2027 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2027 ICC Men's Cricket World Cup) என்பது துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் 14-ஆவது பதிப்பாகும், இது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத்துடுப்பாட்டத் தொடர் ஆகும். இத்தொடரை 2027 அக்டோபர் முதல் நவம்பர் வரை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் பொறுப்பேற்று நடத்துகின்றன.[1] இது தென்னாப்பிரிக்காவும் சிம்பாப்வேயும் இணைந்து நடத்தும் இரண்டாவது உலகக்கிண்ணப் போட்டியாகும், முன்னதாக 2003 பதிப்பை இருநாடுகளும் இணைந்து நடத்தின. நமீபியா முதல்தடவையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. இத்தொடரில் போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்படும்.[2] அத்துடன் 2003 உலகக்கிண்ணத்தின்போது பயன்படுத்தப்பட்ட அதே வடிவமைப்பை இது கொண்டிருக்கும்.[3]
தகுதி
2027 உலகக்க்கிண்ணத்திற்கான தகுதிப் பாதை.
ஐசிசி பன்னாட்டு ஒருநாள் தரவரிசையில் உள்ள முதல் எட்டு அணிகளுடன் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே அணிகள் (இணை நடத்துநர்கள்) போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும், மீதமுள்ள நான்கு இடங்கள் 2026 இல் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணத் தகுதிச் சுற்றில் தீர்மானிக்கப்படும். நமீபியா அதன் துடுப்பாட்ட வரலாற்றில் முதல் முறையாக போட்டியை இணைந்து நடத்தும் என்றாலும், அது முழு ஐசிசி உறுப்பினராக இல்லாததால் அதற்கு ஒரு இடம் உத்தரவாதம் அளிக்கப்பட மாட்டாது, இதன் விளைவாக நமீபியா தகுதி-காண் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும்.[4]
போட்டித்தொடர் ஏழு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களைப் பயன்படுத்தும், ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு அணியும் ஒரே குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று அணிகள் சூப்பர் ஆறு நிலைக்கு முன்னேறும், அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இடம்பெறும்.[5] இந்த வடிவம் முன்பு 2003 பதிப்பில் பயன்படுத்தப்பட்டது.
சூப்பர் ஆறு கட்டத்திற்கு தகுதி பெறும் அணிகள் மற்றக் குழுவில் உள்ள அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாடும்; அதே குழுவிலிருந்து மற்ற அணிகளுக்கு எதிரான முடிவுகள் இந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.