பிரான்சியம் (தனிமம்)
பிரான்சியம் (Francium) என்பது Fr என்ற குறியீட்டையும் 87 என்ற அணுவெண்ணையும் கொண்ட ஒரு வேதித் தனிமம் ஆகும். இது ஏக-சீசியம் (Eka-caesium), அற்றினியம் கே (Actinium K) என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது. இது இரண்டாவது (சீசியத்திற்கு அடுத்ததாக) குறைந்த மின்னெதிர்த்தன்மை கொண்ட தனிமம் ஆகும். பிரான்சியம் அதிகக் கதிரியக்கம் உடைய மாழை ஆகும். இது கதிரியக்கத் தேய்வுக்குள்ளாகி, அசுற்றற்றைன், இரேடியம், இரேடன் போன்ற தனிமங்களாக மாறும். கார மாழையான இது, ஒரு வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ளது. 1939இல் மார்கரெட்டு பெரியால் பிரான்சில் (இதனாலேயே பிரான்சியம் என்ற பெயர் வந்தது.) பிரான்சியம் கண்டறியப்பட்டது. தொகுப்பு முறை மூலம் கண்டறியமுன்னரே இயற்கையில் கண்டறியப்பட்ட கடைசித் தனிமம் இதுவே ஆகும். ஆய்வுக்கூடங்களுக்கு வெளியே, பிரான்சியத்தைக் காண்பது மிக அரிது. பிரான்சியம்-223 ஓரிடத்தான் தொடர்ச்சியாகத் தோன்றி, தேய்வுக்குள்ளாகும் செயன்முறை இடம்பெறும் உரேனியம், தோரியம் தாதுகளில், இது நுண்ணிய அளவில் காணப்படுவதுண்டு. ஏதாவது ஒரு குறித்த நேரத்தில் பூவுலக மேலோட்டில் 20–30 g (ஓர் அவுன்சு) போன்ற சிறிய அளவிலேயே இது காணப்படும். பிரான்சியம்-223, பிரான்சியம்-221 தவிர்ந்த ஏனைய பிரான்சிய ஓரிடத்தான்கள் அனைத்தும் செயற்கையானவை. ஆய்வுக்கூடத்தில் மிகக்கூடிய அளவு பிரான்சியம் தொகுக்கப்பட்டது, 300000இற்கும் மேற்பட்ட பிரான்சிய அணுக்கள் கொத்தாக ஆக்கப்பட்டபோதாகும்.[2] இயல்புகள்இயற்கையாகக் காணப்படும் தனிமங்களுள் மிகவும் உறுதிகுறைந்தது பிரான்சியம் ஆகும். இதனுடைய மிகவும் உறுதியான ஓரிடத்தான் பிரான்சியம்-223ஆனது 22 நிமைய அரைவாழ்வுக் காலம் உடையது. அதேவேளை, இயற்கையாகக் காணப்படும் தனிமங்களுள் இரண்டாவது உறுதிகுறைந்த தனிமமான அசுற்றற்றைன், 8.5 மணித்தியால அரைவாழ்வுக் காலம் உடையது.[3] பிரான்சியத்தின் எல்லா ஓரிடத்தான்களும் அசுற்றற்றைனாகவோ இரேடியமாகவோ இரேடனாகவோ தேய்வடையும்.[3] 105ஆவது தனிமம் வரையுள்ள எல்லாச் செயற்கைத் தனிமங்களை விடவும் பிரான்சியம் உறுதிகுறைந்தது.[4] கார மாழையான பிரான்சியத்தின் வேதி இயல்புகள் பெரும்பாலும் சீசியத்தை ஒத்தவை.[4] இது, ஒரு வலுவளவு எதிர்மின்னியைக் கொண்டுள்ள ஒரு பாரத் தனிமம் ஆகும்.[5] கூடிய அளவு சமவலு எடையைக் கொண்டுள்ள தனிமமும் இதுவேயாகும்.[4] நீர்மப் பிரான்சியமானது (உருவாக்கப்பட்டால்) அதன் உருகுநிலையில் 0.05092 N m−1 மேற்பரப்பு இழுவையைக் கொண்டிருக்கும்.[6] பிரான்சியத்தின் உருகுநிலையானது 27 °C (80 °F, 300 K) அளவில் காணப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[7] அரிதாகவே கிடைப்பதாலும் கதிரியக்கத்தின் காரணமாகவும் இதன் உருகுநிலையைத் திட்டமாகக் கூறமுடியவில்லை. எனவே, மதிப்பிடப்பட்ட கொதிநிலைப் பெறுமானமான 677 °Cஉம் (1250 °F, 950 K) திட்டமான பெறுமானமன்று. பௌலிங்கின் அளவிடையில் சீசியத்திற்குக் கொடுத்த அதே மின்னெதிர்த்தன்மைப் பெறுமானமான 0.7ஐயே இலின்னசு பௌலிங்கு பிரான்சியத்திற்கும் வழங்கியுள்ளார்.[8] பின்னர், சீசியத்தின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானம் 0.79 எனத் திருத்தியமைக்கப்பட்டது. எனினும், பிரான்சியத்தின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான எந்தப் பரிசோதனைத் தரவுகளும் கிடைக்கவில்லை. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia