எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர்
ஐந்தாம் அலெக்சாண்டர் (இலத்தீன்: Alexander PP. V, இத்தாலியம்: Alessandro V; இயற்பெயர்: பெத்ரோஸ் பிலார்கோஸ், ca. 1339 – மே 3, 1410) என்பவர் மேற்கு சமயப்பிளவின் போது (1378–1417) எதிர்-திருத்தந்தையாக ஆட்சி செய்தவர் ஆவார். ஜூன் 26, 1409 முதல் 1410இல் தனது இறப்புவரை இவர் ஆட்சி செய்தார். கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ ஏடுகளின்படி இவர் ஒரு எதிர்-திருத்தந்தை ஆவார். கிரேக்க-இத்தாலிய வழிமரபினரான இவர் கிரீட்டில் 1339இல் பிறந்தார்.[1][2] இவரின் இயற்பெயர் பெத்ரோஸ் பிலார்கோஸ் ஆகும்.[3] பிரான்சிஸ்கன் சபையில் இணைந்த இவர் ஆக்சுபோர்டு மற்றும் பாரிசுக்கு கல்வி கற்ற அனுப்பப்பட்டார். இவர் பாரிசில் இருக்கும் போது மேற்கு சமயப்பிளவு நிகழ்ந்தது. இவர் அச்சமயம் திருத்தந்தை ஆறாம் அர்பனை (1378–89) ஆதரித்தார். பின்னர் லோம்பார்டியில் பணியாற்றிய இவர், 1386இல் பியாசென்சாவின் ஆயராகவும், 1387இல் விசென்சாவின் ஆயராகவும், 1402இல் மிலன் நகரின் ஆயராகவும் நியமிக்கப்படார். 1405இல் திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதன்பின்பு இவர் பிளவை முடிவுக்கு கொணர பாடுபட்டார். இதற்காக மார்ச் 25, 1409இல் பீசா பொதுச்சங்கத்தைக் கூட்ட உதவினார். இதனால் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் கோவத்துக்கு ஆளாகி தனது கர்தினால் பதவியையும், ஆயர் பதவியையும் இழந்தார். ஆயினும் பீசா பொதுச்சங்கம் தாம் காலியாக இருப்பதாக அறிக்கையிட்ட திருத்தந்தைப்பதவிக்கு இவரை தேர்வு செய்து ஜூன் 26, 1409இல் இவருக்கு முடி சூட்டடியது. இது மற்றுமொரு திருத்தந்தையை உருவாக்கி சிக்கலை பெரிதாக்கியது. இவர் 10 மாதம் மட்டுமே இப்பதவியில் பணியாற்றினார். 3 மே 1410 இரவு இவர் இறந்தார். இவருக்குப்பின்பு எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் தேர்வானார்.[4][5] 1418இல் கூடிய காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் பீசா பொதுச்சங்கத்தால் தேர்வானவர்களை எதிர்-திருத்தந்தையாக அறிக்கையிட்டது. இக்காலத்தில் நிலவிய குழப்பத்தால் 1492இல் திருத்தந்தையாக தேர்வானவர் திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் என்னும் பெயரை ஏற்றார். இதனால் திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் என்னும் பெயரை ஆட்சி பெயராக எத்திருத்தந்தையும் ஏற்கவில்லை. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia