ஓல்மியம் (Holmium, ஹோல்மியம்) அணுவெண்67 கொண்ட ஒரு வேதியியல்தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 98 நொதுமிகள் உள்ளன. ஓல்மியத்தின் வேதியியல் குறியீடு Ho ஆகும். இத் தனிமம் லாந்த்தனைடுகள் வரிசையைச் சேர்ந்த மெதுமையான, வளைந்து ஒடுங்கக்கூடிய வெள்ளிபோன்ற வெண்மையான மாழை. காற்றில் ஆக்சைடாகி சிதைவடையாமல் இருக்கும் தன்மை கொண்டது. மோனாசைட் (monazite), கடோலினைட் (gadolinite) ஆகிய கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது.
குறிப்பிடத்தக்க பண்புகள்
இந்த அரிதில் கிடைக்கும் தனிமம் மூன்று இயைனி (trivalent) மாழை. தனிமமாகக் கிடைக்கும் பொருட்கள் யாவற்றினும் அதிக காந்தத் திருப்புமை கொண்ட பொருள் ஓல்மியம். இதன் காந்தத் திருப்புமை (10.6µB). இயிற்றியம் என்னும் தனிமத்துடன் சேர்ந்து பலவகையான காந்தப் பண்புகள் கொண்ட கலவைகளில் பயன்படுகின்றது.
ஓல்மியம் மெதுமையான வளைந்து நெளிந்து ஒடுங்கக்கூடிய மாழை. இது காற்றில் நிலையாக இருக்கக்கூடிய அவ்வளவாக அரிப்பு அடையாப் பொருள். காற்றில் ஈரப்பதம் இருந்தால் உயர் வெப்ப நிலைகளில் ஆக்ஸைடாக மாறி விடுகின்றது.
பயன்பாடுகள்
இதன் காந்தப் பண்புகளால், மிகுவலிமை கொண்ட காந்தங்கள் செய்யப் பயன்படுகின்றது. அணு உலையிலும் அணுக்கரு பிளவில் தோன்றும் நொதுமிகளை பற்றுவதற்குப் பயன்படுகின்றது.
இயிற்றியம்-இரும்பு-கார்னெட் (YIG), இயிற்றியம்-லாந்த்தன்ம்-ஃவுளூரைடு (YLF) முதலான பொருட்களால் செய்யப்படும் திண்மநிலை சீரொளி மிகைப்பி (லேசர்) கருவிகளில் பயன்படுகின்றது. இதே போல மருத்துவம், மற்றும் பல்மருத்துவத்தில் பயன்படுத்தும் சில் நுண்ணலைக் கருவிகளிலும் பயன்படுகின்றது.
கண்ணாடிகளில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் பெற ஹோல்மியம் ஆக்சைடு பயன்படுகின்றது.
ஓல்மியம் சேர்த்த கண்ணாடிகள், புற ஊதாக்கதிர்கள் மற்றும் காணும் நிற ஒளியலைகளுக்கான துல்லிய நிறமாலை அளவிகளில், துல்லியம் நிறுவும் ஒப்பீட்டு பொருளாகப் பயன்படுகின்றது.
சிர்க்கோனியாவினால் செய்யப்பட்ட நகைகளில் நிறமூட்டியாகப் பயன்படுகின்றது. புறவொளி சூழலுக்கு ஏற்றார்போல இருநிறத் தன்மை (மஞ்சள் அல்லது செம்மஞ்சள்) கொண்டதாகச் செய்ய பயன்படுகின்றது.
ஓல்மியம் பயன்படும் லேசர்களைக் கொண்டு சிறுநீரகக் கட்டிகளை உடைக்கப் பயன்படுகின்றது.