புசார்லா வெங்கட சிந்து (Pusarla Venkata Sindhu, தெலுங்கு: పూసర్ల వెంకట సింధు, பிறப்பு: 5 சூலை 1995) ஓர் இந்தியஇறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகஸ்த்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர். இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பானஒலிம்பிக் தங்க வேட்டை (Olympic Gold Quest) இவரை ஆதரிக்கிறது. இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார்.[6] இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.[7]ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டிற்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.[8]
போர்ப்சு இதழின்படி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முறையே 8.5மில்லியன் மற்றும் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதன் மூலம் அதிகம் வருமானம் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றார்.[9][10] இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினையும் , குடிமை விருதுகளில் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினையும் பெற்றுள்ளார். சனவரி 2020இல் மூன்றாவது குடிமை விருதான பத்ம பூசன் விருதினையும் பெற்றார்.[11][12][13]
பிறப்பு
பி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார்.
ரியோ ஒலிம்பிக்ஸ்
இவர் 2016 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். சிந்து காலிறுதியில் உலகதர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிகானையும், அரையிறுதியில் உலக தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, எசுப்பானியாவின் கரோலினா மாரினிடம் தோல்வியைத் தழுவினார். இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.[14] ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி இவர்.
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.[17]
ஆட்டக்கால சாதனைகள்
உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் பி.வி.சிந்து ஆவார்.
2013 ஆம் ஆண்டில் நடந்த முக்கியப் போட்டிகளில் இரண்டு தங்கமும்,ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.
உலக சம்மேள தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் உள்ளார்.
பி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இள வயதில் (பதினெட்டு வயது) அர்ஜுனா விருதையும் வாங்கியுள்ளார்[18].
2018 ஆம் ஆண்டு திசம்பர் 16 ஆம் நாள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎப் உலக சாம்பியன் போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[19]
2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் நடந்த உலக வாகையாளர் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[20]