நிக்கராகுவா (Nicaragua,[b] அதிகாரபூர்வமாக நிக்கராகுவா குடியரசு (Republic of Nicaragua) என்பது புவியியல் ரீதியாக நடு அமெரிக்காவில் உள்ள மிக்கப்பெரிய நாடு ஆகும். 130,370 சதுரகிமீ (50,340 சதுரமைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 2024 தரவுகளின் படி மக்கள்தொகை 7,142,529 ஆகும்.[13] இது குவாத்தமாலா, ஒண்டுராசு ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நடு அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.
நிக்கராகுவாவின் எல்லைகளாக, வடக்கே ஒண்டுராசு, கிழக்கே கரிபியக் கடல், தெற்கே கோஸ்ட்டா ரிக்கா, மேற்கே அமைதிப் பெருங்கடலும்எல் சால்வடோரின் கடல் எல்லைகளும், கிழக்கே கொலம்பியாவும் அமைந்துள்ளன. நிக்கராகுவாவின் மிகப்பெரிய நகரமும் அத தேசியத் தலைநகரும் மனாகுவா ஆகும். 1,055,247 (2020) மக்கள்தொகையுடன் இது நடு அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நகரம் ஆகும். நிக்கராகுவா மிகவும் வளமான மண், விளை நிலங்களைக் கொண்டிருப்பதால் "நடு அமெரிக்காவின் ரொட்டிக் கூடை" என்று அழைக்கப்படுகிறது.[14][15][16][17][18][19] நிக்கராகுவாவின் பல்லின மக்களில் மெசுட்டிசோ, பழங்குடியினர், ஐரோப்பிய, ஆப்பிரிக்க மரபுவழி மக்கள் உள்ளனர். மொசுக்கிட்டோ கரையோரப் உள்ள பழங்குடியினர் தங்கள் சொந்த மொழிகளையும் ஆங்கிலத்தையும் பேசினாலும், நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி எசுப்பானியம் ஆகும்.
பண்டைய காலத்திலிருந்தே பல்வேறு பூர்வீக கலாச்சாரங்களால் புழங்கப்பட்டு வந்த இப்பகுதி 16 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. நிக்கராகுவா எசுப்பானியாவிடம் இருந்து 1821 இல் விடுதலை பெற்றது. மொசுக்கிட்டோ கரையோரம் வேறுபட்ட வரலாற்றுப் பாதையைப் பின்பற்றியது, 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் குடியேற்றம் நடைபெற்று பின்னர் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது. இது 1860 இல் நிக்கராகுவாவின் தன்னாட்சிப் பிரதேசமாக மாறியது, இதன் வடக்குப் பகுதி 1960 இல் ஒண்டுராசுக்கு மாற்றப்பட்டது. நிக்கராகுவா விடுதலை பெற்றதில் இருந்து அரசியல் அமைதியின்மை, சர்வாதிகாரம், ஆக்கிரமிப்பு, நிதி நெருக்கடி போன்றவற்றிற்கு காலத்துக்குக் காலம் உட்பட்டுள்ளது, இதில் 1960கள், 1970களில் நடைபெற்ற நிக்கராகுவா புரட்சி, 1980களின் போர் ஆகியனவும் அடங்கும்.
கலாச்சார மரபுகளின் கலவையானது நாட்டுப்புறவியல், உணவு வகைகள், இசை, இலக்கியம் ஆகியவற்றில் கணிசமான பன்முகத்தன்மையை உருவாக்கியுள்ளது, இதில் நிக்கராகுவா கவிஞர்கள், ரூபன் டாரியோ போன்ற போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்புகளும் அடங்கும். "ஏரிகள் மற்றும் எரிமலைகளின் நிலம்" என்று அறியப்படும் நிக்கராகுவா,[20][21]அமெரிக்கக் கண்டத்தின் இரண்டாவது பெரிய மழைக்காடான போசாவாசு உயிர்க்கோளக் காப்பகத்தையும் கொண்டுள்ளது.[22] உயிரியல் பன்முகத்தன்மை, சூடான வெப்பமண்டலக் காலநிலை, செயல்நிலை எரிமலைகள் ஆகியவை நிக்கராகுவாவை பிரபலமான சுற்றுலாத் தலமாக ஆக்குகின்றன.[23][24]
↑"Nicaragua". The World Factbook (in ஆங்கிலம்). Central Intelligence Agency. 19 June 2023. Archived from the original on 20 March 2021. Retrieved 4 July 2023.
↑Awadalla, Cristina (March 23, 2023). "Authoritarian Populism and Patriarchal Logics: Nicaragua's Engendered Politics". Social Politics: International Studies in Gender, State & Society (Oxford University Press (OUP)) 30 (2): 701–723. doi:10.1093/sp/jxad006. பன்னாட்டுத் தர தொடர் எண்:1072-4745.