கோபால்ட்(III) ஐதராக்சைடு
கோபால்ட்(III) ஐதராக்சைடு (Cobalt(III) hydroxide) என்பது Co(OH)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். H3CoO3 என்ற வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். கோபால்டிக்கு ஐதராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. கோபால்ட்(III) ஐதராக்சைடு ஓர் அயனிச் சேர்மம் ஆகும். இதில் மூன்றிணைதிற கோபால்ட்டு நேர்மின் அயனிகளும் Co3+ ஐதராக்சில் எதிர்மின் அயனிகளும் OH− உள்ளன. பழுப்பு-கருப்பு மற்றும் பச்சை என இரண்டு கட்டமைப்பு ரீதியாக வேறுபட்ட வடிவங்களில் கோபால்ட்(III) ஐதராக்சைடு அறியப்படுகிறது. பழுப்பு-கருப்பு வடிவம் ஒரு நிலையான திடப்பொருளாகும். கோபால்ட்(II) குளோரைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் நீர் கரைசல்களை வினை புரியச் செய்து தொடர்ந்து ஓசோனுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து இதைத் தயாரிக்கலாம்.[1] முன்னர் கோபால்ட்(II) பெராக்சைடு என்று கருதப்பட்ட பச்சை வடிவத்திற்கு, கார்பன் டை ஆக்சைடு ஒரு வினையூக்கியாக தேவைப்படுகிறது. 96% எத்தனாலில் உள்ள கோபால்ட்(II) குளோரைடு கரைசலில் –30 முதல் –35°செல்சியசு வெப்பநிலை வரை ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து, பின்னர் 15% சோடியம் கார்பனேட்டு கரைசலை தண்ணீரில் சேர்த்து தீவிரமாகக் கிளறுவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம். இதன் விளைவாக உருவாகும் அடர் பச்சை நிறத் தூள் திரவ நைட்ரசன் வெப்பநிலையில் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும். ஆனால் அறை வெப்பநிலையில் இது சில நாட்களுக்குள் அடர் பழுப்பு நிறமாக மாறும்.[2] இயற்கைத் தோற்றம்2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, அறியப்பட்ட கனிம இனங்களில் கோபால்ட்(III) ஐதராக்சைடு இயற்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், எட்டிரோகெனைட்டு CoO(OH) கனிமம் இருப்பதாக அறியப்படுகிறது.[3][4] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia