சுந்தரவனக்காடுகள்
சுந்தரவனங்கள் (Sundarbans) என்பது வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா ஆறுகளின் சங்கமமான கங்கை வடிநிலத்தில் உருவான சதுப்புநிலக் காடு ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஊக்ளி ஆற்றிலிருந்து வங்காளதேசத்தின் குல்னா கோட்டத்தில் உள்ள பாலேஷ்வர் ஆறு வரை பரவியுள்ளது. இது அடர்ந்த, திறந்தவெளி சதுப்புநிலக் காடுகள், வேளாண் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிலம், சேற்றுப் படுகைகள், தரிசு நிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் குறுக்கே பல ஓத நீரோடைகளும், கால்வாய்களும் செல்கின்றன.[3] 10,277 சதுர கி.மீ. (3,968 சதுர மைல்) பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இது, வங்காளதேசத்தின் குல்னா கோட்டத்தில் 6,017 சதுர கி.மீ. (2,323 சதுர மைல்) இக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடாகும்.[4] இது மேற்கு வங்காளத்தின் இராஜதானி கோட்டத்தில், தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் வடக்கு 24 பர்கனா மாவட்டம் போன்றவற்றில் 4,260 சதுர கி.மீ. (1,640 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது.[5][6] சுந்தரவனக் காடுகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ள நான்கு பகுதிகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன, அதாவது. வங்காளதேசத்தில் சுந்தரவனம் மேற்கு, சுந்தரவனம் தெற்கு, சுந்தரவனம் கிழக்கு, இந்தியாவின் சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் ஆகியவை அந்த நான்குப் பகுதிகளாகும்.[7] 2020 மதிப்பீட்டில் இந்திய சுந்தரவனக்காடுகள் அழிந்து வரும் உயிரினப் பகுதியாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் சேர்க்கப்பட்டு கருதப்படுகிறது.[8] இந்தக் காடுகளில் அதிக அளவில் காணப்படும் மர இனங்கள் சுந்தரி (Heritiera fomes), தில்லை (Excoecaria agallocha) ஆகியவை ஆகும். இந்தக் காடுகளில் 290 பறவை இனங்கள், 120 மீன் இனங்கள், 42 பாலூட்டிகள், 35 ஊர்வன இனங்கள், எட்டு நீர்நில வாழ்வன இனங்கள் உட்பட 453 வனவிலங்கு இனங்களுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது.[9] மீன் மற்றும் சில முதுகெலும்பில்லா உயிரினங்களைத் தவிர மற்ற அனைத்து வனவிலங்குகளையும் கொல்வது, பிடிப்பது போன்றவை முற்றிலும் தடைசெய்யப்பட்ட போதிலும், 20 ஆம் நூற்றாண்டில் காடுகளின் சுற்றுச்சூழல் தரம் குறைந்து வருவதால், பல்லுயிர் பெருக்கம் குறைந்துவருவது அல்லது உயிரினங்களின் எண்ணிக்கைக் குறைதல் போன்றவையும் நடந்துவருகிறது.[10] சுந்தரவனக் காடுகள் இயற்கையாலும், மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. 2007 ஆம் ஆண்டில், சிதர் சூறாவளியால் கரையோரப் பகுதியில் உள்ள சுந்தரவனக் காடுகளில் சுமார் 40% பகுதி சேதமுற்றது. காலநிலை மாற்றம், நன்னீர் வரத்து குறைதல், கடல் மட்ட உயர்வு காரணமாக உப்புத்தன்மை அதிகரித்தல் போன்றவற்றால் இந்த காடு பாதிக்கப்பட்டுள்ளது. மே 2009 இல், ஐலா புயல் சுந்தரவனக் காடுகளைப் பேரழிவிற்கு உட்படுத்தி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த சூறாவளியால் குறைந்தது 100,000 பேர் பாதிக்கப்பட்டனர்.[11] இப்பகுதியை ஆய்வு செய்யும் நிபுணர்கள், இப்பகுதியில் முன்பு அலையாத்திக் காடுகள் இருந்த பகுதிகளில் மீண்டும் காடுகளை வளர்த்தல், உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் போன்ற செயல்முறைகள் மூலம், சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுப்பது, நிர்வகிப்பது போன்றவற்றில் மேலும் கவனம் செலுத்த பரிந்துரைக்கின்றனர். யுனெஸ்கோவின் 2016 அறிக்கையின்படி, முன்மொழிவில் உள்ள நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட ராம்பால் மின் நிலையமானது இந்தக் தனித்துவமான சதுப்புநிலக் காடுகளை மேலும் சேதப்படுத்தும் என்று கூறுகிறது.[12] சொற்பிறப்பியல்சுந்தரவனம் என்பதன் நேரடி பொருள் (Bengali: সুন্দরবন, romanized: Sundôrbôn) "அழகிய காடு" என்பதாகும். மாற்றுக் கருத்தாக, இந்தப் பெயர் சமுத்திரபன், ஷோமுத்ரோபோன் ("கடல் காடு"), சந்திர-பந்தே, என்ற பழங்குடிப் பெயரெகளின் சிதைவு என்றும் கூறப்படுகிறது.[13] இருப்பினும், இந்தப் பெயரின் தோற்றம் சுந்தரி என்பதாக இருக்கலாம், இது இப்பகுதியில் ஏராளமாகக் காணப்படும் ஹெரிடீரா ஃபோம்ஸ் என்ற சதுப்புநிலத் தாவரத்தின் இனத்தின் உள்ளூர் பெயராகும்.[14] வரலாறுசுந்தரவனக் காடுகளில் மனிதக் குடியேற்றத்தின் வரலாற்றானது மௌரியர் காலம் (கிமு 4-2 நூற்றாண்டு) வரை செல்கிறது. பாக்மாரா வனப்பகுதியில் ஒரு பாழடைந்த நகரத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது வங்க நாட்டுப்புறக் கதைகளின்படி மௌரியர்களுக்கு முந்தைய அரை-வரலாற்று நபரான சந்த் சதகரால் உருவாக்கபட்டது என்று கூறப்படுகிறது.[15] வங்காளதேசத்தில் சுந்தரவனக் காடுகளுக்கு வடக்கே உள்ள கபில்முனி, பைக்காச்சா உபாசில்லாவில் நடந்த தொல்லியல் அகழ்வாய்வில், ஆரம்பகால இடைக்காலத்தைச் சேர்ந்த நகர்ப்புற குடியேற்றத்தின் இடிபாடுகள் கிடைத்தன.[16] முகலாயர் காலத்தில், உள்ளூர் ஆட்சியாளர்களால் குடியிருப்புகளை அமைப்பதற்காக வனப்பகுதிகள் குத்தகைக்கு விடப்பட்டன.[15] 1757 ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஆலம்கீரிடமிருந்து சுந்தரவனக் காடுகளின் மீது தனியுரிமையைப் பெற்று, 1764 ஆம் ஆண்டில் அந்தப் பகுதியின் வரைபடத்தை வரைந்து முடித்தது. இருப்பினும், முறையான வன மேலாண்மை ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே தொடங்கியது. சுந்தரவனக் காடுகளின் மீது அதிகாரத்தைக் கொண்ட முதல் வன மேலாண்மைப் பிரிவு 1869 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1875 ஆம் ஆண்டில், சதுப்புநிலக் காடுகளின் பெரும்பகுதி, 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின் (1865 ஆம் ஆண்டு சட்டம் VIII) கீழ் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள காடுகள் அடுத்த ஆண்டு காப்புக் காடாக அறிவிக்கப்பட்டு, அதுவரை மாவட்ட நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. அடிப்படை வன மேலாண்மை மற்றும் நிர்வாக அலகான வனக் கோட்டம், 1879 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் தலைமையகம் இன்றைய வங்காளதேசத்தின் குல்னாவில் அமைக்கப்பட்டது. 1893–1898 காலகட்டத்திற்கான முதல் மேலாண்மைத் திட்டம் எழுதப்பட்டது.[17] புவியியல்சுந்தரவனக் காடுகளானது, ஊக்லி, பத்மா (இரண்டும் கங்கையின் துணை ஆறுகள்), பிரம்மபுத்திரா, மேக்னா ஆறுகள் தெற்கு வங்காளதேசத்தில் கலக்கும் பெரும்-சங்கமத்தால் வங்காள விரிகுடாவில் உருவாக்கப்பட்ட பரந்த வடிநிலத்தில் அமைந்துள்ளது. பருவகால வெள்ளத்தால் சூழப்படும் சுந்தரவன நன்னீர் சதுப்பு நிலக் காடுகள் கடலோரத்தை ஒட்டி உள்ள சதுப்பு நிலக் காடுகளை ஒட்டிய நிலப்பகுதியில் உள்ளன. இந்தக் காடுகள் 10,277 சதுர கி.மீ. (3,968 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன, இதில் சுமார் 6,517 சதுர கி.மீ. (2,516 சதுர மைல்) வங்காளதேசத்தில் உள்ளது. சுந்தரவனக் காடுகளின் இந்தியப் பகுதி சுமார் 4,260 சதுர கி.மீ. (1,640 சதுர மைல்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1,700 சதுர கி.மீ. (660 சதுர மைல்) ஆறு, கால்வாய்கள், சிற்றோடைகள் போன்ற நீர்நிலைப் பகுதிகளாகும். இந்த நீர் நிலைகள் சில மீட்டர்கள் முதல் பல கிலோமீட்டர்கள் வரை அகலம் கொண்டவையாக உள்ளன.[4][5][6] சுந்தரவனக் காடுகளானது, ஓதம் நீர்வழிகள், சேற்றுப் படுகைகள், சதுப்புநிலக் காடுகளில் உள்ள சிறிய தீவுகள் என பல சிக்கலான வலையமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒன்றோடொன்று இணைந்த நீர்வழிப் பாதை வலையமைப்பால், காட்டின் ஒவ்வொரு மூலைக்கும் படகு மூலம் செல்லக்கூடியதாக உள்ளது. இந்தப் பகுதியானது வங்காளப் புலி, பறவை இனங்கள், புள்ளிமான், முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஏராளமான விலங்கினங்களுக்குப் பெயர் பெற்றதாகும். வடிநிலத்தின் வளமான வண்டல் மண் பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் வனப்பகுதி பெரும்பாலும் வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் காட்டின் சில பகுதிகளே எஞ்சியுள்ளன. மீதமுள்ள காடுகளுடன், சுந்தரவன சதுப்புநில காடுகளும், அழிந்து வரும் புலிகளுக்கு முக்கியமான வாழ்விடமாக உள்ளது. மேலும், சுந்தரவனப் பகுதியில் காணப்படும் சதுப்புநிலத் தாவர இனங்களானது, கொல்கத்தா, குல்னா, மோங்லா துறைமுகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இலட்சக் கணக்கான மக்களை சூறாவளிகளால் ஏற்படும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக உள்ளன. இது கடலோர மக்களை ஆழிப்பேரலை, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது.[18] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia