முரளி விஜய் தனது 17ஆவது வயதில் இருந்து துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக சில துடுப்பாட்டச் சங்கங்களின் சார்பாக விளையாடியுள்ளார். 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீனியர் அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டங்களில் விளையாடினார். 2006-2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் ஒருவரானார். அக்டோபர் 2008 ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். நவம்பர் 2008 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை, கவுதம் கம்பீருக்கு ஓர் போட்டியில் விளையாடத் தடை விதித்ததால் அவருக்குப் பதிலாக துவக்க வீரராக களம் இறங்கினார்.
ஆரம்பகால வாழ்க்கை
முரளி விஜய் தனது 17ஆவது வயதில் இருந்து துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.[1]2003 ஆம் ஆண்டில் சென்னை, ஆழ்வார் பேட்டை துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார். பின் சீ. கே. நாயுடு கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தத் தொடரில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. ஆனால் முரளி விஜய் சரியான ஆட்டத் திறனை இதில் வெளிப்படுத்தத் தவறினார். அவர் விளையாடிய 6 போட்டிகளிலும் சராசரியாக 26.45 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.[2] அதன் பின்பும் சில துடுப்பாட்ட சங்கங்களின் சார்பாக விளையாடினார். 2005-2006 ஆம் ஆண்டிற்கான சீ. கே. நாயுடு கோப்பைக்கான போட்டித் தொடரில் தமிழ்நாடு 22 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 26.50 சராசரி ஓட்டங்களைப் பெற்றார்.[3]
இந்தத் தொடரில் சரியான திறனை வெளிபடுத்தத் தவறினாலும் இவருக்கு பெப்ரவரி 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் ரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம் கிடைத்தது. பெப்ரவரி 16 அன்று கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 17 ஓட்டங்கள் எடுத்தார்.[4] பின் இரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 38 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது.[5]
தேர்வு ஆட்டங்களில்
நவம்பர் 2008, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நாக்பூரில் நடந்த நான்காவது டேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கவுதம் கம்பீருக்குப் பதிலாக களம் இறங்கியதே அவரது அறிமுக ஆட்டமாகும். டிசம்பர் 2009, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மீண்டும் கம்பீருக்குப் பதிலாக களம் இறங்கினார். முதல் ஆட்டப் பகுதியில் 87 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 2010இல் விளையாடிய போது முதல் நூறு அடித்தார்.
சாதனைகள்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு தேர்வு தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்தியத் துவக்க வீரர் எனும் சாதனையை முரளி விஜய் படைத்தார். 2014-2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் 284 ஓட்டஙக்ள் எடுத்தார். இதற்கு முன் வீரேந்தர் சேவாக் ,2003-04 ஆம் ஆண்டில் 464 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.