ரூபாய்இந்தக் கட்டுரை ஆசியாவில் பல நாடுகளிலும் புழக்கத்தில் உள்ள நாணயத்தைக் குறித்ததாகும். ![]() ![]() ![]() உருபாய் அல்லது ரூபாய் (Rupee) (சுருக்கமாக ரூ.(Re. அல்லது Rs.)) என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மொரீசியஸ் சீசெல்சு, மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மதிப்புடைய நாணயங்களின் பொதுப்பெயராகும். முன்னதாக மியான்மர், ஆப்கானித்தான் நாணயங்களும் ரூபாய் என்றே அழைக்கப்பட்டு வந்தன. இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருபியா என்றும், மாலத்தீவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருஃபியா என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்றுப்படி வட இந்தியாவில் சூர் பேரரசை நிறுவிய சேர் சா சூரி தான் முதன்முதலாக ரூபாய் என்ற நாணயத்தை 16ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது. இது வெள்ளிக் காசு எனப்பொருள்படும் ரூப்யா, என்ற சமசுகிருதச் சொல்லிலிருந்து அல்லது[1] செங்கிருத ரூபா, அழகு,வடிவம் என்றச் சொல்லிலிருந்து [2] உருவானது. ![]() ![]() இந்தியாவிலும் பாக்கித்தானிலும் நூறு புதிய பைசாக்கள் ஓர் இந்திய உரூபாய்க்கு (ரூபாய்க்கு)ச் சமமாகும். மொரீசியசின் ரூபாயும் இலங்கை ரூபாயும் நூறு சென்ட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் ரூபாய் நூறு பைசாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோகார்களாகவும் நான்கு சுக்காக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆப்கானித்தானில் 1925 வரை ரூபாய் என்றே அழைக்கப்பட்டு வந்தது; ஒவ்வொரு ஆப்கானித்தானிய ரூபாயும் 60 பைசாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 1891இல் ஆப்கன் ரூபாய் அறிமுகமாவதற்கு முன்னதாக அங்குள்ள சட்டபூர்வ நாணயம் காபூலி ரூபாய் எனப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுவம் வரை திபெத்தின் அலுவல்முறை நாணயமும் திபெத்திய ரூபாய் என்றே அழைக்கப்பட்டது.[3] 1959 வரை துபையிலும் கத்தாரிலும் இந்திய ரூபாயே அலுவல்முறை நாணயமாக இருந்தது. 1959இல் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்காக இந்தியா வளைகுடா ரூபாய் என்ற புதிய நாணயத்தை (வெளிநாட்டு ரூபாய் எனவும் அறியப்பட்டது) வெளியிட்டது.[4] 1966 வரை புழக்கத்தில் இருந்த வளைகுடா ரூபாய் இந்திய ரூபாயின் மதிப்பிழப்பிற்குப் பின்னர் கைவிடப்பட்டு, புதிய கத்தாரி ரியால் நாணயம் உருவானது.[4] பெயர்க்காரணம்'வெள்ளி' எனப் பொருள் தரும் சமசுகிருத சொல்லான ருப்யா-விலிரிருந்து ரூபாய் என்ற சொல் பிறந்தது. இன்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "டாலர்" என்ற ஆங்கில நாணயப் பெயருக்கு இணையாக வெள்ளி என்ற தமிழ் சொல்லே சிங்கப்பூர்த் தமிழரகளால் பயன்படுத்தப்படுகிறது. 1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த ஷேர் ஷா சூரி அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ருபியா ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 கிராம் எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், ஒரு அணா நான்கு பைசாக்கள் அல்லது 12 காசுகளாகவும் அல்லது பைகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை பதின்ம முறையில் நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை இலங்கையில் 1869லும், இந்தியாவில் 1957லும் பாகித்தானில் 1961லும் நடைமுறைக்கு வந்தது. ரூபாயின் பல்வேறு பெயர்களும் உச்சரிப்புக்களும்"ரூபாய்" ஆங்கிலக் குறிகளில் Re. (ஒருமை), Rs. (பன்மை) என்றும் வழங்கப்பட்டு வருகிறது. 2012இல் இந்திய ரூபாய்க்கு தேவநாகரி எழுத்தான र (ர)வையும் உரோமானிய தலையெழுத்தான R-ஐயும் இணைத்து ₹ (இந்திய ரூபாய்க் குறியீடு) ஏற்படுத்தப்பட்டது.[5] வெவ்வேறு மொழிகளும் 'ரூபாயை' பல்வேறாக வெளிப்படுத்துகின்றன:
மதிப்புசேர் சா சூரியால் அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் வெள்ளியால் ஆனதாக இருந்தது. 178 கழஞ்சுகள் அல்லது 11.534 கி எடை உள்ளதாக இருந்தது. இந்த நாணயம் பிரித்தானிய இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரித்தானியர்கள் ரூபாயின் மதிப்பை 11.66 கிராம் 0.917 தூய்மையான வெள்ளியாக வரையறுத்தனர். இது டிராய் அவுன்சில் 0.3437ஆக இருந்தது. [6][7] நாணயத்திலுள்ள வெள்ளியின் மதிப்பைக்கொண்டு நாணயமாற்றுக்களைக் கணக்கிடுவது 19வது நூற்றாண்டில் மிகுந்த சிக்கல்களை உருவாக்கின. உலகின் பலநாடுகளும் தங்கமாற்று சீர்தரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பிய குடியேற்றங்களிலும் மிகுந்த வெள்ளி இருப்புக்கள் கண்டறியப்பட்ட நிலையில் தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் மதிப்பு வீழலாயிற்று. இதனால் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் இந்திய வெள்ளி ரூபாயின் மதிப்பு தங்கமாற்று சீர்தரத்துடன் இணைக்கப்பட்டு பிரித்தானிய நாணயமாற்றில் ஒரு ரூபாய் ஒரு சில்லிங்கும் நான்கு பென்சுக்கும் (அல்லது 1 ₤= 15 ரூபாய்கள்) சமமாக்கப்பட்டது. இவற்றையும் பார்க்கவும்மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia