கேபக்
கேபக் என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவர் இரண்டு முறை ஆட்சி செய்தார். முதல் முறை 1309 முதல் 1310 வரையிலும், இரண்டாவது முறை அண்ணளவாக 1318 முதல் அவரது இறப்பின் வரையிலும் ஆட்சி செய்தார். வாழ்க்கைஇவர் துவாவின் மகன் ஆவார். துவா 1282 முதல் 1307 வரை கானாக இருந்தார். இந்தியாவின் தில்லி சுல்தானகத்திற்குப் பல்வேறு போர்ப் பயணக் குழுக்களைத் துவா அனுப்பினார். இவற்றில் 1306ஆம் ஆண்டு போர்ப் பயணமானது கேபக் என்று பெயரால் அறியப்பட்ட ஒரு தளபதியால் தலைமை தாங்கப்பட்டது என்று தில்லி அவையில் இருந்த அமீர் குஸ்ராவ் என்ற வரலாற்றாளரின் பதிவுகளில் உள்ளது.[1] ரீன் கிரௌசட் என்ற வரலாற்றாளர், இந்தத் தளபதியைத் துவாவின் மகன் என்கிறார்.[2] எனினும் கிஷோரி சரண் லால் என்ற வரலாற்றாளர் இந்தத் தளபதி வேறொரு நபராக இருந்திருக்க வேண்டும் என நம்புகிறார். ஏனெனில் இந்திய வரலாற்று நூல்கள் இந்தத் தளபதி 1306 ஆம் ஆண்டுப் போர்ப் பயணத்தின்போது இந்தியாவில் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று குறிப்பிடுகின்றன.[3] முதல் ஆட்சிக் காலம்1307ல் துவாவின் இறப்பிற்குப் பிறகு சகதாயி கானரசின் நிலைமையானது நிலையற்றதாகிப்போனது. ஒரே ஆண்டுக்குள் இரண்டு கான்கள் ஆட்சிக்கு வந்தனர். கான்களின் மீது மீண்டும் தங்களது ஆதிக்கத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் கய்டுவின் மகன்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். 1308ஆம் ஆண்டு வாக்கில் கானரசின் கட்டுப்பாடானது தலிகுவின் கையில் வந்தது. ஆனால் அவரது ஆட்சிக்கு எதிராகப் போட்டி வந்தது. அவரது எதிரிகள் கேபக்கிற்குப் பின்னால் திரண்டனர். 1308அலல்து 1309ஆம் ஆண்டு அவர்கள் தலிகுவைத் தோற்கடித்துப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர். இதன் காரணமாகக் கேபக் கானரசின் கான் ஆனார்.[4][5] இந்த நேரத்தில் கய்டுவின் மகன்கள் சகதாயி வழித்தோன்றல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தனர். தலிகுவுடனான போரிலிருந்து அப்போதுதான் கேபக் வெளிவந்திருந்தார். கேபக்கை எதிர்த்து எங்கிசர், ஓருசு, சபர் மற்றும் துக்மே ஆகியோர் படையெடுப்பு நடத்தினர். அல்மலிக்கிற்கு அருகில் இந்த இரண்டு படைகளும் சந்தித்தன. களத்தில் நடைபெற்ற ஒரு யுத்தத்தில் இறுதியாகக் கேபக்கின் படைகள் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து யுவான் பேரரசர் கயிசானிடம் சரணடையச் சபர் முடிவெடுத்தார். இவ்வாறாகச் சகதாயி வழித்தோன்றல்களுக்கு எதிராகக் கய்டுவின் மகன்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த அச்சுறுத்தலானது நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.[4][5] எங்கிசரும் அவரது சகோதரர்களும் தோற்கடிக்கப்பட, கானரசின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுப்பதற்காக ஒரு குறுல்த்தாயை கேபக் கூட்டினார். அந்தக் குறுல்த்தாயில் கேபக்கின் சகோதரர் ஏசன் புகாவைக் கானாக அங்கீகரிக்க மங்கோலிய இளவரசர்கள் முடிவெடுத்தனர். சகதாயி கானரசின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள ஏசன் புகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஏசன் புகாவுக்காகக் கேபக் தனது பதவியில் இருந்து இறங்கினார்.[5] ஏசன் புகாவின் கீழ்1314 ஆம் ஆண்டு ஈல்கானரசு மீது படையெடுக்கவிருந்த ஒரு இராணுவத்தின் பொறுப்பை கேபக்கிற்கு ஏசன் புகா வழங்கினார். சனவரியில், தன்னுடைய நெகுதாரி கூட்டுப் படையினருடன் இணைந்து ஆமூ தாரியா ஆற்றைக் கடந்து ஈல்கானரசுப் பகுதிக்குள் படையெடுத்தார். எதிரி இராணுவத்தை முர்காப் என்ற பகுதிக்கு அருகில் தோற்கடித்தார். பிறகு சகதாயி இராணுவமானது ஹெறாத் வரை முன்னேறியது. ஆனால் ஏசன் புகாவிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. கிழக்கில் படையெடுத்து வந்த யுவான் மங்கோலியர்களை முறியடிக்கக் கேபக்கின் உதவி ஏசன் புகாவிற்குத் தேவைப்பட்டது. சீக்கிரமே ஒரு சகதாயி வழித்தோன்றல் இளவரசனான எசவுர், கேபக்கின் பக்கமிருந்து கட்சி தாவினார். சகதாயி வழித்தோன்றல்களைத் தோற்கடிக்க ஈல்கான்களுக்கு எசவுர் உதவி புரிந்தார். இதற்கு வெகுமதியாக ஆப்கானித்தானில் இருந்த நிலப்பகுதிகள் எசவுருக்கு ஈல்கான் ஒல்ஜைடுவால் வழங்கப்பட்டன.[6] இரண்டாம் ஆட்சிக் காலம்1320ஆம் ஆண்டு வாக்கில் ஏசன் புகா இறந்தார். ஏசன் புகாவிற்குப் பிறகு கேபக் கான் பதவிக்கு வந்தார். அவர் எடுத்த முதல் நடவடிக்கை எசவுருக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதாகும். ஈல்கான்களுக்கு எதிராகத் தோல்வியில் முடிந்த ஒரு முயற்சியாக எசவுர் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருந்தார். எனவே பலவீனமான நிலையில் இருந்தார். கேபக்கின் படைகள் எசவுரை சூன் 1320ல் தோற்கடித்துக் கொன்றன.[7][8] ககானின் அவையிலிருந்து இரண்டு இளவரசிகளைக் கேபக் மணந்து கொண்டார் என்று அறியப்படுகிறது.[9] 1323ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் பரிசு பொருட்களைக் கேபக் ககானுக்கு அனுப்பினார். இவரது சகோதரர் ஏசன் புகாவைப் போல் இல்லாமல் ககானுடன் எவ்விதமான பிரச்சனையையும் கேபக் தவிர்த்தார். ஜெஜீன் கானுடன் 1323ஆம் ஆண்டு எல்லைச் சண்டைகள் உருவானபோது சரணடைந்தார். இந்த ஆரம்பகால சண்டையைத் தவிர கேபக்கின் இரண்டாவது ஆட்சிக் காலமானது பெரும்பாலும் அமைதியானதாகவே நடந்தது. கானரசு முழுவதற்குமான ஒரு தரப்படுத்தப்பட்ட நாணயங்கள் இவரது ஆட்சியிலோ அல்லது அதற்கு முன்னரோ அறிமுகப்படுத்தப்பட்டது என்று கருதப்படுகிறது. எவ்வாறயினும், இவற்றின் பயன்பாட்டுக்கு கேபக் ஆதரவளித்தார்.[10] மேலும் தனக்கென ஒரு தலைநகரத்தை நிறுவுவதில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இது போன்ற ஒரு முயற்சியை எடுப்பதை இவரது நாடோடி முன்னோர்கள் தவிர்த்தனர். இவரது வாழ்நாளின் போது கானரசின் தலைநகரமாகக் கார்சி உருவானது.[11] 1326ஆம் ஆண்டு வாக்கில் கேபக் இறந்தார். இவருக்குப் பிறகு இவரது சகோதரர் எல்ஜிகிடய் ஆட்சிக்கு வந்தார். உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia