கங்கா ஆரத்தி

கங்கா ஆரத்தி நடைபெறும் காட்சி

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி என அழைக்கப்படும் வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றுக்கு தசவசுவமேத படித்துறையில் நாள்தோறும் மாலை வேளையில் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. கங்கா ஆரத்தியை காண பக்தர்கள் கங்கைக்கரையில் கூடுகின்றனர்.

பொழுது

ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது நிறைவுறும் நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் இந்த கங்கா ஆரத்தி நடக்கின்றது.

ஆரத்தி செய்வோர்

கங்கா ஆரத்தி சுமார் 20 முதல் 25 வயது வரையுள்ள ஏழு ஆடவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஏழு ஆடவர்கள் பட்டாடை அணிந்து கங்கை ஆற்றை நோக்கி பாராட்டிப் பாட ஆரம்பிக்கின்றனர்.

நிகழ்வு

சாம்பிராணி ஆரத்தி

முதலில் ஊதுவத்திகளைக் கொளுத்தி கங்கா ஆரத்தி நிகழ்வினை ஆரம்பிக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஏழு பேரும் ஒரே மாதிரியாக சங்கு ஊதுகின்றனர். அடுத்தபடியாக சாம்பிராணியை ஆரத்தியாகக் காட்டுகிறார்கள். பெரிய தூவக்காலில் சாம்பிராணி இடப்பட்டுள்ளது. அதிக அளவிலுள்ள அந்த சாம்பிராணி வெளியே கொட்டிவிடாதபடி தூவக்காலின் வாயில் கம்பித் தகட்டினைப் பொருத்தியுள்ளனர். தலைக்கு மேலே (கிட்டத்தட்ட தலைகீழாக) தூவக்காலைத் தூக்கி அவர்கள் ஆர்த்தி காட்டும்போது புகை வெளியே வருவதைப் பார்க்க அழகாக உள்ளது. புகை அதிகமாகி நெருப்பு வெளிவர ஆரம்பித்தால் ஒருவர் வந்து அந்த தூவக்காலில் சிறிதளவு நீரைத் தெளித்து தீ ஜுவாலை வெளிவராமல் ஆக்கிவிடுகின்றார்.

அதைத் தொடர்ந்து கற்பூரக் கட்டிகளை வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள். கற்பூரம் கொளுத்தும் அந்த தூவக்கால் ஐந்து தலை நாகத்தினைக் கொண்டு அமைந்துள்ளது. சாம்பிராணி தூவக்காலும், சூடம் ஏற்றப்படும் தூவக்காலும் பார்ப்பதற்கு சற்று கனமாகவே தோன்றுகின்றன.

தொடர்ந்து அவர்கள் கங்கையை நோக்கிப் பாடுகின்றார்கள். அதையடுத்து மயிலிறகை ஆட்டி கங்கையைப் போற்றுகின்றனர். அடுத்த நிகழ்வாக வெண் சாமரம் கங்கையை நோக்கி விசிறப்பட்டு ஆர்த்தி விழா நடைபெறுகிறது. நிறைவாக தனித்தனிக் கற்பூரங்களாக அடுக்கு தட்டில் வைத்து ஆர்த்தி இடுகிறார்கள். இவ்வாறாக ஆரத்தி எடுக்கும்போது முதலில் கங்கையாற்றின் திசையை நோக்கி ஆரம்பித்து, தத்தம் வலப்புறமாகக் கடிகாரச் சுற்றாகத் திரும்பி நான்கு திசைகளிலும் அவ்வாறு செய்துவிட்டு இறுதியாக ஆரம்பித்த திசை நோக்கித் திரும்புகின்றனர்.

பக்தர்கள் பங்கேற்பு

காசி விசுவநாதர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருகின்ற பக்தர்கள் கங்கை ஆர்த்தியைக் காண கங்கைக் கரையில் கூடுகின்றனர். ஆரத்தியை முழுமையாகக் காண்பதற்காகப் பல பக்தர்கள் படகுகளில் குறிப்பிட்ட தொகை கொடுத்து அமர்ந்து பார்க்கின்றார்கள்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya