இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கான 20-வது திருத்தம் (20th Amendment (20A) to the Constitution of Sri Lanka) 225-உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 156 வாக்குகள் ஆதரவாகவும், 65 எதிராகவும் பெற்று 2020 அக்டோபர் 22 அன்று நிறைவேற்றப்பட்டது.[1][2] ராஜபக்ச குடும்பத்தின் மீதான 20 வது திருத்தத்தின் சார்பு குறித்து அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூகக் குழுக்கள், மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோர் கவலைகளை வெளிப்படுத்தியதால் இத்திருத்தம் அரசியல் சர்ச்சைக்குள்ளானது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை இது மீறுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.[3] இம்முன்மொழிவுகள் மூலம் 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 19-வது திருத்தத்தின் பல முக்கிய சீர்திருத்தங்களும், திருத்தங்களும் திரும்பப் பெறப்பட்டன. 20-வது திருத்தம் முன்னர் 19-வது திருத்தத்தில் அரசுத்தலைவரிடம் (சனாதிபதி) இருந்து பறிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் பல மீண்டும் அரசுத்தலைவருக்கே வழங்கப்பட்டன. 19-வது திருத்தம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரங்களை அமைச்சரவையுடன் சனாதிபதியால் சமமாகப் பகிர்ந்து கொண்ட முதல் நிகழ்வு ஆகும். 20-வது திருத்தத்தை அமுல் படுத்துவது பெரும்பாலும் ஆளும் கட்சியான இலங்கை பொதுசன முன்னணி, மற்றும் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தின் அரசியல் நோக்கமாக இருந்தது. இக்கூட்டணி 2019 அரசுத்தலைவர் தேர்தலிலும், 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றிகளைப் பதிவு செய்தது. 22 அக்டோபர் 2020 அன்று, இத்திருத்தம் நாடாளுமன்றத்தில் ⅔ பெரும்பான்மையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.[2]
காலக்கோடு
- 6 ஆகத்து 2020 - 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி நாட்டில் திரமான ஒரு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை (146) இடங்களுடன் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த சில நாட்களில், அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச 20-வது சட்டமூலம் தயாரிக்கும் பணிக்கு அமைச்சரவைக்கு ஒப்புதல் அளித்தார்.
- 2 செப்டம்பர் 2020 - சட்டமுன்மொழிவு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.[4]
- 22 செப்டம்பர் 2020 - திருத்தத்தின் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
- 22 செப்டம்பர் 2020 - இச்சட்டமூலத்தை எதிர்த்து மீயுயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திக்கா கலகே வழக்குப் பதிந்தார்.[5][6]
- 29 செப்டம்பர் 2020 - 20-வது திருத்தத்திற்கெதிரான வழக்குகளை மீயுயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.[7]
- 2 அக்டோபர் 2020 - 20-ஆம் திருத்தத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா என்பது குறித்து மீயுயர் நீதிமன்றமே பதிலளிக்க வேண்டும் என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார்.[8]
- 5 அக்டோபர் 2020 - மீயுயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை முடித்துக் கொண்டது.[9]
- 20 அக்டோபர் 2020 - 20-ஆம் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துகள் பொது வாக்கெடுப்பு மூலமே நிறைவேற்றப்பட வேண்டும் என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[10][11]
- 20 அக்டோபர் 2020 - மீயுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவைத்தலைவர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.[12] இது தொடர்பாக 2-நாள் விவாதம் அக்டோபர் 21, 22 ஆம் நாட்களில் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார்.[13]
- 21 அக்டோபர் 2020 - நீதி அமைச்சர் அலி சப்ரி 20-ஆம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.[14] The debate regarding the constitution commenced in parliament for second consecutive day.[15]
- 22 அக்டோபர் 2020 - 20-ஆம் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 156 பேர் ஆதரவாகவும், 65 பேர் எதிராகவும் வாக்களித்தனர். நால்வர் வாக்களிப்பின்போது சமூகமளிக்கவில்லை.[1][2] எதிர்க்கட்சி உறுப்பினர்களில் முசுலிம் காங்கிரசின் ஹபீஸ் நசீர் அகமது, எம். எஸ். தௌஃபீக், பைசல் காசிம், எச். எம். எம். ஹரீஸ், மக்கள் காங்கிரசின் அலி சப்ரி ரகீம், இசாக் ரகுமான், ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா கமகே, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அ. அரவிந்தகுமார் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.[16]
மேற்கோள்கள்