இத்திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்கார்லெட் ஜோஹான்சன், மகெர்சலா அலி, ஜொனாதன் பெய்லி, ரூபர்ட் பிரண்ட், மானுவல் கார்சியா-ரல்போ, எட் ஸ்கிரெய்ன் உள்ளிட்ட அனைவரும் புதுமுகங்களாவர். ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் வெளியான சிலகாலத்திலேயே, நிருவாகத் தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இத் தொடரில் ஒரு புதிய பகுதியை உருவாக்கும் பணியில் டேவிட் கோப்-பை நியமித்தார். கோப், முன்னதாக ஜுராசிக் பார்க் (1993) படத்தின் இணை எழுத்தாளராகவும் அதன் தொடர்ச்சியான த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் (1997) படத்தின் எழுத்தாளராகவும் இருந்தவர். ரீபர்த் படத்தின் வளர்ச்சி முதன்முதலில் சனவரி 2024-இல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் எட்வர்ட்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார். நடிகர்கள் தேர்வும் தொடங்கியது. முதன்மைப் படப்பிடிப்பு சூன்-செப்டம்பர் காலகட்டத்தில் தாய்லாந்து, மால்ட்டா, ஐக்கிய அரசகம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. மொத்த செலவு $180 மில்லியன் ஆகும்.
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் 17 சூன் 2025 அன்று ஐக்கிய அரசகத் தலைநகர் இலண்டனில் உள்ள ஓடியன் லக்ஸ் லெஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் 2 சூலை அன்று இப் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டது. கலவையான திறனாய்வுகளை இப் படம் பெற்றது. உலகளவில் $648 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியமையால், 2025-இன் அதிக வருவாய் ஈட்டிய படங்களுள் நான்காம் இடம் பெற்றது.
கதைச் சுருக்கம்
2008-இல், இன்ஜென் நிறுவனம், பிரெஞ்சு கயானாவுக்கு 226 மைல்கள் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள "இல் செயின்ட்-ஹியூபர்ட்" (Île Saint-Hubert) எனும் தீவில் ஒரு தொன்மாமரபணுப் பொறியியல் ஆய்வகத்தை இயக்கி வருகிறது. இங்கு மரபணு மாற்றம் மற்றும் மரபணுத் திரிபு செய்யப்பட்ட தொன்மாக்கள் உருவாக்கப்படுகின்றன. இங்கு ஏற்படும் பாதுகாப்புக் குளறுபடியால் "டிஸ்டார்டஸ் ரெக்ஸ்" ("D.ரெக்ஸ்") எனும் ஒரு உருமாறிய ஆறுகால் டைரனோசாரஸ், கட்டுப்பாட்டை உடைத்து வெளியேறி ஒரு ஊழியரைக் கொன்று, தீவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, இதனால் இன்ஜென் பணியாளர்கள் அத் தீவைக் கைவிடுகின்றனர்.
நிகழ்காலத்தில் (2025), மறு-உயிர் பெற்ற தொன்மாக்கள் வாழ இயலாதவாறு புவியின் பெரும்பாலான காலநிலைப் பகுதிகள் மாறிவிட்டன. எஞ்சியுள்ள தொன்மாக்கள் நிலநடுக் கோட்டைச் சுற்றிய பகுதிகளில் மட்டுமே உயிர்வாழ்கின்றன. வரலாற்றில் தொன்மாக்கள் கோலோச்சிய மெசோசோயிக் கால நிலப்பகுதிகளை ஒத்துள்ள இப்பகுதிகள், பொதுமக்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன.
பார்க்கர்ஜெனிக்ஸ் (ParkerGenix) மருந்தியல் நிறுவனத்தின் நிருவாகியான மார்ட்டின் கிரெப்ஸ், முன்னாள் இராணுவ கமுக்க நடவடிக்கை வல்லுநர் சோரா பென்னட், தொல்லுயிரியல் முனைவர் ஹென்றி லூமிஸ் ஆகியோர் ஒரு கமுக்கப் பணியைத் திட்டமிடுகின்றனர். நீர்வாழ் மோசசாரஸ், நிலவாழ் டைட்டேனோசோரஸ், மற்றும் பறவை இனமான குவெட்சல்கோட்லஸ் ஆகிய மூன்று பெரிய தொல்விலங்குகளிடமிருந்து உயிரியல் மாதிரிகளைப் பிரித்தெடுத்து மனிதர்களின் இதயநோய் மருத்துவத்துக்கான ஆராய்ச்சியில் பயன்படுத்துவது அவர்களின் இலக்கு. இதையடுத்து பிரெஞ்சு கயானாவின் அண்டையிலுள்ள சுரிநாம் நாட்டுக்குச் செல்லும் சோரா, அங்குள்ள ஒரு மதுக்கூடத்தில், தனது நீண்டகால நண்பர் டங்கன் கின்கெய்ட்-டைச் சந்தித்து இப் பயணத்தை வழிநடத்த அழைக்கிறார். டங்கன், தனது படகோட்டியான லெக்ளெர்க், கூலிப்படை உறுப்பினர் நினா, பாதுகாப்புத் தலைவர் பாபி ஆட்வாட்டர் ஆகியோரை அழைத்து வருகிறார்.
இப் பயணக் குழு "இல் செயின்ட்-ஹியூபர்ட்" தீவுக்குக் கடல்வழியாக தி எசெக்ஸ் (The Essex) எனும் கப்பலில் பயணிக்கிறது. இதற்கிடையில், அவர்களுக்கு சற்றுத் தொலைவில் லா மேரிபோசா (La Mariposa) எனப் பெயர்கொண்ட ஒரு படகில் ரூபன் டெல்காடோ என்பவர் தனது மகள்கள் தெரெசா, இசபெல்லா, தெரெசாவின் காதலர் சேவியர் டாப்ஸ் ஆகியோருடன் பயணிக்கிறார். திடீரென ஒரு மோசசாரஸ் தாக்குதலால் லா மேரிபோசா விபத்துக்குள்ளாகிறது. அவர்களின் வானொலி அழைப்பைக் கேட்கும் தி எசெக்ஸ் குழுவினர் அங்கு சென்று நால்வரையும் மீட்கின்றனர்.
தீவுக்குச் செல்லும் வழியிலேயே இக்குழுவினர் அந்த மோசசாரஸை மீண்டும் எதிர்கொண்டு அதிலிருந்து மாதிரியையும் பிரித்தெடுக்கின்றனர். ஆனால் அது ஒரு ஸ்பைனோசாரஸ் கூட்டத்துடன் திரும்பிவந்து கப்பலைத் தாக்கி, பாபியைக் கொல்கிறது. உதவி கேட்டு செய்தி அனுப்ப வானொலியைப் பயன்படுத்த முயலும் தெரெசா, (இப் பயணத்தின் இரகசியம் காக்க எண்ணும்) மார்ட்டினால் தள்ளிவிடப்பட்டுக் கடலில் விழுகிறார். மார்ட்டின் அவருக்கு உதவ மறுப்பதால், சேவியர் தாமே தெரெசாவைக் காப்பாற்ற கடலில் குதிக்கிறார். ரூபனும் இசபெல்லாவும் அவரைப் பின்தொடர்ந்து பயணக்குழுவிடமிருந்து பிரிகின்றனர். இதற்கிடையே மோசசாரஸ், தி எசெக்ஸ் கப்பலைத் கரையில் தள்ளி சேதப்படுத்துகிறது. நினாவை, கரையில் வைத்து ஒரு ஸ்பைனோசாரஸ் கொல்கிறது. சோரா, தன் குழுவினரிடம், அடுத்த 24 மணி நேரத்தில் அத் தீவைச் சுற்றிவந்து அவர்களைத் தேடி மீட்க ஒரு சுழலிறகியை அழைத்துள்ளதாக அறிவிக்கிறார்.
இதையடுத்து ஒரு புல்வெளியில் டைட்டேனோசோரஸ் மந்தையைக் காணும் சோரா குழுவினர், அவற்றுள் ஒன்றிடமிருந்து இரண்டாவது மாதிரியை எளிதாகப் பிரித்தெடுக்கின்றனர். மூன்றாம் இலக்கான குவெட்சல்கோட்லஸ்-சைத் தேடி ஒரு உயரமான செங்குத்துப்பாறையில் ஏறி அதன் மறுபுறம் உள்ள ஒரு பழங்காலக் கோவிலை அடைய கயிறு கொண்டு இறங்குகின்றனர். குவெட்சல்கோட்லஸ் ஒரு பெரிய ஊனுண்ணி என்பதால், நேரடியாக அதைக் குறிவைக்காமல் அதன் முட்டையிலிருந்து மாதிரியை ஹென்றி பிரித்தெடுக்கிறார். அப்போது தாய் குவெட்சல்கோட்லஸ் அவர்களைத் தாக்கி லெகிளெர்கை விழுங்குகிறது. எனினும் சோராவும், ஹென்றியும் மாதிரியுடன் தப்பிக்கின்றனர்.
மற்றொருபுறம், தீவின் வேறொரு பகுதியில் தன் மகள்களுடனும் சேவியருடனும் அடைக்கலம் புகும் ரூபன், தெரெசாவைக் கடலிலிருந்து மீட்டமைக்காக சேவியரைப் பாராட்டுகிறார். அன்றிரவு சேவியரைக் குறிவைக்கும் ஒரு வெலாசிராப்டர், மியூட்டடான் எனும் ராப்டர் / டெரோசார் கலப்பினத் தொன்மாவால் கொல்லப்படுகிறது. இதன்பின் அவர்கள் நால்வரும் அத் தீவின் இன்ஜென் வளாகத்தைத் தேடுகின்றனர். வழியில் அகிலோப்ஸ் வகைத் தொன்மாவின் குட்டி ஒன்றைக் காணும் இசபெல்லா அதற்கு 'டோலோரஸ்' எனப் பெயரிட்டுத் தன்னுடன் வைத்துக்கொள்கிறார். அதன்பின் அவர்கள் ஒரு டைரனோசோரஸ் ரெக்ஸ் தாக்குதலில் இருந்து தப்பி, ஒரு தோணியில் ஏறி ஆற்றில் பயணிக்கின்றனர். இறுதியாக அவ் வளாகத்தைக் கண்டுபிடித்து சோரா குழுவுடன் மீண்டும் இணைகின்றனர்.
இக் கட்டத்தில் தெரெசா, மார்ட்டினின் இரண்டகத்தை மற்றவர்களுக்கு அம்பலப்படுத்துகிறார். அப்போது மார்ட்டின் அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, சோராவிடமிருந்து மாதிரிகளைப் பறித்துக்கொண்டு, ஒரு சிறப்பு ஊர்தியில் (UTV) சுழலிறகி இறங்குதளத்துக்குத் தப்பிக்கிறார். மற்ற அனைவரும் ஒரு மியூட்டடான் கூட்டத்தின் தாக்குதலுக்குத் தப்பி சுரங்கப் பாதை வழியே செல்கின்றனர்.
சோரா அழைத்த சுழலிறகி தீவுக்கு வந்து அவர்களைக் கண்டறியும் கட்டத்தில் திடீரென அங்கு வரும் டிஸ்டார்டஸ் ரெக்ஸ் அதை வீழ்த்துகிறது. அங்கு வரும் மார்ட்டினையும் விழுங்குகிறது. சுரங்கத்தின் பூட்டப்பட்ட வாயிலை அடையும் குழுவினருக்கு மறுபுறம் ஒரு படகு தென்படுகிறது. இசபெல்லா, கதவின் கம்பிகளுக்கு இடையே நழுவிச்சென்று அதன் எந்திரப் பூட்டைத் திறக்கிறார். அதன்பின் வெளியே வரும் சோரா, ஹென்றி, ரூபன், தெரெசா, சேவியர் ஆகியோருடன் டோலோரஸையும் அழைத்துக்கொண்டு படகில் ஏறுகிறார். இதற்கிடையே டங்கன் ஒரு வாணம் கொண்டு அந்த D.ரெக்ஸைத் திசைதிருப்பித் தப்பித்து படகில் இணைகிறார்.
படகு தீவிலிருந்து வெளியேறிப் பயணிக்கையில், சோராவும் ஹென்றியும், பிரித்தெடுத்த மாதிரிகளைக் கண்ணோக்குகின்றனர். அவற்றைக் கொண்டு செய்யப்படும் ஆய்வில் உருவாகவுள்ள மருந்தைக் காப்புரிமம் இல்லாமல், உலகமெங்கும் திறந்த மூலநிரலாக வழங்க ஒப்புக்கொள்கின்றனர். இத்துடன் படம் நிறைகிறது.
மேற்கொண்டு இத் தொடருக்குப் பங்களிக்கத் தன்னிடம் புதிதாக ஏதுமில்லை என நினைத்த கோப், மற்றொரு திரைக்கதையை எழுத முதலில் மறுத்தார்.[10][11] இருப்பினும், பிந்தைய படங்களுக்கு ஆலோசகராக இருந்தார்.[12][13]ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) படத்துக்காக திரைக்கதைப் பணிகளை (அறிந்தேற்பு இன்றி) செய்தார்.[14]ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுப்புக்காக ஒன்பது ஆண்டுகள் இயக்குநராகவும் இணை-எழுத்தாளராகவும் பணியாற்றிய கோலின் திரெவாரோ, தான் மற்றொரு படத்துகாக ஆலோசனை மட்டுமே வழங்கப்போவதாகக் கூறினார்.[15]ரீபர்த் படத்தில் அவர் எந்தப் பங்கும் வகிக்கவில்லை.[16]
வளர்ச்சி
(இடமிருந்து வலம்) நிருவாகத் தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் திரை எழுத்தாளர் டேவிட் கோப்
ரீபர்த் படத்தின் வளர்ச்சி டொமினியன் வெளியான குறுகிய காலத்திலேயே தொடங்கியது.[7] தொடக்க கட்டத்தில் ஸ்பில்பேர்க் உருவாக்கிய கதைக்கரு, படத்தின் இறுதி வடிவத்தில் பெரிதும் இடம்பெற்றது.[17] ஆறு மாதங்கள் உழைத்து ஸ்பில்பேர்க்-கும் கோப்-பும் திரைக்கதையை உருவாக்கினர்.[18] முதல் ஜுராசிக் பார்க் முத்தொகுப்பின் (குறிப்பாக அதன் முதல் படத்தின்) தொனியை மீண்டும் உருவாக்க முயன்றனர்.[19][20][21] , "நாங்கள் அதைப்பற்றி முதலிலேயே முடிவெடுத்துவிட்டோம். ஏனெனில், முதல் மற்றும் இரண்டாம் முத்தொகுப்புகள் தங்கள் கதைகளை முடித்துக்கொண்டமையால், [எந்தவித கட்டுப்பாடுகளையும் எங்களுக்கு விதித்துக்கொள்ளாமல்], முற்றிலும் புதிய கதாபாத்திரங்களை முற்றிலும் புதிய இடத்தில் உருவாக்குவோம் [என முடிவெடுத்தோம்]" என்றார் கோப்.[22]
ரீபர்த்-துக்கு முந்தைய இரு படங்கள், மனிதர்களுடன் தொன்மாக்கள் உலகம் முழுவதும் இணைந்து வாழ்வதை மையமாகக் கொண்டிருந்தன. ஆனால் கோப், தொன்மாக்களின் வாழிடத்தில் மனிதர்கள் இருப்பதான கண்ணோட்டத்தை மறுபார்வை செய்ய விரும்பினார்.[21][23][24][25]
இதன்பின் ஒரு இரகசிய தீவில் அமைந்த தொன்மா ஆய்வகத்தை மையமாகக் கொண்ட கதையை உருவாக்கிய இவ்விருவரும், கதைமாந்தர்கள் அங்கு செல்வதற்கான காரணத்தை முடிவு செய்தனர். கோப் கூறுகையில், "[கதைக்கான] ஆராய்ச்சியின்போது சில தொன்மாக்கள் (குறிப்பாக பெரிய இனங்கள்), நீண்ட வாழ்நாள் கொண்டவை என்பதையும், அதற்குக் காரணம் குறைவான இதய நோய் நிகழ்வுகள் என்பதையும் கண்டேன். இது [கதையில்] அவற்றின் தாயனை கொண்டு மருந்து தயாரிக்கலாம் என்ற கருத்துக்கு வழிவகுத்தது, ஏனெனில் மனிதர்களின் மிகப்பெரிய கொலையாளி இதய நோய்" என்றார்.[7]கொலோசல் பயோசயின்சஸ் எனும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் பென் லாம், இந்த முன்மொழிவு எதார்த்தமானது எனவும் "நாம் இழக்கும் இந்த உயிரினங்களில் மருந்துகளும் தரவுகளும் மறைந்துள்ளன" எனவும் கூறினார்.[26] முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களில் தோன்றி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய கலப்பினத் தொன்மாக்களின் தாக்கம் இத் திரைக்கதையிலும் தொடர்ந்தது.[22]
கோப், திரைக்கதை எழுதும்முன் முந்தைய ஆறு படங்களை மீண்டும் பார்த்தார்.[7] மேலும், கிரைட்டனின் ஜுராசிக் பார்க் புதினங்களை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் படித்து அவற்றிலிருந்து இதுவரை பயன்படுத்தப் பெறாத கருப்பொருள்களைத் திரைக்கதையில் இணைத்தார்.[25][18] கதைமாந்தர் ஒரு டைரனொசாரசிடம் இருந்து படகில் தப்பும் காட்சி, ஹென்றி லூமிஸின் ஒரு தனியுரை ஆகியன முதல் புதினத்தின் தாக்கம் பெற்றவை.[27][28]ஜுராசிக் பார்க் திரைக்கதையின் தொடக்க வரைவில் இயான் மால்கம்-முக்காக கோப் எழுதிய (பயன்படுத்தப்படாத) ஒரு உரையாடல் வரியும் ரீபர்த் திரைக்கதையில் இடம்பெற்றது.[29]
திரைக்கதை ஆக்கத்தில் கோப், தனக்கென சில விதிகளை வகுத்துக்கொண்டார். படம் துல்லியமான அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும், முந்தைய படங்களின் நிகழ்வுகளை மறுவிளக்கம் (retcon) செய்யக்கூடாது, நகைச்சுவையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்பன அவ் விதிகளுள் சிலவாகும்.[30] மரபணுத் திரிபுக்கு ஆட்படாத தொன்மாக்களை அரக்க விலங்குகளாக இல்லாமல், பசி அல்லது எல்லைப் பாதுகாப்பு உணர்வால் உந்தப்படும் இயல்பான விலங்குகளாகக் காண்பிக்கவும் முயன்றார்.[31][32]
செப்டம்பர் 2023 வாக்கில், திரைக்கதையை மும்முரமாக எழுதத் தொடங்கிய கோப், மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு வரைவை ஒப்படைத்தார். ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுப்பின் தயாரிப்பாளர்களான பிராங்கு மார்ஷல், பேட்ரிக் குரோவ்லி ஆகியோர் ரீபர்த் திரைப் பணியில் இணைந்தனர். மற்றொரு படத்துக்கான எதிர்பார்ப்பு இருந்தாலும், ஸ்பில்பேர்க் ஏற்கனவே இத் திட்டத்தில் பணியாற்றி வருவதை , முதல் வரைவு ஒப்படைக்கப்படும் வரை இவர்கள் அறியவில்லை. 2025 நடுப்பகுதியில் வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையிலும், தயாரிப்புக் காலம் போதுமானது என முடிவானது.[7]
2024 சனவரி இறுதியில், யுனிவர்சல் பிக்சர்ஸ் ஒரு புதிய ஜுராசிக் வேர்ல்ட் படத்தை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது.[33] முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களைப் போலவே, இப் படமும் மார்ஷல், குரோரவ்லி ஆகியோரால் தி கென்னடி/மார்ஷல் கம்பெனி மூலம் தயாரிக்கப்படுவதாகவும், ஸ்பில்பேர்க், அம்ப்ளின் என்டர்டெயின்மென்ட் வழியே நிருவாகத் தயாரிப்பாளராகச் செயலாற்றுவதாகவும் அறிவிப்பானது.[34][35] திரைப்பணி சில காலமாக நடந்து வந்தது.[36][37] கோப் பல வரைவுகளை எழுதியிருந்தார்.[38] தயாரிப்பாளர்கள் தொன்மா வடிவமைப்புகள் உட்பட முன்தயாரிப்பு பணிகளை செய்திருந்தனர். இதனால் இயக்குநரின் படைப்பு உள்ளீடு குறைவாகவே தேவைப்பட்டது.[39][40] ஏனெனில், டொமினியன் படம் பெருமளவில் எதிர்மறையான திறனாய்வுகள் கிடைத்தமையால், ரீபர்த் தயாரிப்பாளர்கள் அதிக படைப்புக் கட்டுப்பாட்டை விரும்பினர்.[41][42]
ஜுராசிக் வேர்ல்ட் படத்தில் இரண்டாம் நிலை இயக்குநராக பணியாற்றிய டேவிட் லீச், பிப்ரவரி 2024 தொடக்கத்தில் இயக்குநருக்கான ஆலோசனையில் பங்கேற்றார்.[43] ஆனால் அதுவரையிலான ஆக்கப்பணிகள், அவருக்கான படைப்புசார் உள்ளீடுக்கு இடமளிக்கவில்லை என்பதால் ஆலோசனை தோல்வியடைந்தது.[44][45][46] அம் மாத இறுதியில், கரேத் எட்வர்ட்ஸ் இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.[47] அவரது முந்தைய படங்களின் அவர் கையாண்ட காட்சி பாணி ஜுராசிக் வேர்ல்ட் தொடருக்கு ஏற்றதாக இருந்தமை,[48] அவரது கணினியுருப்படம் (CGI) சார்ந்த அனுபவம்,[49] அவர் இயக்கிய காட்சில்லா (2014) படத்தின் மீதான ஸ்பில்பேர்க்கின் விருப்பம், முதல் ஜுராசிக் பார்க் படத்தின் மீதான எட்வர்ட்ஸின் இரசனை ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைந்தன.[50][51]
தி கிரியேட்டர் (2023) படத்தை முடித்த பிறகு, எட்வர்ட்ஸ், வளாகப் படப்பிடிப்புகளில் இருந்து இடைவெளி எடுத்து, தனது சொந்தத் திட்டங்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருந்தார்.[52][53] அப்படியான ஒரு புதிய படத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, ஜுராசிக் வேர்ல்ட் திட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அதை "எல்லாவற்றையும்...கைவிட்டு உடனடியாக [அதில் என்னை] ஈடுபட வைக்கும் ஒரே படம்" என்று அவர் வருணித்தார்.[54]தி கிரியேட்டர் படத்தை முடித்தபின் சோர்வடைந்திருந்த அவர், கோப்-பின் வரைவு மறுத்துவிடும்படி இருக்கும் என எண்ணினார். மாறாக அவர் அதினால் ஈர்க்கப்பட்டார்.[55][56] மார்ஷல் மற்றும் ஸ்பில்பேர்க்குடன் உரையாடி விரைவிலேயே இயக்குநராக ஒப்பந்தமானார்.[57] பொதுவாக இரண்டரை ஆண்டுகள் எடுக்கக்கூடிய திரைப்பணியை முடிக்க அப்போது ஒன்றரை ஆண்டுக்கும் குறைவான காலமே இருந்தது. வெளியீட்டு தேதியை தள்ளிவைக்க அவர் அளித்த பரிந்துரை அது உடனடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. "எல்லோரும் அதை [கோப்-பின் திரைக்கதை] சுட்டிக்காட்டி, 'போய் அதைச் செய்யுங்கள்; அதுதான் எங்களுக்கு வேண்டும்' என்றனர். அதனால் அது ஒப்பீட்டளவில் மிகவும் மென்மையான பயணமாக இருந்தது" என்றார் எட்வர்ட்ஸ்.[58]
கோப்-பின் திரைக்கதையில் இருந்த, நகைச்சுவை மற்றும் திகில் கூறுகளின் சமநிலையைப் பேணிப் பின்பற்ற எட்வர்ட்ஸ் முயன்றார்.[59] இவற்றில் திகில் தன்மை, முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களை விடக் கூடுதலாக முன்னிறுத்தப்பட்டது.[60] திரைக்கதையை மேம்படுத்த எட்வர்ட்ஸ் பரிந்துரை வழங்கும்படி கோப் ஊக்குவித்தார்.[61] திரைக்கதையின்படி முதலில் வெறுமனே ஒரு செங்குத்துப் பாறையின்மீது அமைக்கப்பட்டிருந்த "குவெட்சல்கோட்லஸ் கூடு" காட்சியை, எட்வர்ட்ஸ், ஒரு கைவிடப்பட்ட பழங்காலக் கோவிலில் அமைவதாக மாற்றினார்.[62][63][64] அவ்வாறே முதலில் வேறு களத்தில் அமைக்கப்பட்ட ஒரு காட்சியை, எரிபொருள் நிலைய மளிகைக் கடை ஒன்றில் அமைவதாக மாற்றியமைத்தார்.[65] குறுகிய தயாரிப்புக் காலமே இருந்தமை பயனளித்ததாக எட்வர்ட்ஸ் கருதினார். "அளவுக்கு அதிகமான நேரம் இருந்தால் தள்ளிப்போடல், வேலைக்கு ஆகாதவற்றை முயலுதல் ஆகியன நடக்கும்" என்பதாகக் கூறினார்.[66]
நடிகர் தேர்வு
ஜுராசிக் வேர்ல்ட்:ரீபர்த், இத் திரைத்தொடரின் முந்தைய படங்களில் இருந்து எந்த நடிகர்களையும் சேர்க்காத முதல் படமாகும்.[67] மார்ச் 2024-இல் நடிகர் தேர்வு தொடங்கி அடுத்த மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்தது.[68][69][70][71][72]
சோராவாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்ட ஜெனிஃபர் லாரன்ஸ் உள்ளிட்ட பல நடிகைகள் இவ்வாய்ப்பை மறுத்துவிட்டனர்.[73][74] முன்பே இத் தொடரின் இரசிகையாக இருந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்அதில் இணைய பத்தாண்டுகளுக்கு மேல் காத்துக்கொண்டிருந்தார்.[75]ரீபர்த் உருவாக்கத்தில் இருந்தபோது, அவர் ஸ்பில்பேர்க்கை சந்தித்துத் தன் விருப்பத்தை முன்வைத்தார். இயக்குநராக ஒப்பந்தமான எட்வர்ட்ஸ், ஜோஹன்சனின் ஆர்வத்தை அறிந்து, உடனடியாக அவரை சோராவாக நடிக்கத் தேர்ந்தெடுத்தார். இதன் கோப்புடன் இணைந்த ஜோஹன்சன் தன் பாத்திரத்தை மேம்படுத்தினார்.[76][77]
ஜொனாதன் பெய்லி, விக்கெட் (Wicked ; 2024) படத்தில் வெளிப்படுத்திய நடிப்பால் ஈர்க்கப்பட்ட யுனிவர்சல் ஸ்டுடியோ நிர்வாகிகள், அவரையும் ரீபர்த்-துக்காகத் தேர்ந்தெடுத்தனர்.[78][79]தி லிங்கன் லாயர் (The Lincoln Lawyer) தொலைக்காட்சி தொடரின் ஒரு படலத்தில் தோன்றிய மானுவல் கார்சியா-ரல்போவின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட எட்வர்ட்ஸ், அவரைத் தேர்ந்தெடுத்தார். , ஹோம்லேண்ட் (2011-20) தொலைக்காட்சித் தொடரின் ஒரு படலத்தில் நடித்த ரூபர்ட்பிரெண்ட்-ம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[80]
மற்ற நடிகர்களாக மகெர்சலா அலி,[81] லூனா பிளைஸ்,[82] டேவிட் யாக்கோனோ,[83] ஆட்ரினா மிரான்டா,[84] பெஷிர் சில்வைன்[85] ஆகியோர் தேர்வாயினர். ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரடெஷியஸ் (2020–2022) தொடரில் 'டேவ்' பாத்திரத்துக்குக் குரல் கொடுத்த கிளென் பவல் இப் படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்.[86]
படப்பிடிப்பு
ரீபர்த் ஒளிப்பதிவுப் பணி ஜான் மாத்திசனிடம் ஒப்படைக்கப்பட்டது.[87] ஸ்பிபீல்பர்க்கின் படப்பிடிப்பு பாணியைப் பின்பற்ற முயன்ற எட்வர்ட்ஸ்,[88] முதல் படத்தின் தோற்றத்தை மறு உருவாக்கம் செய்ய 35மிமீ சுருளைப் பயன்படுத்தினார். இப்படிச் செய்வது அவருக்கு முதல் முறையாகும்.[89][90] படக்குழு, பனாஃபிளக்ஸ் மில்லெனியம் XL2 கேமராக்கள் மற்றும் பனாவிஷன்-னின் விண்டேஜ் C, E வரிசை அனமார்ஃபிக் வில்லைகளைப் பயன்படுத்தியது.[91][92][93] கூடுதலாக ARRI 235 கேமரா (கையடக்க படப்பிடிப்புக்கு), மற்றும் Angénieux மற்றும் எலைட் வில்லைகள் பயன்படுத்தப்பட்டன.[94] E-வரிசை வில்லைகள் அவற்றின் தெளிவான வழங்கலுக்காக விரும்பப்பட்டன. காட்சிகள் 2.40:1 உருவ விகிதத்தில் பதிவு செய்யப்பட்டன.[95] வெளிப்புற பகல்நேரக் காட்சிகளுக்கு கோடாக் விஷன் 3 50D (5203) சுருளும், உட்புற, இரவுநேர, காட்டுப்பகுதி காட்சிகளுக்கு 500T (5219) சுருளும் பயன்படுத்தப்பட்டன.[96] காட்டுப்பகுதியில் வரும் இரவுநேரக் காட்சிகள் பெரும்பாலும் day-for-night நுட்பங்களைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்டன. [97]மொத்தப் படமும் ஐக்கியஅரசகத்தில் உள்ள கோடாக் பிலிம் லேப்-பில் பதனம் செய்யப்பட்டது. டெய்லீஸ் நிறத் தரப்படுத்தலை, ஹார்பர் பிக்சர் நிறுவனத்தைச் சேர்ந்த மைல்ஸ் ஆண்டர்சன் மேற்கொண்டார். இறுதி Digital intermediate தரப்படுத்தலை பால் என்ஸ்பி, கோல்ட்க்ரெஸ்ட் நிறுவனத்தில் வைத்து மேற்கொண்டார்.[98] இறுதி DI தரம், சுருளின் இயல்புத் தன்மையைப் பேண, கோடாக் 2382 அச்சு எமுலேசன் அட்டவணையை (LUT) பயன்படுத்தியது.[99]
"இல் செயின்ட்-ஹியூபர்ட்" தீவில் அமைந்த காட்சிகளைப் படம்பிடிக்க கோஸ்ட்டா ரிக்கா நாடு ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டது. மற்ற வாய்ப்புகளாக டொமினிக்கன் குடியரசு, மொரிசியசு, பனாமா உள்ளிட்ட நாடுகளும் இருந்தன. இயக்குநராக ஒப்பந்தமான புதிதிலேயே எட்வர்ட்ஸ் தான் முன்பு தி கிரியேட்டர் படத்தை எடுக்கக் களமாகப் பயன்படுத்திய தாய்லாந்து நாட்டைப் பரிந்துரைத்தார், ஸ்பில்பேர்க்-கும் தயாரிப்பாளர்களும், தாய்லாந்தின் நிலவியல் பொருத்தப்பாட்டைக் கருத்தில்கொண்டு அப் பரிந்துரையை உடனடியாக ஏற்றனர். திரைக்கதைப்படி சோரா, டங்கனை சுரிநாமின் கடற்கரை மதுக்கூடம் ஒன்றில் சந்திக்கும் காட்சியும் தாய்லாந்தின் ஒரு மீனவச் சிற்றூரில் படமாக்கப்பட்டது.[100] எட்வர்ட்ஸ், முடிந்தவரை நேரடிக் களங்களில் படமாக்கலையே நாடினார்.[101][102]தி கிரியேட்டர் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜேம்ஸ் கிளைன், ரீபர்த் படத்தில் இணைந்தார்.[103] படப்பிடிப்பு தொடங்கியவுடன் ஸ்பில்பேபர்க், முழு படைப்புக் கட்டுப்பாட்டை எட்வர்ட்ஸுக்கு வழங்கினார்.[104]
முதன்மைப் படப்பிடிப்பு 13 சூன் 2024[105] அன்று தாய்லாந்தில் சாகா (Saga) என்ற இடைக்காலத் தலைப்பை வைத்துத் தொடங்கியது.[106] ஒரு மாதம் தாய்லாந்திலேயே பணி நீடித்தது.[107][108] படப்பிடிப்பு இடங்களாக Khao Phanom Bencha தேசியப் பூங்கா (கிராபி மாகாணம்),[109] Hat Chao Mai தேசியப் பூங்காவின் Ko Kradan தீவு (திராங் மாகாணம்), Ao Phang Nga தேசியப் பூங்கா (பாங் நிகா மாகாணம்)[110] ஆகியவை இருந்தன. கதைப்படி தி எசெக்ஸ் கப்பல், "இல் செயின்ட்-ஹியூபர்ட்" தீவின் கரையில் மோதும் காட்சி, Ko Kradan தீவில் உள்ள Sunset கடற்கரையில் படமாக்கப்பட்டது.[111][112]டைட்டேனோசோரஸ் மந்தை தோன்றும் காட்சி, கிராபி மாகாணத்தின் Thab Prik நகரில் உள்ள ஒரு வயல்வெளியில் படமாக்கப்பட்டது. வறட்சி காரணமாக, இக் காட்சிக்குத் தேவைப்பட்ட உயரமான புல்பரப்பை வளர்க்க முடியாமையால், ஜேம்ஸ் கிளைன் குழுவினர், இங்கிலாந்து நாட்டுத் தோட்டக்கலை வல்லுநர் ஒருவரைக் கொண்டு ஒரு நீர்ப்பாசன அமைப்பை நிறுவினர்.[113] தாய்லாந்தின் நச்சுத்தன்மை கொண்ட நீர்ப் பாம்புகளும் பூச்சிகளும் படப்பிடிப்பைக் கடினமாக்கின.[114][115][116] படச்சுருளைப் பதனமாக்க அடிக்கடி இங்கிலாந்துக்கு அனுப்புவதும், சூழலைக் கடினமாக்கியது. நிருவாகத் தயாரிப்பாளர் டெனிஸ் ஸ்டீவர்ட் "அந்தப் படம் சரியாக நடக்குமா,... படப்பிடிப்புக் களத்தை [அகற்றலாமா], ஒரு நடிகரை [விலகிக்கொள்ள] அனுமதிக்கலாமா, ஒரு காட்சியை மீண்டும் படமாக்க வேண்டுமா, அல்லது விட்டுவிடலாமா என்று ஐந்து நாட்கள் யோசித்தோம். ஆனால் ஒரு சிக்கலும் எழவில்லை" என்றார்.[117]
ஜூலை 2024 இல், படப்பிடிப்பு மால்டா நாட்டின் கல்காரா எனும் சிற்றூரில் உள்ள மால்டா பிலிம் ஸ்டுடியோஸுக்கு மாறியது.[118] மோசசாரஸ் தாக்குதல் காட்சிகளும்[119][120] சில நீரடி சாகசக் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. அருகிலுள்ள நடுநிலக் கடலிலும் படப்பிடிப்பு நடந்தது.[121] சிக்கலான திரைப்பிடிப்புகள் நீர்த் தொட்டிகளில் ஆக்கப்பட்டன. அப்போது படகுகள் நீர்ம இயக்கக் குழையச்சுகளில் (gimbals) வைக்கப்பட்டிருந்தன.[122] எட்வர்ட்ஸின் முந்தைய படங்களில் சிறப்புத் தோற்ற மேற்பார்வையாளர் நெய்ல் கார்பவுல்ட் இவற்றை நிறுவினார். பெரும்பாலான நீர்த்தொட்டிக் காட்சிகள் முதலில் நீர் இல்லாமல் படமாக்கப்பட்டன. பின்னர் கணினியுருப்படம் (CGI) கொண்டு நீர் சேர்க்கப்பட்டது.[123] கடல் காட்சிகளை படமாக்குவது "மிகவும் கடினமாக" இருந்ததாக எட்வர்ட்ஸ் கூறினார்.[124] ஜோஹன்சன், "வெயிலில் இருந்து தப்பிக்க [அப்போது] வழியில்லை. நாள்தோறும் வெதுப்பகம் போல [வெப்பமாக] இருந்தது. 30 அடி உயரத்தில்...இந்த [குழையச்சு] மேல், கீழ், பக்கவாட்டு என [நகர்ந்தது]. பீரங்கிகளில் இருந்து நீர், [நடிகர்களை நோக்கி] பீறிட்டுப் பாய்ந்தது. கொடூரமாக இருந்தது," என்றார்.[125]
ஆகஸ்ட் 2024-இல்[126] படப்பிடிப்பு, இலண்டனில் உள்ள ஸ்கை ஸ்டுடியோஸ் எல்ஸ்ட்ரீக்கு (Sky Studios Elstree) மாறியது.[127][128][129] திரைக்கதையில் வரும் இன்ஜென் வளாகம், ஆராய்ச்சி அறைகள், மற்றும் சுரங்கங்களின் வலைப்பின்னல் ஆகியன மூன்று ஒலி மேடைகளில் கட்டப்பட்டன.[130][131] செயற்கைக் காடு, எரிபொருள் நிலைய சிற்றங்காடி, தி எசெக்ஸ் கப்பலின் உட்புறங்கள், பழங்காலக் கோவில் ஆகியன ஸ்கை ஸ்டுடியோஸில் கட்டப்பட்டன.[132][133] சோராவின் குழு கயிறு கொண்டு இறங்கும் 70-அடி (21 m) பாறைச் சுவரும் அங்கேயே கட்டப்பட்டது, இக் காட்சிக்காக, இந்தியாவில் உள்ள ஒரு அருவி படம்பிடிக்கப்பட்டு காட்சி விளைவுகள் வழியே சேர்க்கப்பட்டது.[134] இலண்டனில் கிரேனிச்சு பகுதியில் உள்ள ஓல்ட் ராயல் நேவல் கல்லூரியில் ஒரு அருங்காட்சியகக் காட்சி படமாக்கப்பட்டது.[135][136]
ஆற்றுப்பகுதியில் சிக்கிய கதைமாந்தர்களை டைரனோசோரஸ் துரத்தும் காட்சியின் தொடக்கம், தாய்லாந்தில் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு கற்சுரங்கத்தில் படமாக்கப்பட்டது.[137][138] எஞ்சிய பகுதி, இங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் உள்ள லீ வேலி வைட் வாட்டர் சென்டரில் (Lee Valley White Water Centre) படமாக்கப்பட்டது. [139][140][141] ரூபனாக நடித்த மானுவல் கார்சியா-ரல்போ, பல சாகசங்களை தானே செய்தார். அவரும் யாக்கோனோவும் நீரடிக் காட்சிகளுக்கு இசுகூபா மூழ்கல் கற்றனர்.[142] ரூபர்ட் பிரண்ட், தன் பாத்திரமான மார்ட்டின் கிரெப்ஸ் இறக்கும் காட்சிக்காக கம்பியில் தொங்கவேண்டியிருந்தது.[143] மகெர்சலா அலியின் பாத்திரமான டங்கன், டிஸ்டார்டஸ் ரெக்ஸால் கொல்லப்படுவதாக முதலில் திரைக்கதை எழுதப்பட்டிருந்தது. அலி நடிக்க ஒப்பந்தமான பிறகு, யுனிவர்சல் ஸ்டுடியோஸ், அவரது புகழ் நிலை கருதி, அவர் பாத்திரம் உயிருடன் இருக்க வேண்டுமென விரும்பியது. அவர் உயிர்தப்புவதைக் காட்ட ஒரு கூடுதல் காட்சியை தாய்லாந்தில் படமாக்கச் சொன்னது. எட்வர்ட்ஸ் அவ்வாறே செய்து அக் காட்சியை படத்தில் சேர்க்க முடிவு செய்தார்.[144]
படப்பிடிப்பின் இறுதி வாரங்களில் கோப், இலண்டனில் இருந்தமையால்[145] அவரும் எட்வர்ட்ஸும் குறுஞ்செய்தி வழியே செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். எட்வர்ட்ஸ் பலமுறை கோப்-பிடம் திரைக்கதையில் சிறு மாற்றங்களைக் கோரினார் (படப்பிடிப்பு வேளை தொடங்க சில மணித்துளிகளே இருந்த சமயங்களிலும்).[146]
படப்பிடிப்பு 27 செப்டம்பர் 2024 அன்று நிறைவுற்றது.[147] எனினும் மூன்று வாரங்களுக்குப் பின் ஒருசில கூடுதல் பிடிப்புகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட்டன.[148]
முந்தைய படங்களைப் போலவே, தொன்மாக்கள் மற்றும் பிற பழங்கால உயிரினங்களுக்கான கணினியுருப்பட (CGI) பணியை இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் (ILM) நிறுவனம் கையாண்டது.[149][150] குறைவான முன்-தயாரிப்பு காலம் காரணமாக, ரீபர்த் குழு அசைவூட்ட (animatronics) தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தவில்லை.[151] எனினும், நடிப்புக்கு உதவ சில தோராய மாதிரிகள் கையாளப்பட்டன.[152] முன்பு ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தில் அசைவூட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றிய ஜான் நோலன், ரீபர்த் படத்துக்காக தொன்மாக்களின் தலை, கைகள், நகங்கள் உள்ளிட்ட பகுதிகளை உருவாக்கினார். இவை முதன்மையாக ஒளி மற்றும் கண்ணோட்ட இலக்குகளாகப் பயன்படுத்தப்பட்டன. பிந்தைய தயாரிப்பில் CGI மாதிரிகள் அவ்விடங்களில் பொருத்தப்பட்டன. ILM நிறுவனத்துக்கு, தொன்மா வடிவமைப்புகளை இறுதி செய்ய ஆறு வாரங்களே இருந்தன.[153]டொமினியன் படத்தில் ஆலோசகராக பணியாற்றிய தொல்லுயிர் ஆய்வாளர் ஸ்டீவன் எல். ப்ரூசாட்டே-வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.[154]
டிஸ்டார்டஸ் ரெக்ஸின் வடிவமைப்பு, ஏலியன் கதைக்குழுமத்தின் செனோமார்ஃப்கள் (Xenomorphs) மற்றும் ஸ்டார் வார்ஸ் கதைக்குழுமத்தின் இரான்கார் (rancor) உயிரினங்களை மாதிரியாகக் கொண்டு உருவானது.[155][156] ILM நிறுவனத்தின் காட்சி விளைவு மேற்பார்வையாளர் டேவிட் விக்கரி கூறுகையில் "அதன் குமிழ் வடிவத் தலை, T-ரெக்ஸைச் சுற்றி மற்றொரு விலங்கைப் போர்த்தியது போன்ற தோற்றத்தை அதற்குத் தருகிறது. நாங்கள் அதற்காக இரக்கமும் அதேசமயம் அச்சமும் படவேண்டும் என கரேத் விரும்பினார். ஏனெனில் அதன் உருமாற்றங்கள் அதற்கு வலியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அதற்கு இடையூறும் உள்ளது" என்றார்.[157] இவ் வடிவமைப்பில் எட்வர்ட்ஸ், பெரிதும் ஈடுபட்டார். அவர் பரிந்துரைப்படி அதற்கு கொரில்லா போன்ற கைகளும் அசைவுகளும் சேர்க்கப்பட்டன.[158]
மற்றொரு திரிபு உயிரினமான மியூட்டடான், டெரோசோர் மற்றும் வெலாசிராப்டரின் கலப்பாகும். இவற்றின் வடிவமைப்பு, கோப் தன் வீட்டு மொட்டை மாடியில் கண்ட ஒரு வௌவாலை அடிப்படையாகக் கொண்டது.[159] கதைப்படி இன்ஜென் நிறுவனம், தொடக்க காலத்தில் கலப்பினத் தொன்மாக்களை உருவாக்க முயன்று தோற்றது. அம்முயற்சியின் ஒரு விளைவே மியூட்டடான் என கோப் விளக்கினார். ஒன்பது மாதங்களாக இதன் வடிவமைப்பு பல மாற்றங்களுக்கு உட்பட்ட பின் 2024 இறுதியில் தெரிவு செய்யப்பட்டது.[160][161]
முன்பு ஜுராசிக் பார்க் III (2001) படத்தில் இடம்பெற்ற ஸ்பைனோசாரஸ், ரீபர்த்-தில் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இடைப்பட்ட காலத்தில் வெளியான புதிய ஆய்வுகளின் அடிப்படையில், மறுவடிவமைப்புக்கு உட்பட்டு, ஒரு அரை நீர்வாழ் உயிரினமாகக் காண்பிக்கப்பட்டது.[162] விக்கரி, "நாங்கள் அதற்கு மிகவும் வலுவான பின்னங்கால்கள், மிகப் பெரிய அகண்ட வால், கால்களுக்கு இடையில் வலைப்பின்னல், கொழுப்புப் படிவுகளும் கூடுதல் தோல் மடிப்புகளும் கொண்ட குறுகிய வலுவான கழுத்து ஆகிய தோற்றத்தைத் தந்துள்ளோம்" என்றார். முதலைகள் மற்றும் சாம்பற்கரடிகளை ஆய்வு செய்து, ஸ்பைனோசோரஸின் வடிவமைப்பையும் நடத்தையையும் ILM நிறுவனம் தீர்மானித்தது.[163]
முந்தைய படங்களில் தோன்றிய அபடோசோரஸ், ஆன்கைலோசோரஸ், காம்ப்சோக்னாதஸ், டைலோபோசோரஸ், மோசசாரஸ், பாராசாரோலோபஸ், டெரனாடான், குவெட்சல்கோட்லஸ், டைரனோசோரஸ் ஆகிய இனங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.[164][165] புதிய இனங்களாக டைட்டேனோசோரஸ் மற்றும் அனுரோக்நாதஸ் (டெரோசோர் வகை) ஆகியன அறிமுகமாகியுள்ளன.[166] எட்வர்ட்ஸ், இறகு கொண்ட தொன்மாக்களை சேர்க்கவில்லை. ஏனெனில் அவை "பெரிய கோழிகளைப் போல தோற்றமளித்தான; பயமுறுத்துவதாகவே இல்லை" என்று அவர் கருதியதாக விக்கரி கூறினார்.[167]
டைரனோசோரஸ், முந்தைய படத் தோற்றங்களிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில், தி வேலி ஆஃப் குவாங்கி (1969) திரைப்படத்தில் வரும் தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.[168] "ஆரோக்கியமான, கனமான, தசைப்பிடிப்பு மிக்க, காளை போன்ற" விலங்கு எனினும் ஒரு சராசரி ஜுராசிக் பார்க் T. ரெக்ஸ்-சின் தோற்றம் கொண்டது என்பதாக அதை விக்கரி வருணித்தார்.[169] ஆற்றுப்பகுதி துரத்தல் காட்சி ILM-க்கு சவாலாக இருந்தது, ஏனெனில் T. ரெக்ஸ் நீருக்கடியில் எவ்வாறு நகரும் என்பதை தீர்மானிக்க வேண்டியிருந்தது.
முந்தைய படங்களைப்போலவே ரீபர்த் -திலும் வெலாசிராப்டர் இடம்பெற்றுள்ளது. இது, ஜுராசிக் பார்க் III படத்தின் அடிப்படையிலான புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.[170]
டைட்டேனோசோரஸ் இனச்சேர்க்கை காட்சிக்கு ஒட்டகச் சிவிங்கி மற்றும் அன்னம் தொடர்பான காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டன.[171] தாய்லாந்தில் உள்ள புல்வெளியில் படப்பிடிப்பு நடந்தபோது CGI கலைஞர்களின் இலக்காகப் பயன்படுத்த ஒரு யானை கொண்டுவரப்பட்டது.[172]
முதன்மை டைனோசர்களில் ஒன்றான அகிலோப்ஸ், படத் தொடருக்குப் புதியது.[173] பதினெட்டு அங்குல நீளமுடைய மூன்று அசைவுயூட்ட (தோராய) மாதிரிகள், கைப்பாவைக் குழுவால் தொலைவிலிருந்து இயக்கப்பட்டன. முதன்மை மாதிரியானது மூச்சு, கண் சிமிட்டல், வாலாட்டுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள பல இயக்கிகளைக் கொண்டிருந்தது. நடிகர்களுடன் நெருங்கும் காட்சிகளுக்கு இது பயன்பட்டது. மற்றொரு மாதிரி, கதைமாந்தரால் தூக்கப்படும் காட்சிகளுக்கும், மூன்றாம் மாதிரி ஒளி இலக்காகவும் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்திலும் முப்பரிமாண அச்சாக்க பகுதிகள் இருந்தமையால், வழக்கமான அசைவூட்ட மாதிரிகளை விட இவை குறைவான எடையையே கொண்டிருந்தன.[174]
பின் தயாரிப்பு
2024 இறுதியில், எட்வர்ட்ஸ், ரீபர்த்-தின் முதல் வெட்டு வடிவத்தை முடித்தார். படம் இரண்டு மணி நேரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், அவ் வடிவம், பங்களிப்புப் பட்டியல் (credits) தவிர்த்து (எட்வர்ட்ஸ் வகுத்த) இவ் வரையறைக்கு ஒரு மணித்துளி குறைவாக இருந்தது. இதற்காக ஐந்து மணித்துளிகளை நீக்கிய எட்வர்ட்ஸ், பின்னர் யுனிவர்சல் நிருவாகிகளின் கோரிக்கையின் பேரில் அவற்றை மீட்டெடுத்தார்.[175] இறுதி திரையரங்கு வெட்டில் மூன்று காட்சிகள் இல்லை. அவற்றில் இரண்டை அகற்றுவதில் எட்வர்ட்ஸ் தயங்கவில்லை. மூன்றாவது காட்சியை (எரிபொருள் நிலையத்தில் கூடுதல் பிடிப்புகள்) "[கதைமாந்தர்] பின்தொடரப்படுவது போன்றது. ஏதோ வருகிறது என்பதற்கான பதற்றம்" என்று எட்வர்ட்ஸ் வருணித்தார். படத்தின் விரைவுத்தன்மை கொண்ட மூன்றாம் அங்கத்தை அது மெதுவாக்கியதால் நீக்கப்பட்டது.[176] ஸ்பில்பேர்க் தனக்கு வழங்கிய சிறந்த அறிவுரை, காட்சிகளைக் குறைப்பது என எட்வர்ட்ஸ் கூறினார். மேலும் "இது ஒரு உணவு போன்றது...சிறந்த பதிப்பு என்னவென்றால், [நுகர்வோர்] சற்றே பசியுடன் வெளியேறுவார்கள், பின்னர் மீண்டும் வரிசையில் வந்து அதை மீண்டும் நுகர்வார்கள்" என்று ஸ்பில்பேர்க் கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார்.[177][178]
பின்தயாரிப்பின்போது , டிஸ்டார்டஸ் ரெக்ஸுடன் டைரனோசோரஸ் சண்டையிட்டு கதைமாந்தர்களை [மறைமுகமாக] காப்பாற்றுவதான இறுதிக் காட்சியை எட்வர்ட்ஸ் பரிசீலித்தார், ஆனால் அதில் அசல்தன்மை இல்லை என அம் முடிவை பிறர் நிராகரித்தனர். தொடரின் முந்தைய படங்கள் அப்படியான மோதலைக் காட்டியே நிறைவுற்றதை அவர்கள் குறிப்பிட்டனர்.[179]
முதல் ஜுராசிக் பார்க் படத்தை நினைவுபடுத்தும் பல மறைகுறிப்புகள் இந்த வெட்டு வடிவத்தில் இருந்தன. ஆனால் ஸ்பில்பேர்க்-கும் கோப்-பும் இவற்றை நீக்கக் கோரினர், இருப்பினும் இறுதியில், அவற்றுள் பெரும்பாலானவற்றை அப்படியே வைத்திருக்க எட்வர்ட்ஸ் அனுமதிக்கப்பட்டார். முதல் படத்தில் தோன்றிய மிஸ்டர் டி.என்.ஏ, இதில் மீண்டும் இடம்பெறுவதாக இருந்து பின்னர் நீக்கப்பட்டது.[180]
மார்ச் 2025 வாக்கில், ILM மற்றும் படத்தொகுப்பாளர் ஜாபெஸ் ஆல்சனுடன் வாரத்தின் ஏழு நாட்களிலும் பணியாற்றிக்கொண்டிருந்தார் எட்வர்ட்ஸ்.[181] மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட காட்சி விளைவுகளை ILM உருவாக்கியது, இது ஜுராசிக் தொடரிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும். படத்தின் மொத்தப் பணிகளும் மே 2025 இல் நிறைவடைந்திருந்தன.[182]
முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களுக்கு இசையமைத்த மைக்கேல் ஜெய்சினோவுக்கு மாற்றாக ரீபர்த் படத்துக்கு அலெக்சாண்டர் டெசுபிளாத் இசையமைத்தார். முன்னதாக அவர் எட்வர்ட்ஸ் இயக்கிய காட்சில்லா (2014) படத்துக்குப் பங்களித்திருந்தார்.[183][184] இலண்டனில் உள்ள அபே ரோடு ஸ்டுடியோஸில் 105 பேர் கொண்ட சேர்ந்திசைக்குழு மற்றும் 60 பேர் கொண்ட பாடல்குழு இசையை பதிவு செய்தது. முதல் இரு ஜுராசிக் பார்க் படங்களில் இடம்பெற்ற ஜான் வில்லியம்ஸின் கருப்பொருள் இசை ரீபர்த் ஒலித்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.[185] முனைவர் ஹென்றியாக நடித்த ஜோனதன் பெய்லி இந்த ஒலித்தொகுப்புக்காக கிளாரினெட் கருவியையும் இசைத்துள்ளார்.[186] இசைத்தொகுப்பு, படத்துடன் 2 சூலை 2025 அன்று யுனிவர்சல் ஸ்டுடியோஸின் பேக் லாட் மியூசிக் கலையகத்தின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது.[187]
சந்தைப்படுத்தல்
படத்தின் தலைப்பும் (ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்) இரண்டு முதல் தோற்ற ஒளிப்படங்களும் 29 ஆகத்து 2024 அன்று வெளியாகின.[188] இப் படம், முதல் ஜுராசிக் பார்க் படத்திற்கு ஒரு புகழாரமாக விளம்பரப்படுத்தப்பட்டது (அப் படத்தின் இரசிகர்களை இலக்காகக் கொண்டு).[189] முதல் முன்னோட்டம் 5 பிப்ரவரி 2025 அன்று வெளியானது.[190] அதற்கு முன்பே பல நிலைப்படங்கள் (film stills) வந்திருந்தன.[191][192][193]எம்பயர் இதழின் பென் டிராவிஸ், இப் படம் "காட்சி ரீதியாக அற்புதமாக" உள்ளதாகவும், முதல் ஜுராசிக் பார்க் படத்தை நினைவூட்டுவதாகவும் கூறினார்.[194]ரீபர்த் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் சூப்பர் பவுல் LIX ஆட்டத்தில் 9 பிப்ரவரி 2025 அன்று 60-நொடி நீளம் கொண்ட ஒரு தொலைக்காட்சி விளம்பரம் ஒளிபரப்பபானது.[195] இரண்டாவது முன்னோட்டம் 20 மே 2025 அன்று வெளியானது.[196]
மேட்டல் மற்றும் லெகோ பொம்மை நிறுவனங்கள், ரீபர்த் படத்தை அடிப்படையாகக் கொண்ட பொம்மைகளை உருவாக்கின.[197][198] பிற சந்தைப்படுத்தல் பங்காளர்களாக 7-இலவன் (இதில் இணைக்கப்பட்ட ஸ்பீட்வே, ஸ்ட்ரைப்ஸ் உட்பட ), ஃபன்கோ போன்ற நிறுவனங்கள் இருந்தன.[199][200][201] 2025 என். பி. ஏ. பிளே ஆஃப் ஆட்டங்களின்போது ரீபர்த் படம் குறித்து ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் தொழில்முறை கூடைப்பந்தாட்ட வீரர் ஷாய் கில்ஜியஸ்-அலெக்சாண்டர் தோன்றினார்.[202] யுனிவர்சல் ஆட்கள், விளம்பரப்படுத்தல் நோக்கில் இன்ஸ்ட்டாகிராம்சமூக ஊடகத்தில் ஸ்கார்லட் ஜோஹன்சன் சேர வேண்டுமென விரும்பினர். ஆனால், அப்படிச் செய்யாமலேயே படம் வெற்றிபெறும் என்று நம்பிய ஜோஹன்சன் அதை மறுத்துவிட்டார்.[203] இருப்பினும் அவர், மேட்டல் பொம்மைத் தொகுப்பை விளம்பரப்படுத்தும் ஒரு இணையதளக் காணொளியில் தோன்றினார்.[204][205]
வெளியீடு
ஜுராசிக் வேர்ல்ட்:ரீபர்த், முதல்முறையாக 17 ஜூன் 2025 அன்று இலண்டனில் உள்ள ஓடியன் லக்ஸ் லெஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது.[206][207] ஐக்கிய அமெரிக்காவில் , 2 சூலை 2025 அன்று யுனிவர்சல் ஸ்டுடியோஸ் படத்தை வெளியிட்டது.[208][209]
உயிரோட்டப் படங்களுக்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் யுனிவர்சல் செய்துள்ள நீண்டகால ஒப்பந்தத்தின்படி, ரீபர்த் படம் முதல் நான்கு மாதங்களுக்கு பீகாக் தளத்தில் இருக்கும். பின்னர் அடுத்த 10 மாதங்களுக்கு பிரைம் வீடியோவுக்கு மாறும். மீதமுள்ள நான்கு மாதங்களுக்கு பீகாக்கில் இருக்கும்.[210][211]
வரவேற்பு
வருவாய்
20 சூலை 2025 வரை ஜுராசிக் வேர்ல்ட்ரீபர்த், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவில் $276.5 மில்லியனும், மற்ற பகுதிகளில் $373.3 மில்லியனும் ஈட்டியுள்ளது. உலகளவில் மொத்தம் $649.8 மில்லியன் ஈட்டியுள்ளது.[3][4]
உள்நாடு
ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜுராசிக் வேர்ல்ட்ரீபர்த், 5-நாள் முதல் வார இறுதியில் $100–125 மில்லியன் ஈட்டும் என தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் , $115–135 மில்லியன் ஈட்டும் என டெட்லைன் ஹாலிவுட் ஆகியவை மதிப்பிட்டன.[212][213] படம் வெளியான வாரத்தில், உலகளவில் தொடக்க ஈட்டல் $260 மில்லியன் என டெட்லைன் ஹாலிவுட் மதிப்பிட்டது. உள்நாட்டு 5-நாள் ஈட்டல் $120–130 மில்லியனாக இருக்கும் என்றும் அது கணித்தது.[214] 5 சூலை 2025 நிலவரப்படி, 5-நாள் முதல் வார இறுதியில் உலகளவில் $312 மில்லியன் ஈட்டும் என மதிப்பிடப்பட்டது.[215][216]
தொடக்க நாளில் $30.5 மில்லியன் ஈட்டியமையால், 5-நாள் ஈட்டல் சிற்றெல்லை $133.5 மில்லியனாக உயர்ந்தது.[217][218] அடுத்த நாள் $25.3 மில்லியன் ஈட்டியமையால், வார இறுதி மதிப்பீடு $137.5 மில்லியனாகத் திருத்தப்பட்டது.[219][220][221]
சூலை 4 அன்று, உள்நாட்டு ஈட்டல் $26.3 மில்லியனாக இருந்தது. டெட்லைன் ஹாலிவுட் 5-நாள் மதிப்பீட்டை $141.2 மில்லியனாக உயர்த்தியது.[222]
சூலை 5 அன்று, $35.6 மில்லியன் ஈட்டியமையால், டெட்லைன் ஹாலிவுட் செய்த 5-நாள் மதிப்பீடு $145.3 மில்லியனாக உயர்ந்தது.[223][224] ஐந்து நாட்கள் நீடித்த ஐக்கிய அமெரிக்க விடுதலை நாள் விடுமுறை முடிவில் $147.8 மில்லியன் ஈட்டி, வருவாய் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது ரீபர்த். இதில் மூன்று நாள் வார இறுதி ஈட்டலான $92 மில்லியன், உலகளவில் ஈட்டிய $322.6 மில்லியனும் அடங்கும்.[225][226]
இரண்டாவது வார இறுதியில், $40.3 மில்லியன் ஈட்டியமையால் 56.2% வருவாய் வீழ்ச்சியடைந்து, புதிய வருகையான சூப்பர்மேன் (2025) படத்துக்குப் பின் இரண்டாம் இடம் பெற்றது.[227]
அயலகம்
இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்[228] வெளியான ரீபர்த் படம், முன் திரையிடல்கள் தவிர்த்து முதல் நாள் அதிகபட்ச ஈட்டல் செய்தது. இது ஜுராசிக் தொடரிலேயே உயரிய சாதனையாகும்.[229][230][231] சூலை 19 நிலவரப்படி இந்தியாவில் ஈட்டல் ₹1 பில்லியன் (ஐஅ$12 மில்லியன்) ஆக இருந்தது.[232] அதிகம் ஈட்டல் அளித்த நாடுகளாக சீனா ($41 மில்லியன்), ஐக்கியஅரசகம் ($16.6 மில்லியன்), மெக்சிக்கோ ($13.9 மில்லியன்), ஜெர்மனி ($7.6 மில்லியன்) ஆகியவை உள்ளன.[233]
ஒரு முழு வாரம் கடந்தபின் , ரீபர்த் படம் உலகளவில் $410 மில்லியனுக்கு சற்று கீழே ஒரு தொகையை ஈட்டியது.[234] இரண்டாவது வார இறுதியில், $11.1 மில்லியன் ஈட்டியமையால். சீன வருவாய்ப் பட்டியலில் முதலிடம் பெற்றது.[235]
திறனாய்வுகள்
சினிமாஸ்கோர் நிறுவனத்தின் வழியே கருத்து கேட்கப்பட்ட பார்வையாளர்கள், ரீபர்த் படத்துக்கு A+ முதல் F வரையிலான அளவுகோலில் சராசரியாக "B" மதிபீட்டை அளித்தனர்.[236]மெட்டாக்ரிடிக் தளம், எடையிடப்பட்ட சராசரி முறையைப் பயன்படுத்தி, 54 திறனாய்வுகளின் அடிப்படையில், "கலவையான அல்லது சராசரி" மதிப்பீடுகளைக் குறிக்கும் வகையில் 100-க்கு 50 மதிப்பெண்ணை வழங்கியது. மதிப்பாய்வு திரட்டி இணையதளமான அழுகிய தக்காளிகள் (Rotten Tomatoes) தளத்தில், 352 திறனாய்வாளர்களுள் 51% பேர் நேர்மறையான மதிப்பீட்டை அளித்தனர். "விறுவிறுப்பான உருப்படிகள் மற்றும் புதைபடிவமான தேய்வழக்குகளுடன் அடிப்படைக்குத் திரும்பியுள்ள ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், இத் தொல்பழங்காலக் கதைத்தொடரை முன்னேற்றவில்லை. ஆனால் அதன் மிக நம்பகமான டி.என்.ஏ-வில் சிலவற்றை மீட்டெடுத்துள்ளது" என ராட்டன் டொமாட்டோஸ் தளத்தின் ஒருமித்த கருத்துப்பகுதி கூறுகிறது.[237]
தொடக்க கட்டத் திறனாய்வுகள் கலவையாக இருந்தன.[238][239]வெரைட்டி இதழின் பீட்டர் டெப்ரூஜ், "32 ஆண்டுகளுக்கு முன் ஸ்பில்பேர்க் வழங்கிய அதே அடிப்படைப் பயணத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை [ரீபர்த்] வழங்குகிறது, ஆனால் இது தொடரின் ஒட்டுமொத்தத் தொன்மத்துக்கு இன்றியமையாததாக இல்லை. தொடர் எங்கு செல்கிறது என்பதை உணர்த்தவுமில்லை" என்றார்.[240]
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இதழின் டேவிட் ரூனி, "எட்வர்ட்ஸ், ஸ்பில்பேர்க்கின் தீவிர இரசிகர் என்பது தெளிவாகிறது. ஜாஸ் படத்தை நினைவூட்டும் திறந்தவெளி நீர் காட்சிகளில் நுட்பமான புகழாரங்களை உட்பொதித்துள்ளார். ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் யாருடைய திரைத்தொடர் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பில்லை, ஆனால் [இத்தொடரின்] நீண்டகால இரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள்," என்றார்.[241]
தி கார்டியன் இதழின் பீட்டர் பிராட்ஷா, "எதிர்பார்க்கப்பட்ட ஸ்பில்பேர்க் பாணி உருப்படிகள் மற்றும் முன்னணிக் கதைமாந்தருக்கு இடையேயான சிறந்த காதல் வேதியியல் [ஆகியவை உள்ளதால்] அண்மைக்காலத் தோல்விகளுக்குப் பிறகு [இப் புதிய பகுதி] மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது," என்றார்.[242]தி ராப் ஊடகத்தின் பில் பிரையா, "ஜுராசிக் தொடர் ஒரு உயர்ந்த தகுதிக்கோட்டை நிறுவியதால் அதன்படியே உயிர்த்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது... முதல் படம் திரைத்துறையை புரட்சிகரமாக்கியது. ரீபர்த், வெகுவாக இந்த நிலையை அறிந்துள்ளது. சலித்துவிட்ட மக்களுக்கு தொன்மாக்கள் பழைய செய்தியாக மாறியதை இடை கருப்பொருளாக (meta theme) கொண்டுள்ளது...[ஆனால்] சீஸ்பர்கர்கள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்பதாலேயே அவை சுவையாக இருக்க முடியாது என்று பொருளில்லை. ஜுராசிக் பார்க் ரீபர்த், நன்கு தயாரிக்கப்பட்ட ஒரு சீஸ்பர்கர். அது நிறைவும் ஆர்வமும் அளிக்கிறதா என்பது உங்கள் பசியைப் பொறுத்தது" என்றார்.[243]
டெட்லைன் ஹாலிவுட் தளத்தின் பீட்டர் ஹேமண்ட், "குருதி மாதிரிகளை எடுக்க இந்த மாந்தர்கள், [வேறொரு காலத்தை சேர்ந்த அச்சுறுத்தும் பேருயிர்களை சந்திப்பது உறுதி என்ற நிலையில்] தடைசெய்யப்பட்ட காட்டுக்குச் செல்வது நம்புவதற்கு சவாலானதாக இருக்கலாம், ஆனால் இந்த முன்மொழிவை நீங்கள் துணிந்து ஏற்றால், அனைவருக்கும் நல்ல நேரம் கிடைக்கும்" என்றார்.[244]த டெயிலி டெலிகிராப் நாளிதழின் டிம் ரோபி, மறுபிறப்பு படத்திற்கு ஐந்து விண்மீன் மதிப்புக்குறி வழங்கி, முதல் [ஜுராசிக்] படத்திற்கு பின் வந்த சிறந்த படம் என்று பாராட்டினார், காட்சி மற்றும் ஒலி வடிவமைப்பு முதல் படத்திற்குப் பின் சிறப்பாக வந்துள்ளதாக அவர் கூறினார்.[245]
எம்பயர் இதழின் இயன் ஃப்ரீர், "[ரீபர்த்] துணிவான அல்லது புதுமையான எதையும் செய்யவில்லை, ஆனால் ஒரு வேடிக்கையான, நன்கு தயாரிக்கப்பட்ட கோடைகால கருப்பொருள் பூங்கா சவாரியை வழங்குகிறது, விரைவான உச்சங்கள் மற்றும் மெதுவான தாழ்ச்சிகளுடன். மகிழ்ச்சியானதுதான். ஆனால் நீடித்து நிலைத்ததல்ல" என்றார்.[246] முதல் ஜுராசிக் பார்க் உருவாக்கிய வார்ப்புருவை ரீபர்த் பின்பற்றுவதாகவும் ஆனால் முன்னதுக்கு ஈடாக முடியவில்லை எனவும், இத்தொடரிலேயே மிகவும் வலுவற்ற படம் எனவும் பிபிசி ஊடகத்தின் கேரின் ஜேம்ஸ் கூறினார்.[247]
வல்ச்சர் ஊடகத்தின் அலிசன் வில்மோர், "பார்வையாளர்களுக்கு ஜுராசிக் வேர்ல்ட் படங்கள் [தரும் உள்ளடக்கம்] குறித்த ஆவல் தீராமல் இருக்கலாம்...ஆனால் இவற்றை உருவாக்கும் பணியில் உள்ளோருக்கு யோசனைகள் உறுதியாகத் தீர்ந்துவிட்டன. ரீபர்த் உண்மையாகவே சலிப்பு தருகிறது. கதைத்தொடரின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவது போல" என்றார்.[248]
பிளடி டிஸ்கஸ்டிங் ஊடகத்தின் மீகன் நவாரோ, "ரீபர்த் சரியான திசையில் ஒரு அடி எடுத்து வைக்கிறது, ஆனால் முந்தைய முத்தொகுப்பு, இக் கதைக்குழுமத்தை முற்றாக ஒரு மூலையில் முடக்கிவிட்டது. அதனால் இத் தொடரை அழிய விடவேண்டிய நேரம் வந்துவிட்டது போலும்" என்றார்.[249]லிட்டில் ஒயிட் லைஸ் இதழின் டேவிட் ஜென்கின்ஸ், "இந்த சாவுத்தருவாயில் உள்ள முடிவடையாத கதைக்குழுமம் ஒரு திருப்புமுனையைப் பெற்றிருக்கும் என்ற நம் நம்பிக்கை மெழுகுவர்த்தியை எட்வர்ட்ஸின் ஈடுபாடு மட்டுமே எரிய வைத்தது. ஆனால் முழு வேகத்தில் வேலை செய்தாலும் இப்பணியில் தவறான, முட்டாள்தனமான, நகலெடுத்த விடயங்கள் அளவுகடந்து உள்ளன. நடிகர்கள் திறமையானவர்கள்; சில சுவையான துணுக்குகள் உள்ளன; விளைவுகள் நேர்த்தியானவை. ஆனால் முழு கதைக்குழுமமும், நாம் மீண்டும் மீண்டும் பார்த்த அதே விடயத்தைப் போலவே உணரப்படுகிறது. மேலும் ஒரு 'புதிய தொப்பி' சேர்க்கப்பட்டுள்ளமை, எரிச்சலூட்டும் காரணியாகத் தோன்றுகிறது. புதிய ஒன்றை உருவாக்குவதற்கான பரிசாக இல்லை." என்றார்.[250]
இன்வர்ஸ் தளத்தின் சித்தாந்த் அத்லாக்கா, "ரீபர்த்தில் உண்மையான புதுமை ஏதும் இல்லை. மிக அரிதாகவே பழையவற்றை [புத்தாக்கத்துடன்] வழங்குகிறது. இதனால், இத் தொடரின் மீதமுள்ள பகுதிகளுடன் இது பெயரளவிலான இணைப்புகளை மட்டுமே கொண்டுள்ளது என்பது ஒரு நிம்மதி" என்றார்.[251] ரோஜர்எபர்ட்.காம் ஊடகத்தின் கிறிஸ்டி லெமைர், "புத்திசாலித்தனமான காட்சி சார்ந்த நகைச்சுவைகள், கைவண்ணங்கள் [உள்ளிட்டவை] இதில் சற்று மகிழ்ச்சியை அளிக்கின்றன. இவை ஜுராசிக் படங்கள் நீண்டகாலமாக வழங்கிய கோடைகாலக் கேளிக்கையை நினைவூட்டுகின்றன, ஆனால் அந்தப் பெரிய கால்தடம், முன்பு இருந்த அளவுக்கு வியக்கத்தக்கதாக இல்லை," என்றார்.[252] ஜோப்லோ.காம் ஊடகத்தின் கிறிஸ் பம்ரே, "இக் கோடையின் மாபெரும் ஏமாற்றங்களில் ஒன்றான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த், இத் தொடருக்கு நீண்ட இடைவெளி தேவை என்பதை ஒருவழியாக நிறுவுகிறது" என்றார்.[253]லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் ஆமி நிக்கோல்சன், இதை "வியப்போ மதிப்போ அற்ற அப்பட்டமான அரக்கத் திரைப்படம்" என்றார்.[254]
ரீபர்த் படத்தின் கதையோட்டத்தில் தோன்றும் ஸ்னிக்கர்ஸ் (சாக்லெட்) மற்றும் Heineken (பியர்) போன்ற வகைக்குறிகளுக்கான விளம்பரங்கள் கவனச்சிதறலை ஏற்படுத்துவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், Cracked.com, El País மற்றும் Pajiba ஆகிய ஊடகங்களைச் சேர்ந்த திறனாய்வாளர்கள் கருதினர்.[255][256][257][258]
↑Guzman, Rafer (March 29, 2013). "'Jurassic Park' returns in 3-D: Dino-mite". Newsday. Archived from the original on June 22, 2017. Screenwriter David Koepp, who worked on the first two films, says he declined. "One movie takes a lot of thinking on a subject, two movies takes an enormous amount, and I just didn't feel like I had enough fresh thinking", Koepp says.
↑Fuster, Jeremy (July 5, 2025). "'Jurassic World: Rebirth' Feasts On $141 Million Extended Box Office Launch". The Wrap. Retrieved July 6, 2025. Universal/Amblin's 'Jurassic World: Rebirth' is proving why dinosaurs have such staying power at the box office as it heads for an extended box office opening of $141 million over five days and a global $312 million start.