மகாமசுத்தகாபிசேகம் (பெருங் குடமுழுக்கு/இந்தியப் பெருவிழா), என்பது சமணச் சிலைகளுக்கு பாரிய அளவில் மேற்கொள்ளப்படும் அபிசேகமாகும் (திருமுழுக்கு). இவற்றுள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிரவணபெளகோளாவில் அமைந்துள்ள பாகுபலி கோமதீசுவரர் சிலைக்கு மேற்கொள்ளப்படும் திருமுழுக்கு விழா குறிப்பிடத்தக்கதாகும். இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கொ ஒருமுறை நிகழும் முக்கிய சமண விழாவாகும். இது பண்டைய மற்றும் பிரிக்கப்படாத சமண மரபின் ஒருங்கியைந்த முக்கிய பகுதியாகும். இவ் விழா 17.4 மீட்டர்கள் (57 அடி) உயரமுடைய ஒரேகல்லினாலான சித்த பாகுபலி சிலைக்கு மதிப்புத் தரும் வகையில் நடாத்தப்படுகிறது.இத் திருமுழுக்கு கடைசியாக பெப்ரவரி 2018ல் நடைபெற்றது. அடுத்த நிகழ்வு 2030ல் நடைபெறவுள்ளது.[1] கி.பி. 981ல் துவக்கப்பட்ட இவ்விழாத் தொடரின் 88வது நிகழ்வு 2018ல் நடைபெற்றது. மேலும், இது 21ம் நூற்றாண்டில் நடைபெறும் இரண்டாவது மகாமசுத்தகாபிசேகமாகும். இவ் விழாவுக்கு பெருமளவான சமணத் துறவிகள் வருகை தருவர். பெப்ரவரி 2018ன் திருமுழுக்கு சிரவணபெளகோளாவின் சாருகீர்த்தி பட்டாரக சுவாமியின் தலைமையில் 17ந் திகதியிலிருந்து 25ந் திகதிவரை நடைபெற்றது.[2]
கோமதீசுவர பாகுபலி சிலையின் திருமுழுக்கு
24 சமணத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான பகவான் ரிசபநாதரின் மகனே பகவான் பாகுபலியாவார். இவர் தமது வாழ்வின் கருவிலிருந்த கால்ம், பிறப்பு, துறவு, உள்ளொளி பெறல் மற்றும் விடுதலையடைதல் போன்ற எல்லா நிலைகளிலும் உயர் பண்புகளை வெளிப்படுத்தியமையினால் சமணர்களால் வணங்கப்படுகிறார். 58.8 அடி உயரமுடைய இச் சிலை சமணக் கலைப் படைப்புக்களிலேயே மிகச் சிறப்பானதாகும். இச் சிலை அண்ணளவாக 983ல் அமைக்கப்பட்டது.[3] பாகுபலி சிலை பண்டைய கர்நாடகாவில் சிற்பக் கலைத்துறையில் அடையப்பட்ட மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இச்சிலை நிமிர்ந்து நிற்கும் நிலையில், காயோத்சர்கம் எனப்படும் தியான நிலையில் அமைந்துள்ளது. விந்தியகிரிக் குன்றின் உச்சியில் அமைந்துள்ள 57 அடி உயரமுடைய இச்சிலையின் உச்சிக்குச் செல்ல 700 படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன.[4]
வழிமுறை
ஒரு சாரக் கட்டுமானத்திலிருந்து தூய்மையாக்கப்பட்ட நீரும் சந்தனக் குழம்பும் சிலையின் மீது ஊற்றப்படும். இந் நிகழ்வு பல கிழமைகளுக்கு தொடர்ந்து நடைபெறும். மகாமசுத்தகாபிசேகம் துவங்கும்போது, 1,008 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குடங்களில் (கலசங்கள்) நிரப்பப்பட்ட திருமுழுக்காட்டப்பட்ட நீர் நிகழ்வில் பங்குபற்றுவோர் மீது தெளிக்கப்படும்.பின்பு, அச்சிலை புனித நீர்மங்களான பால், கரும்புச் சாறு மற்றும் மஞ்சட் குழம்பு போன்றவற்றால் முழுக்காட்டப்படும். மேலும், சந்தனப் பொடி, மஞ்சட் பொடி மற்றும் குங்குமப் பொடி போன்றவை சிலையின் மீது தூவப்படும்.[5] இதழ்கள், தங்க மற்றும் வெள்ளிக் காசுகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் போன்றன காணிக்கையாக அளிக்கப்படும். அண்மையில், இவ்விழாவின் இறுதிப் பகுதியில், உலங்கு வானூர்தி மூலம் பூமாரி பொழியப்பட்டது.[6]
ஏனைய மகாமசுத்தகாபிசேகங்கள்
சிரவண பெளகோளாவில் அமைந்துள்ள கோமதீசுவரர் சிலையின் திருமுழுக்கைப் போன்றே, இந்தியாவெங்கிலும் உள்ள சமணக் கோயில்களில் உள்ள சமண உருவங்களுக்கு திருமுழுக்குகள் நடைபெறுகின்றன.[7] கர்நாடகாவிலுள்ளா ஏனைய கோமதீசுவரர் சிலைகளும் 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமசுத்தகாபிசேக விழா மூலமாக திருமுழுக்காட்டப்பட்டு மதிப்பளிக்கப்படுகின்றன.[சான்று தேவை]
கர்கலா மகாமசுத்தகாபிசேகம் - முந்தைய மகாமசுத்தகாபிசேகம் பெப்ரவரி 2002ல் நடைபெற்றது. அடுத்த நிகழ்வு 2015ல் இடம்பெறும்.[8][better source needed]
வேணூர் மகாமசுத்தகாபிசேகம் - முந்தைய நிகழ்வு 28 சனவரி 2012 இலிருந்து 5 பெப்ரவரி 2012 வரை நடைபெற்றது. அடுத்த நிகழ்வு 2024ல் இடம்பெறும்.[9][better source needed]
கும்போசு மகாமசுத்தகாபிசேகம் - முந்தைய மகாமசுத்தகாபிசேகம் 2015ல் நடைபெற்றது. அடுத்த நிகழ்வு 2027ல் நடைபெறும்.[சான்று தேவை]