்த யுத்தத்தின்போது மங்கோலிய வீரர்கள் காட்டிய வீரமே ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காலமிடல்இந்த யுத்தத்தைப் பற்றி நான்கு தனித்தனி வரலாற்றாளர்கள் வெவ்வேறு அளவுகளில் விளக்கியுள்ளனர். ஆனால் அந்த நால்வருமே வெவ்வேறு ஆண்டுகளை இந்த யுத்தம் நடந்த ஆண்டாகக் குறிப்பிட்டுள்ளனர். அரபு வரலாற்றாளரான அலி இப்னு அல்-ஆதிர், 1218ஆம் ஆண்டு ஒற்றார் நகரில் மங்கோலிய வணிகக் குழு கொல்லப்பட்ட பிறகு இந்த யுத்தம் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.[2](பக்.238) ஆதிரின் காலத்திற்குக் கிட்டத்தட்ட சமமான காலத்தில் வாழ்ந்த நசாவி, ஆதிர் கூறியதை வெளிப்படையாகச் சரி செய்கிறார். அவர் இந்த யுத்தம் இசுலாமிய நாட்காட்டியின் 612ஆம் ஆண்டு அல்லது 1215-16இல் நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.[3] பிற்கால பாரசீக வரலாற்றாளரான ஜுஸ்ஜனி 615 (1218)ஆம் ஆண்டு இந்த யுத்தம் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.[4](பக்.267) அதே நேரத்தில் சுவய்னி 1218ஆம் ஆண்டின் இறுதியில் இந்த யுத்தத்திற்காக ஷா புறப்பட்டார் என்றும், இந்த யுத்தம் 1219ஆம் ஆண்டு நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.[5] இந்த யுத்தத்தைப் பற்றி குழப்பத்தை மேலும் அதிகரிக்க அனைத்து வரலாற்றாளர்களின் நூல்களும் வெவ்வேறுபட்ட அளவுகளில் தவறுகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, குசலுகு தோற்கடிக்கப்பட்ட பிறகு இந்த யுத்தம் நடைபெற்றதாக நசாவி கூறியுள்ளார். குசலுகு தோற்கடிக்கப்பட்ட நிகழ்வு 1218ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெறவில்லை. சுவய்னியின் நூல் இத்தகவலில் மாறுபடுகிறது. அவர் சுல்தான் 30 அக்டோபர் முதல் 30 திசம்பர் வரை "இளவேனிற்காலமாக இருந்ததால்" புகாரா நகரத்தில் இருந்தார் என்று கூறியுள்ளார். இதுவும் தவறானதாகும்.[6](பக்.365–366) பிற்கால வரலாற்றாளரான ரசீத்தல்தீன், மங்கோலியர்கள் மெர்கிடு பழங்குடியினருடன் போரிட்டத்தைத் தன் ஜமி அல்-தவரிக் நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும், மங்கோலியர்கள் குவாரசமியர்களுடன் சண்டையில் ஈடுபட்டதைப் பற்றிய இவரது காலமிடல் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. ஏனெனில் இவரது நூல் பல ஆண்டு நிகழ்வுகளை உள்ளடக்காமல் அப்படியே விட்டு விடுகிறது.[6](பக்.367) சில வரலாற்றாளர்கள் இந்த யுத்தம் 1209ஆம் ஆண்டு நடைபெற்றறது என முன்மொழிகின்றனர். மங்கோலியர்களின் இரகசிய வரலாறு, தளபதி சுபுதையின் எஞ்சியிருக்கும் சுயசரிதைகள் மற்றும் சுவய்னியின் நூலில் உள்ள பல்வேறு படையெடுப்புகளுக்கு இடையிலான ஒற்றுமை ஆகிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் சுபுதை மெர்கிடு கூட்டமைப்பைத் தோற்கடித்து சிறிது காலத்திலேயே இந்தச் சண்டை நடைபெற்றது என கூறுகின்றனர்.[7][8] பால் புயேல் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி, காரா கிதையிடம் அடிபணிந்தவராக இருந்த குசலுகு 1210ஆம் ஆண்டு சமர்கந்து நகரத்தைக் கைப்பற்றினார். இருகிசு ஆற்று யுத்தத்தில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்த யுத்தமானது முகம்மதுவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே இந்த நகரமானது கைப்பற்றப்படும் நிலைக்குச் சென்றது என அவர் கூறுகிறார்.[9](pp8–9) கிறித்தோபர் அட்வுட் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி, ஷா மற்றும் மங்கோலியர்கள் 1209/10ஆம் ஆண்டுகளில் சிர் தாரியா ஆற்றின் கழிமுகப்பகுதிகளில் தங்களது இராணுவத்தை வழிநடத்திக் கொண்டிருந்தனர். எனவே மேற்குறிப்பிட்ட ஆண்டான 1209 புவியியல் ரீதியாக ஏற்புடையதாக உள்ளது.;[10] எனினும் இது 1219ஆம் ஆண்டை விட வெகு சில ஆதாரங்களாலேயே ஆதரிக்கப்படுகிறது.[9](pp10–14, 24–26) ![]() மற்ற வரலாற்றாளர்கள் இந்த யுத்தமானது 1218/19ஆம் ஆண்டுகளில் நடைபெற்றறது எனக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஆதிர் மற்றும் சுவய்னி ஆகிய வரலாற்றாளர்களின் கருத்துகளை வழிமொழிகின்றனர். 1219ஆம் ஆண்டுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் ஷா முகமது மற்றும் செங்கிஸ் கான் ஆகியோர் இடையேயான உறவானது படிப்படியாக மோசமடைந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.[11][a] கார்ல் சுவெர்டுரப் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி, தன் சினமூட்டுகிற தூதரக நடத்தையானது மங்கோலியப் பதில் தாக்குதலில் முடியும் என்பதை ஷா ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மெர்கிடு இனத்தவர்கள் மற்றும் தனது எதிர்கால மங்கோலிய எதிரிகள் ஆகிய இருவரையுமே பலவீனப்படுத்த முயற்சித்தார்.[13] இப்பார்வையானது சுவய்னியின் நூலில் உள்ள ஒரு பகுதியால் ஆதரிக்கப்படுகிறது. அப்பகுதியில் சுவய்னி, "ஒரே கல்லில் இரண்டு பறவைகளையும் கொல்ல" ஷா விரும்பினார் என்று பதிவிட்டுள்ளார். இதன் பொருளானது, பகைமை கொள்ள அவர் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார் என்பதாகும்.[14] எனினும் இதை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. ஏனெனில், இகழ்ச்சிக்குள்ளாக்கப்பட்ட குசலுகு 1218ஆம் ஆண்டின் பிற்பாதியில் கொல்லப்பட்டபோது, செபே தற்கால ஆப்கானித்தானின் வகான் பகுதிக்கு அருகில் இருந்தார். ஆனால் இருகிசு ஆறானது சுமார் 1,600 கிலோமீட்டர்கள் வடக்கே தற்கால கசக்கஸ்தானில் ஓடுகிறது.[9](பக்.24) யுத்தம்இந்த யுத்தம் எந்த ஆண்டு நடைபெற்றிருந்தாலும், தன் நாட்டின் எல்லைக்கருகில் பெரிய இராணுவங்கள் செல்வதைப் பற்றிய செய்தியை அறிந்த ஷா தனக்கென ஒரு படையைத் தயார் செய்து அவர்களைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டார் என்பது மட்டும் உறுதி. மங்கோலியர்கள் தங்களது பழங்குடியின எதிரிகளைத் தோற்கடித்து ஒரு நாளுக்குப் பிறகு, இருகிசு ஆற்றை ஷா அடைந்தார் என்று சுவய்னி பதிவிட்டுள்ளார். [15] மேலும், மங்கோலியர்கள் பாதுகாப்பின்றி இருந்தபோது அவர்களை அடைந்தார் என்றும், எந்த உள்நாட்டுப் படைகளுடனும் சண்டையிடக் கூடாது என்று செங்கிஸ் கான் அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்ததன் காரணமாக, பாதுகாப்பாக முகம்மதுவின் நாட்டின் வழியே தங்களுக்கு வழிவிடுவதற்காகத் தாங்கள் போரில் கொள்ளையடித்த பொருட்களை ஷாவிடம் கொடுத்துவிட மங்கோலியர்கள் முயற்சித்தனர். எனினும் முகம்மது அதற்கு மறுத்தார். யுத்தம் நடத்த மங்கோலியர்களைக் கட்டாயப்படுத்தினார். மங்கோலிய முகாமைச் சுற்றி வளைத்தார்.[16] இரண்டு பக்கங்களிலும் எவ்வளவு வீரர்கள் இருந்தனர் என்பது அதிக விவாதத்திற்குரியதாக உள்ளது. மேலும், ஒவ்வொரு வரலாற்று நூலைப் பொருத்தும் இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது. நசாவி போன்ற வரலாற்றாளர்கள், சுல்தானிடம் 60,000 வீரர்களும், மங்கோலியர்களிடம் 20,000 வீரர்களும் இருந்தனர் என்று கூறுகின்றனர். குறைந்தது ஒரு நவீன வரலாற்றாளரான பிராங்கு மெக்குலின் இந்த எண்ணிக்கையை ஒப்புக்கொள்கிறார்.[17][18] லியோ டி கார்டாக் என்கிற வரலாற்றாளர், செபே இந்த யுத்தத்தில் பங்கெடுக்கவில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார். ஆனால் மங்கோலியர்கள் பக்கம் 20,000 வீரர்கள் மட்டுமே இருந்ததனர் என்பதை ஒப்புக்கொள்கிறார். அதே நேரத்தில், சுவெர்டுரப் என்கிற வரலாற்றாளர், இரண்டு பக்கங்களிலும் 5,000 முதல் 15,000 வீரர்கள் வரை மட்டுமே இருந்தனர் எனக் கூறுகிறார். எனினும் குவாரசமியப் படையில் இருந்த வீரர்களின் பலமானது மங்கோலியர்களை விட அதிகமானதாக இருந்திருக்க வேண்டுமென நம்புகிறார். உண்மையில் குவாரசமியர்கள் மங்கோலியர்களைவிட எண்ணிக்கையில் சற்றே கூடுதலாக இருந்திருக்கலாம்.[19] இந்த யுத்தத்தில் யார் யார் எந்தப் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினர் என்பதும் நூலைப் பொறுத்து வேறுபடுகிறது. இரண்டு ஆண்டுகளிலும் போர் நடைபெற்றதாகக் குறிப்பிடும் நிகழ்வுகளில், தளபதிகளாக ஷா மற்றும் சுபுதை இருந்துள்ளனர். 1219ஆம் ஆண்டைக் குறிப்பிடுகையில், வலப்பக்கப் பிரிவுகளைச் சலாலத்தீன் மற்றும் சூச்சி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். செபே இந்தப் போரில் பங்கெடுத்ததாகக் குறிப்பிடுபவர்கள், அவர் இடப்பக்கப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார் என்று குறிப்பிடுகின்றனர்.[20] இந்த யுத்தம் நடைபெற்ற போது, இரு பக்கங்களுக்கும் வெற்றி தோல்வியின்றி நடந்தது. இரண்டு வலப்பக்க பிரிவுகளும் தத்தமது எதிரிகளின் வலப்பக்கப் பிரிவுகளை முறியடிப்பதில் வெற்றி கண்டன.[b] சுவய்னி மற்றும் நசாவி ஆகியோரது நூல்களின்படி, மையப்பகுதியில் சிறிது நேரத்திற்கு ஷா தனித்து விடப்பட்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனினும், ஷாவின் வலது பிரிவின் ஒரு குதிரைப் படைத் தாக்குதலானது எதிரிகளைப் பின்வாங்கக் கட்டாயப்படுத்தியது. இப்பிரிவானது ஷாவின் மகன் சலாலத்தீனால் ஒருவேளை தலைமை தாங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[3][5] இரவு நேரம் வந்ததால் இந்த யுத்தமானது நிறுத்தப்பட்டது. அடுத்த நாள் சண்டை மீண்டும் தொடருமென ஷா நம்பினார். ஆனால், அடுத்த நாள் அதிகாலையில் தங்களது முகாம்களை அப்படியே விட்டுவிட்டு மங்கோலியர்கள் தாயகத்திற்குச் சென்றதை அறிந்தார்.[22] தங்களது முகாமில் தாங்கள் இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக நெருப்புகள் மற்றும் தீப்பந்தங்களை மங்கோலியர்கள் பற்ற வைத்திருந்தனர்.[9](பக்.16)[21] மற்ற விதங்களில் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத இந்தச் சிறு சண்டையானது, 1219ஆம் ஆண்டு மங்கோலியர்கள் குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்ததற்கு முன் இரு இராணுவங்களுக்கும் இடையில் முதன் முதலில் நடந்த ஒரு சண்டையாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த யுத்தத்தில் மங்கோலியப் படைகளின் வலு மற்றும் நெஞ்சுரமானது குவாரசமிய ஆட்சியாளரை கலக்கமுறச் செய்தது. அவர் இதனால் பயந்து கூட இருந்தார் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. [11] தான் சந்திக்கும் எவரிடமும் மங்கோலியர்கள் காட்டிய துணிச்சலைப் பற்றியே ஷா பேசிக் கொண்டிருந்தார். இதன் காரணமாகவே அவர் மங்கோலியர்கள் தன் நாட்டின் மீது படையெடுத்தபோது தெளிவான தற்காப்பு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார் என வாசிலி பார்ட்டோல்டு என்ற வரலாற்றாளர் குறிப்பிட ஆரம்பித்ததற்குப் பிறகு பல வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். .[8][6](பக்.372) குறிப்புகள்
மேற்கோள்கள்
De Hartog, Leo (1989). Genghis Khan: Conqueror of the World. New York: St. Martin's Press. ISBN 1-86064-972-6. |
Portal di Ensiklopedia Dunia