ஏலேலசிங்கன்ஏலேலசிங்கன் (ஆங்கிலம்: Elelasingan) (பொ.ஊ.மு. 1-ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம்) என்பவர் பல்லவர் ஆட்சியில் மயிலாப்பூரின் கரையோரத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் வணிகர் ஆவார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வணிகம் செய்து வந்த இவர், தமிழ் புலவரும் தத்துவஞானியுமான வள்ளுவரின் சமகாலத்தவரும் அவரது உற்ற நண்பராகவும் சீடராகவும் திகழ்ந்தவர்.[1] இவர் ஏலேலசிம்ஹன் என்றும் ஏலேலசிங்கன் செட்டியார் என்றும் ஏலேலா என்றும் அலாரா என்றும் வரலாற்றில் பலவாறு அழைக்கப்படுகிறார்.[2] வாழ்க்கைக் குறிப்புஇலங்கை வரலாற்றில் ஏலேலா என்றும் அலாரா என்றும் குறிப்பிடப்படும் ஏலேலசிங்கன் பொ.ஊ.மு. 144-க்கும் பொ.ஊ.மு. 101-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகர் என்று கூறப்படுகிறது.[3] மகாவம்ச மரபின் படி ஏலேலன் பொ.ஊ.மு. 205-லிருந்து பொ.ஊ.மு. 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்டு வந்தவன் என்று மு. சி. பூரணலிங்கம் பிள்ளை கூறுகிறார்.[4] இருப்பினும், எலலசிங்கன் வள்ளுவரின் சமகாலத்தவர் என்பதாலும் வள்ளுவரின் காலம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாலும், இலங்கையின் ஏலேலாவும் வள்ளுவரின் சீடரான ஏலேலசிங்கனும் ஒரே நபர்தானா என்பது இன்னும் விவாதத்திற்குரியதாக உள்ளது. வள்ளுவரின் சீடரான ஏலேலசிங்கன் என்பவர் பொ.ஊ. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இளவரசர் என்று டி. எஸ். சீனிவாசன் கருதுகிறார்.[5] ஏலேலசிங்கன் கரையா அல்லது பரவா சமூகத்தைச் சேர்ந்த வணிகராவார்.[6] இவர் மயிலாப்பூரில் நகரவாசிகளின் தலைவராகவும் இருந்தார்.[7] செல்வந்தரான இவர் சொந்தமாகக் கப்பல்கள் வைத்திருந்ததாகவும், வெளிநாடுகளுடன், முக்கியமாக இலங்கையுடன் வர்த்தகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.[6][8] நெசவாளராக வாழ்ந்து வந்த வள்ளுவருக்கு நெசவுக்குத் தேவையான நூலை விற்பவராக ஏலேலசிங்கன் திகழ்ந்தார்.[9][10] காலப்போக்கில் ஏலேலசிங்கன் வள்ளுவரின் நெருங்கிய நண்பராகவும் சீடராகவும் ஆனார்.[11] ஏலேலசிங்கனும் அவரது மனைவியும் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர். ஒரு நாள் உள்ளூர் சிவன் கோவிலுக்குச் சென்றபோது, ஒரு பசுவின் அருகில் ஒரு குழந்தை கிடந்ததைக் கண்டார்கள். அக்குழந்தையை தாங்களே தத்தெடுத்து அதற்கு ஆரல்யகானந்தர் என்று பெயரிட்டனர்.[12] வள்ளுவரிடம் "உலக நன்மைக்காக ஒரு அறநூல் எழுதவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தவர் ஆரல்யகானந்தர் என்று நம்பப்படுகிறது. இவ்வேண்டுகோளுக்கு இணங்கி வள்ளுவர் குறளை யாத்தார்.[13] ஏலேலசிங்கனும் மற்ற நண்பர்களும் வள்ளுவரை மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னனின் அவையில் தானியற்றிய திருக்குறளை அரங்கேற்றுமாறு அறிவுறுத்தினர்.[13] மதுரையில் குறளை அரங்கேற்றிவிட்டுத் திரும்பிய வள்ளுவரை ஏலேலசிங்கனும் மற்றவர்களும் போற்றி வரவேற்றனர்.[7] வள்ளுவரின் மரணப் படுக்கையில் ஏலேலசிங்கன் வள்ளுவரிடம் அவரது சடலத்தை தங்கப்படுக்கையில் வைத்தி அதைச் சுற்றி நினைவிடமொன்றை அமைக்க வேண்டிக் கோரினார்.[14] வள்ளுவர் அதை ஏற்க மறுத்து ஏலேலசிங்கனிடம் தனது சடலத்தை கயிற்றில் கட்டி ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் விலங்குகளுக்கு உணவாக வேண்டி வீசிவிடுமாறு கூறினார்.[14][15] ஏலேலசிங்கனும் அதன்படியே செய்து வள்ளுவரது சடலத்தை உண்ட காகங்களும் விலங்குகளும் "பொன் போல் பிரகாசித்ததாகத்" தான் கண்டதைக் கூறி அவ்விடத்தில் கோயில் ஒன்றை நிறுவினார்.[14] மயிலாப்பூரில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இன்று உள்ள வள்ளுவரின் கோவில் இந்த பழய கோவிலின் இடிபாடுகளில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.[14] மரபுஏலேலசிங்கன் வள்ளுவர் கூறிய வழியில் வாழ்ந்தவராக உண்மையான சீடராக நினைவுகூரப்படுகிறார்.[10] "ஏலேலசிங்கன் பொருள் ஏழுகடல் போனாலும் திரும்பும்" என்ற பழமொழியும் உழைப்போரால் வழிவழியாகப் பாடப்பட்டு வரும் "ஏலேலோ எலவலி" மற்றும் "ஏலேலோ ஐலசா" ஆகிய பாடல்களும் ஏலேலசிங்கனின் நினைவாக தமிழ் மரபில் தொடரப்பட்டு வருகிறது.[10][16] இவற்றையும் காண்கதரவுகள்
தரவு நூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia