வின்சி சோனி அலோசியசு ( Vincy Sony Aloshious ) (பிறப்பு 12 டிசம்பர் 1995) மலையாளத் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையாவார். 2023 ஆம் ஆண்டு வெளியான ரேகா என்ற மலையாளத் திரைப்படத்தில் தலைப்புப் பாத்திரத்தில் நடித்ததற்காக 53வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
வின்சி அலோசியசு, வின்சி பி.ஏ என்ற பெயரில் 1995 டிசம்பர் 12 அன்று [2]கேரளாவின்மலப்புறத்தில் உள்ள பொன்னானியில் பிறந்தார்.[3] இவரது தந்தை அலோசியசு ஒரு வாகன ஓட்டுநர். இவரது தாயார் சோனி ஒரு ஆசிரியர். இவரது சகோதரர் விபின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.[4] இவர் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பிஷப் காட்டன் கான்வென்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் ஆசிய கட்டிடக்கலை பள்ளியிலிருந்து கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார்.[5]
நடிப்பு
இவர் 2018 இல் நாயகி நாயகன் என்ற உண்மைநிலை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளராக இருந்தார்.[6] 2019 ஆம் ஆண்டு வெளியான விக்ருதி என்ற மலையாள நகைச்சுவை-நாடகத் திரைப்படத்தில், சௌபின் சாகிருக்கு இணையாக கதாநாயகிகளில் ஒருவராக இவர் அறிமுகமானார்.[7]கனகம் காமினி கலஹம் (2021), பீமன்டே வாழி (2021) மற்றும் ஜன கண மன (2022) போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிற படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.[8][9][10]
வின்சி மழவில் மனோரமாவில் ஒளிபரப்பப்பட்ட நாயகி நாயகன் 2018 ஆம் ஆண்டு திறமை வேட்டை நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[11][12][13] நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மஞ்சு வாரியருடன் கர்ப்பிணிப் பெண்ணாக ஒரு விளம்பரத்தில் தோன்றினார்.[14] இவர் 2019 இல் மழவில் மனோரமாவில் D5 ஜூனியர் என்ற நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் [15]
திரை வாழ்க்கை
நாயகி நாயகனில் கிடைத்த வரவேற்பு [16] 2019 இல் இவரது திரைப்பட அறிமுகத்திற்கு வழிவகுத்தது, விக்ருதி படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோருக்கு இணையாக முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.[17][18] இப்படம் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.
ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கிய 2021இல் வெளியான கனகம் காமினி கலஹம் என்றா நையாண்டித் திரைப்படத்தில் வரவேற்பாளராக ஷாலினி என்ற வேடத்தில் நடித்தார்.[19] இப்படமும் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.[8]
2021 இல் வெளியானபீமண்டே வாழி இவரது இரண்டாவது வெளியீடாகும். இதில் இவர் குஞ்சாகோ போபனுடன் நடித்தார்.[20][21]
வலைத்தொடர்
அதே ஆண்டில் கரிக்கு என்ற யூடியூப்பில் ஒளிபரப்பட்ட கரிகாச்சி என்ற சிறு வலைத்தொடரில் தோன்றினார்.[22][23] 2022 ஆம் ஆண்டு வெளியான 'எமிலி' என்ற வலைத்தொடரின் தலைப்புக் கதாபாத்திரத்திலும் நடித்தார்.[24]