கிளார்க் கேபிள்
வில்லியம் கிளார்க் கேபிள் (ஆங்கிலம்: Clark Gable, பெப்பிரவரி 1, 1901 – நவம்பர் 16, 1960) என்பவர் ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பரவலாக "ஆலிவுட்டின் மன்னன்" என்று குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் திரைத் துறையில் 37 ஆண்டுகள் நடித்தார். 60க்கும் மேற்பட்ட பல்வேறு வகைத் திரைப்படங்களில் நடித்தார். இதில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னணி நடிகராக நடித்தார். இவர் தனது 59ஆம் வயதில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவரது கடைசித் திரைத் தோற்றமானது முதிய கால்நடை மேய்ப்பாளர் கதாபாத்திரத்தில் த மிஸ்ஃபிட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததாகும். இத்திரைப்படம் இவரது இறப்பிற்குப் பிறகு 1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர் ஒகாயோ மாகாணத்தில் பிறந்தார். அங்கு வளர்க்கப்பட்டார். 1924 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஊமைத் திரைப்படங்களில் பின்னணி நடிகராகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்குவதற்காகக் கேபிள் ஆலிவுட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். மெட்ரோ கோல்ட்வின் மேயர் (எம். ஜி. எம்.) திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காகத் துணை நடிகர் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறினார். கதாநாயகனாக இவரது முதல் படம் டான்ஸ், ஃபூல்ஸ், டான்ஸ் (1931) ஆகும். இத்திரைப்படத்தில் ஜோன் கிராபர்ட்டுடன் இவர் நடித்தார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஜோன் கிராபர்ட் தான் கேபிளைப் பரிந்துரைத்தார். ரெட் டஸ்ட் (1932) என்கிற காதல் நாடகத் திரைப்படத்தில் அந்நேரத்தில் பிரபலமான நடிகையான ஜீன் ஆர்லோவுடன் இவர் நடித்தது, எம். ஜி. எம்.மின் மிகப் பெரிய ஆண் நடிகராக இவரை ஆக்கியது.[3] பிராங்க் காப்ராவின் இயக்கத்தில் கிளாடெட் கோல்பெருடன் இவர் இணைந்து நடித்த காதல் நகைச்சுவைத் திரைப்படமான இட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934) திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றார்.[4] மியூட்டினி ஆன் த பவுன்டி (1935) திரைப்படத்தில் பிளட்சர் கிறிஸ்டியன் கதாபாத்திரம் மற்றும் கான் வித் த விண்ட் (1939) திரைப்படத்தில் விவியன் லீயின் ஸ்கார்லெட் ஓகாரா கதாபாத்திரத்துக்கு எதிராக இவர் நடித்த ரெட் பட்லர் என்ற கதாபாத்திரம் ஆகியவற்றுக்காக இவர் மீண்டும் அகாதமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். மன்ஹாட்டன் மெலோட்ராமா (1934), சான் பிரான்சிஸ்கோ (1936), சரடோகா (1937), டெஸ்ட் பைலட் (1938) மற்றும் பூம் டவுன் (1940) ஆகிய இவரது மற்ற திரைப்படங்களும் தொடர்ந்து வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிகளைப் பெற்றன. இதில் மூன்று படங்களில் ஸ்பென்சர் டிரேசியுடன் இவர் இணைந்து நடித்தார். இரண்டாம் உலகப் போரின் போது கேபிள் ஐரோப்பாவில் இரு ஆண்டுகளுக்கு வான்பரப்புப் புகைப்படக் கலைஞராகவும், குண்டு வீச்சு விமானங்களில் துப்பாக்கி இயக்குபவராகவும் பணியாற்றினார். போரிலிருந்து திரும்பிய பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டப்படவில்லை என்றாலும், நல்ல வசூலைக் குவித்தன.[5] இவரது த ஹக்ஸ்டர்ஸ் (1947), ஹோம் கம்மிங் (1948) மற்றும் புதுமுக நடிகை கிரேஸ் கெல்லிக்கு ஜோடியாக நடித்த மொகம்போ (1953) ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டன. பிறகு இவர் பர்ட் லங்காஸ்டருடன் ரன் சைலன்ட், ரன் டீப் (1958) போன்ற மேற்கத்திய மற்றும் போர்த் திரைப்படங்களில் நடித்தார். புதிதாக அறிமுகமான கதாநாயகிகளுக்கு ஜோடியாக நகைச்சுவை மற்றும் நாடகத் திரைப்படங்களில் நடித்தார். அவற்றுள் சில டோரிஸ் டேயுடன் நடித்த டீச்சர்'ஸ் பெட் (1958), சோபியா லாரனுடன் நடித்த இட் ஸ்டார்ட்டேட் இன் நேப்பிள்ஸ் (1960) மற்றும் மர்லின் மன்றோவுடன் நடித்த த மிஸ்ஃபிட்ஸ் (1961) ஆகியவை ஆகும். ஆலிவுட்டின் வரலாற்றில் நீண்ட ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தனது திரைப்படங்களை வசூல் செய்ய வைத்த நடிகர்களில் கேபிளும் ஒருவர் ஆவார். குயிக்லேய் பதிப்பகத்தின் வருடாந்திர முதல் 10 வசூல் நட்சத்திரங்கள் பட்டியலில் 16 முறை கேபிள் இடம் பெற்றார். பாரம்பரிய அமெரிக்கத் திரைத்துறையின் நடிகர்களில் ஏழாவது சிறந்த ஆண் திரைப்பட நடிகராக இவர் அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தால் பெயரிடப்பட்டார்.[6] இவர் அக்காலத்தில் நடித்த மிகுந்த பிரபலமான பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்தார். தன்னுடன் நடிப்பதற்கு விருப்பமான நடிகை என இவர் ஜோன் கிராபர்ட்டைக் குறிப்பிட்டார்.[7] கிராபர்ட்டுடன் கேபிள் 8 படங்களில் ஜோடியாக நடித்தார். மைர்னா லோய் 7 படங்களிலும், ஜீன் ஆர்லோ 6 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளனர். லானா டர்னருடன் 4 திரைப்படங்களிலும், நோர்மா சீயரர் மற்றும் ஆவா கார்ட்னர் ஆகிய ஒவ்வொருவருடனும் தலா 3 படங்களிலும் நடித்தார். தொடக்க வாழ்க்கை1901–1919: ஆரம்ப வாழ்க்கை![]() வில்லியம் கிளார்க் கேபிள் காதிசு, ஒகாயோவில் வில்லியம் ஹென்றி "வில்" கேபிள் (1870-1948) என்ற எண்ணெய்க் கிணறு தோண்டுபவருக்கும்,[7][8] அவரது மனைவி அடெலினுக்கும் (1869–1901) மகனாக பெப்பிரவரி 1, 1901 அன்று பிறந்தார். இவரது தந்தை கிறித்தவ மதத்தின் புராட்டஸ்டன்டு பிரிவையும், தாய் கத்தோலிக்கப் பிரிவையும் சேர்ந்தவர்களாவர். கேபிளுக்கு வில்லியம் என்ற பெயர் இவரது தந்தையின் பெயரை ஒத்து கொடுக்கப்பட்டது. ஆனால் இவர் பெரும்பாலும் எப்பொழுதுமே கிளார்க் என்றே அழைக்கப்பட்டார். இவரது தந்தை இவரை "த கிட்" என்று அழைத்தார்.[9]:1 மருத்துவரின் புரியாத கையெழுத்தின் காரணமாக மாகாணப் பதிவுகளில் இவர் தவறாக ஆண் மற்றும் பெண் என்று குறிப்பிடப்பட்டார். ஆனால் பிறகு பணியாளர் அதைச் சரி செய்து ஆண் என்று மாற்றினார்.[7] இவரது முன்னோர்கள் பெல்ஜியம் மற்றும் செருமனியைச் சேர்ந்தவர்களாவர்.[10][11][12] ஒகாயோவில் உள்ள டென்னிசன் என்ற இடத்தில் உள்ள ஓர் உரோமானியக் கத்தோலிக்கத் தேவாலயத்தில் இவருக்கு 6 மாத வயதாக இருந்த பொழுது திருமுழுக்கு செய்யப்பட்டது. இவருக்கு 10 மாத வயதாகிய போது இவரது தாய் இறந்து விட்டார்.[7] இவரது தந்தை கத்தோலிக்க நம்பிக்கையில் இவறை வளர்க்க மறுத்தார். இது இவரது தாய் வீட்டாரிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றது. பென்சில்வேனியாவின் வெர்னான் பட்டணத்தில் உள்ள இவரது மாமா சார்லசு ஹெர்ஷெல்மென் மற்றும் அவரது மனைவியுடன் அவர்களது பண்ணையில் நேரத்தைச் செலவிட இவரது தந்தை அனுமதித்த போது இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது.[13] ஏப்பிரல் 1903இல் ஜென்னி டன்லப் (1874-1920) என்பவரை கேபிளின் தந்தை மணந்தார்.[14][15] கேபிளின் மாற்றாந்தாய், உயர்ந்த, கூச்ச சுபாவம் கொண்ட, கனத்த குரலையுடைய குழந்தையாகிய இவரை நன் முறையில் உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தும், பேணியும் வளர்ந்தார். பியானோ வாசித்து கேபிளுக்கு வீட்டுப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்.[16] பிறகு பித்தளை இசைக் கருவிகளை வாசிக்கக் கேபிள் ஆரம்பித்தார். தன் 13வது வயதில், கோப்டேல் ஆண்கள் பட்டண இசைக் குழுவின் ஒரே ஒரு சிறுவனாகக் கேபிள் திகழ்ந்தார்.[17] கேபிளுக்குத் தன் தந்தையுடன் சிற்றுந்துகளைப் பழுது பார்ப்பதில் ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருந்தது. கேபிளின் தந்தை இவரை வேட்டையாடுதல் மற்றும் கடினமான உடல் பணிகள் போன்ற ஆண்களுக்கான செயல்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார். கேபிளுக்கு இலக்கியமும் பிடிக்கும். தனக்கு மிகவும் நம்பிக்கையான நபர்களிடம் சேக்சுபியரின் இலக்கியத்தை, முக்கியமாக அவரது செய்யுள்களை கேபிள் ஒப்புவிப்பார்.[17] இவரது தந்தைக்கு நிதிப் பிரச்சினைகள் 1917ஆம் ஆண்டு ஏற்பட்டது. அவர் பண்ணைத் தொழில் செய்ய முடிவு செய்தார். தனது குடும்பத்துடன் ஒகாயோவின் ஏக்ரனுக்கு அருகில் உள்ள பால்மிரா பட்டணத்திற்குக் குடிபெயர்ந்தார். பண்ணையில் வேலை செய்யுமாறு கேபிளுக்கு அவரது தந்தை அறிவுறுத்தினார். ஆனால் ஏக்ரனில் இருந்த பயர்ஸ்டோன் டயர் மற்றும் இரப்பர் நிறுவனத்தில் பணி புரியக் கேபிள் புறப்பட்டார்.[18] 1920–1923: திரைத்துறை ஆரம்பம்கேபிள் தனது 17ஆம் வயதில் த பேர்டு ஆஃப் பேரடைசு என்ற நாடகத்தைக் கண்ட பிறகு, நடிகராக மாறும் எண்ணம் இவருக்குத் தோன்றியது. ஆனால், 21 வயது வரை இவரால் நடிப்பைத் தொடங்க இயலவில்லை. தன் தாய் சார்ந்த ஹெர்ஷெல்மென் அறக்கட்டளையிலிருந்து தனக்கு வர வேண்டிய ஐஅ$300 (₹21,454.8)ஐப் பெற்று நடிப்பைத் தொடங்கினார்.[15][19] 1920ஆம் ஆண்டு இவரது மாற்றாந்தாய் இறந்த பிறகு இவரது தந்தை ஒக்லகாமாவின் துல்சாவிற்கு இடம் பெயர்ந்தார். தன்னுடைய எண்ணெய் வணிகத்திற்குத் திரும்பினார். புதிய பகுதிகளில் எண்ணெய்க்காகத் தோண்டுதல் மற்றும் ஒக்லகாமாவின் எண்ணெய் வயல்களில் சகதிகளை அகற்றுவது ஆகிய பணிகளைத் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து செய்த பிறகு, அமைதிப் பெருங்கடல் வடமேற்குப் பகுதிக்கு இவர் பயணித்தார்.[9]:15–16 கேபிள் இரண்டாம் தரப் பங்கு நிறுவனங்களில் வேலை தேடினார். பிறகு பயணம் செய்து கொட்டகையில் நாடகங்கள் நடத்துவோரிடம் பணிபுரிந்தார். மர அரவை ஆலை மற்றும் பிற சிறு சிறு வேலைகளில் பணி புரிந்த பிறகு, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியைத் தாண்டி ஒரிகனின் போர்ட்லேண்ட்டுக்குச் சென்றார். அங்கு மேயர் மற்றும் பிராங் துறைக் கடையில் கழுத்துக் கச்சை விற்பவராகப் பணிபுரிந்தார்.[20] அக்கடையில் உள்ளூர் மேடை நடிகரான இயர்ல் லாரிமோரும் பணி புரிந்தார். அவர் கேபிளை நடிப்பிற்குத் திரும்புமாறு ஊக்கப்படுத்தினார்.[19] லாரிமோர் என்பவர் கான் வித் த விண்ட் திரைப்படத்தில் கேபிளுடன் அத்தை பிட்டிபேட்டாக நடித்த லாரா கோப் குரூவ்ஸின் உறவினர் ஆவார். தன்னுடைய ரெட் லாண்டர்ன் பிளேயர்சு என்ற நாடகக் குழுவில் இணைய கேபிளை லாரிமோர் அழைக்காவிட்டாலும், அக்குழுவின் ஓர் உறுப்பினரான பிரான்சு தோர்பிலர் என்ற பெண்ணிற்குக் கேபிளை அறிமுகம் செய்து வைத்தார். கேபிளும் பிரான்சு தோர்பிலரும் பல முறை சந்தித்துக் கொண்டனர்.[9]:18 த ஆசுதோரியா பிளேயர்சு என்ற நாடகத்திற்கு இந்த ஜோடியினர் நடிப்பதற்காகச் சேர்ந்தனர். பயிற்சியற்ற கேபிளின் நடிப்பானது வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும், லாரிமோர் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் நாடகக் குழுவினர் கேபிளை ஏற்றுக் கொண்டனர். கேபிள் மற்றும் தோர்பிலர் ஒரிகனின் ஆசுதோரியாவிற்கு இடம் பெயர்ந்தனர். இந்த நாடகக் குழுவுடன் அக்குழு நொடித்துப் போகும் வரை, தொடர்ந்து பயணித்தனர். பிறகு போர்ட்லாண்ட்டுக்கு திரும்பி வந்தனர். போர்ட்லாண்டில் கேபிள் பசிபிக் டெலிபோன் என்கிற நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். வேலை முடிந்து மாலை நேரத்தில் நடிப்புப் பாடங்களைக் கற்க ஆரம்பித்தார்.[7] கேபிளுக்கு நடிப்புப் பயிற்சியாளரான ஜோசப்பின் தில்லான் என்ற பெண்மணி போர்ட்லாண்டில் ஒரு திரையரங்க மேலாளராகப் பணியாற்றினார். கேபிளின் பற்கள் மற்றும் சிகை அலங்காரம் சரி செய்யப்படுவதற்கு ஜோசப்பின் தில்லான் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்தார். நீண்ட நாட்களாக ஊட்ட உணவின்றி மெலிந்திருந்த அவரது உடலை உடற்பயிற்சி செய்து வலுவாக்க அறிவுரைகளையும், அவரது உடலை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், அவரின் தோற்ற அமைவை நன்முறையில் வைத்திருக்கப் பயிற்சியையும் ஜோசப்பின் தில்லான் அளித்தார். இயற்கையாகக் கனமான தனது குரலை கேபிள் மெதுவாகப் பயிற்சி செய்து மெல்லியதாக்கினார். கேபிளின் பேச்சுப் பழக்கவழக்கங்கள் முன்னேற்றம் அடைந்தன. அவரது முக அசைவுகள் மேலும் இயல்பானவையாகவும், மற்றவர்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் மாறின. நீண்ட பயிற்சிக்குப் பிறகு ஒரு திரை வாழ்க்கையைத் தொடங்குவதற்குக் கேபிள் தயாராகிவிட்டார் என தில்லான் கருதினார்.[9]:24 திரை வாழ்க்கை1924–1930: மேடை மற்றும் ஊமைத் திரைப்படங்கள்![]() 1924ஆம் ஆண்டு கேபிள் மற்றும் தில்லான் ஆலிவுட்டுக்குப் பயணித்தனர். கேபிளின் மேலாளராகத் தில்லான் பணியாற்றினார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தில்லானுக்குக் கேபிளை விட 17 வயது அதிகமாகும்.[21] வில்லியம் கிளார்க் கேபிள் என்ற தன்னுடைய பெயரைத் திரைப்படத்திற்காகக் கிளார்க் கேபிள் என்று மாற்றிக் கொண்டார்.[9] எரிக் வான் இசுதிரோகெயிமின் த மெர்ரி விடோவ் (1925), கிளாரா போவ் நடித்த த பிளாஸ்டிக் ஏஜ் (1925) மற்றும் போலா நெக்ரி நடித்த பர்பிட்டன் பேரடைசு (1924) போன்ற ஊமைத் திரைப்படங்களில் பின்னணி நடிகராகத் தோன்றினார். த பேசுமேக்கர்சு மற்றும் பாக்சு நிறுவனத்தின் த ஜான்ஸ்டவுன் பிளட் (1926) என்கிற ஒரு தொடர்ச்சியான இரண்டு ரீல் நகைச் சுவைகளில் தோன்றினார். தொடர்ச்சியான குறும் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.[22] ஆனால் இவருக்கு முன்னணித் திரைப்படக் கதாபாத்திரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாட் பிரைஸ் குளோரி? (1925) என்ற நாடகத்தில் நடிப்பதற்காக மேடைக்குத் திரும்பினார்.[23] லயனெல் பாரிமோருடன் இவர் வாழ்நாள் முழுவதுக்குமான நண்பரானார். தான் நிறைவற்ற நடிப்பு என்று கருதியதற்காகத் தொடக்கத்தில் கேபிளை அவர் கடிந்து கொண்டார். ஆனால், இருந்த போதிலும் ஒரு மேடை நாடக வாழ்வைத் தொடர இவருக்கு அறிவுறுத்தினார்.[9]:36[24] 1927-28 திரையரங்க பருவத்தின் போது டெக்சாசின் ஹியூஸ்டனில் லசுகின் சகோதரர்கள் ஸ்டாக் நிறுவனத்துடன் இவர் நடித்தார். அங்கு இருந்த போது இவர் பல கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பிடத்தக்க அளவுக்கு அனுபவம் பெற்றார். உள்ளூர் அளவில் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[25] பிறகு இவர் நியூயார்க்கு நகரத்திற்கு இடம் மாறினார். பிராடுவே அரங்குகளில் இவருக்காக வாய்ப்புகளை தில்லான் தேடினார். மசினால் (1928) திரைப்படத்தில் இவர் சிறந்த விமர்சனங்களைப் பெற்றார். ஒரு விமர்சகர் இவரை "இளமையான, வலிமையான மற்றும் மிருகத் தனமான ஆண் பால்" என்று குறிப்பிட்டார்.[9]:49 கேபிளும், தில்லானும் பிரிந்தனர். மார்ச்சு 1929இல் விவகாரத்திற்காக வழக்கு தொடுத்தனர். இதே நேரத்தில் நியூயார்க்கில் 24 காட்சிகளுக்கு நடத்தப்பட்ட ஹாக் தீவு நாடகத்தில் இவர் பணியாற்றத் தொடங்கினார்.[7]:56–57 ஏப்பிரல் 1930இல் கேபிளின் விவாகரத்தானது உறுதிபடுத்தப்பட்டது. ஒரு சில நாட்களுக்குப் பிறகு இவர் டெக்சாசு நாகரிகமணியான மரியா பிராங்கிளின் பிரெந்திசு லூகாசு லாங்காமைத் திருமணம் செய்து கொண்டார். இவர் "ரியா" என்றும் அழைக்கப்பட்டார். கலிபோர்னியாவுக்கு இடம் மாறியதற்குப் பிறகு இவர்கள் இருவரும் 1931இல் மீண்டும் திருமணம் புரிந்து கொண்டனர். அநேகமாக மாநிலங்களுக்கிடையிலான சட்டத் தேவைகளில் இருந்த வேறுபாடுகள் காரணமாக இவ்வாறு மணம் புரிந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1930–1935: தொடக்க வெற்றி![]() 1930இல் லாஸ் ஏஞ்சலசு மேடைத் தயாரிப்பான த லாஸ்ட் மைல் நாடகத்தில் கடும் சினமுடைய, எதையும் செய்ய ஆயத்தமாக இருந்த கொலைகார கதாபாத்திரமான மியர்சு என்ற பாத்திரத்தில் இவரது பாராட்டப்பட்ட தோற்றத்திற்குப் பிறகு பாத் பிக்சர்சு தயாரிப்பு நிறுவனத்துடன் கேபிளுக்கு ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. த பெயின்டேட் டெசர்ட் (1931) என்ற வில்லியம் பாய்டு இயக்கிய குறைவான தயாரிப்புச் செலவுடைய அந்நிறுவனத்தின் மேற்கத்திய பாணி படத்தில் மழிக்கப்படாத வில்லனாக நடித்ததே ஒரு பேசும் திரைப்படத்தில் இவரது முதல் கதாபாத்திரம் ஆகும். அந்நிறுவனத்திற்கு இவரது ஒரே ஒரு படமும் இதுவாகும். இத்திரைப்படத்தின் தாமதப்படுத்தப்பட்ட வெளியீட்டிற்குப் பிறகு அத்தயாரிப்பு நிறுவனமானது நிதிப் பிரச்சினைகளைச் சந்திக்க ஆரம்பித்தது. எனவே, கேபிள் வார்னர் புரோஸ். தயாரிப்பு நிறுவனத்திற்குப் பணியாற்றுவதற்காக அந்நிறுவனத்திலிருந்து விலகினார்.[7]:58–66 கான் வித் த விண்ட்![]() இப்படத்தில் முதலில் அவர் நடிக்க தயக்கம் காட்டிய போதிலும், இப்படம் அவரது சிறந்த நடிப்பிற்காக அறியப்படுகிறது. பட்லரின் கடைசி வரியான "உண்மையில், என் அன்பே, நான் சிறிதும் கவலைப்படப் போவதில்லை" ("Frankly, my dear, I don't give a damn") என்பது ஒட்டு மொத்த திரைப்பட வரலாற்றின் மிகப் பிரபலமான வசனமாகும். அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தின் சிறந்த வசனங்களின் பட்டியலில் இது முதல் இடத்தில் உள்ளது. கரோல் லம்பார்ட் இந்த புத்தகத்தை அவருக்கு பரிசளித்த போது ரெட் பட்லர் கதாபாத்திரத்தில் இவரை நடிக்கச் சொன்ன முதல் நபராக இருக்கலாம். ஆனால் இவர் அதைப் படிக்க மறுத்து விட்டார். பொது மக்களும், தயாரிப்பாளர் டேவிட் ஓ செல்சுனிக்கும் கேபிள் இந்தக் கதாபத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் செல்சுனிக்கின் கீழ் நீண்ட கால ஒப்பந்தத்தில் எந்த ஆண் நட்சத்திரமும் இல்லாததால், அவர் மற்றொரு திரைப்பட நிறுவனத்தின் நடிகரை கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கேரி கூப்பர் செல்சுனிக்கின் முதல் விருப்பமாக இருந்தார். பட்லர் கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பர் மறுத்து விட்ட போது, "ஆலிவுட் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியாக கான் வித் த விண்ட் இருக்க போகிறது", என்று கூப்பர் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. பிறகு, செல்சுனிக் கேபிள் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, எம். ஜி. எம்.மிடமிருந்து இவரைக் கடன் பெறத் தீர்மானித்தார். ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை மெக்டேனியல் இப்படத்தின் அட்லாண்டா நகரத் திரையீட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று தெரிந்தவுடன், கேபிள் திரையீட்டைப் புறக்கணிக்க முயற்சித்தார். மெக்டேனியல் இவரைப் போகுமாறு கெஞ்சிய பின்னரே இவர் சென்றார் எனக் கூறப்படுகிறது. அவரது திரை வாழ்க்கை மங்கத் தொடங்கும் போதெல்லாம் கான் வித் த விண்டை மறு வெளியீடு செய்வதன் மூலம் தன் புகழைப் புதுப்பிக்கலாம் எனக் கேபிள் ஒரு முறை கூறினார். இருந்த போதும் இவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த முன்னணி நடிகராகத் தொடர்ந்தார். இரண்டாம் உலகப் போர்![]() 1942இல் இவரது மனைவி லம்பார்ட்டின் மரணத்திற்குப் பிறகு, கேபிள் அமெரிக்க விமானப் படையில் சேர்ந்தார். கேபிள் பி-17 விமானத்தில் 1943இன் மே 4 முதல் செப்தெம்பர் 23 வரை செருமனி உட்பட ஐந்து போர்ப் பயணங்களை மேற்கொண்டார். செருமனி மீதான தாக்குதலில், இவரது குழுவில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமுற்றனர். இவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்தா செய்தி எம். ஜி. எம்.ஐ அடைந்த போது, நிறுவன நிர்வாகிகள் அதன் மிகவும் மதிப்பு மிக்க திரைப்பட நடிகரைப் போர் நடவடிக்கை அல்லாத இராணுவப் பணியில் ஈடுபடுத்துமாறு இராணுவத்திடம் கோரிக்கை வைத்தனர். மே 1944இல், கேபிள் இராணுவ மேஜராகப் பதவி உயர்த்தப்பட்டார். இவர் மற்றொரு போர்ப் பயணத்தை எதிர்பார்த்திருக்கையில், நார்மாண்டி படையிறக்கம் நடைபெற்றது. எந்தப் பணி உத்தரவும் இல்லாமல் சூன் மாதம் சென்ற போது, கேபிளின் கோரிக்கையை ஏற்று சூன் 12, 1944இல் பணியிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டார். இவரது பணி விடுப்பு பத்திரங்கள், பின்னாட்களில் அமெரிக்க அதிபரான கேப்டன் ரானல்ட் ரேகனால் கையெழுத்திடப்பட்டன. அடால்ப் இட்லர் மற்ற நடிகர்களை விட கேபிள் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் கேபிளைச் சிறிதும் காயம் அடையாத வகையில் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்இரண்டாம் உலக போருக்கு பிறகு கேபிளின் முதல் திரைப்படம் அட்வென்ச்சர்(1945), இப்படம் விமர்சன மற்றும் வணிகரீதியான தோல்வியைத் தழுவியது.கேபிளின் ஹக்ஸ்டர்ஸ்(1947) படம், போருக்கு பிந்தைய மாடிசன் அவென்யூ ஊழல் மற்றும் ஒழுக்க கேடு பற்றி நையாண்டி செய்யும் படம், இது அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டது.கேபிளின் கடைசி படம் மிஸ்ஃபிட்ஸ்(1961), மர்லின் மன்றோவுடன் இதில் நடித்திருந்தார்.இது இருவருக்கும் கடைசி படமாக அமைந்தது. அரசியல்பிப்ரவரி 1952 ல், அவர் நியூயார்க்கில் ந்டைபெற்ற ஒரு பேரணியில் கலந்துகொண்டபோது டுவைட் டி. ஐசனாவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினார்.இச்சமயத்தில் தான் ஐசனோவரை தங்களது வேட்பாளராக்க அமெரிக்காவின் இரு கட்சிகளும் முயன்று வந்தன.கடுமையான இதய இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கேபிள் 1960ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களித்தார். இறப்புகேபிள் நவம்பர் 16, 1960 இல் ஹாலிவுட்டின் பிரிஸ்பைடீரியன் மருத்துவமனையில் இதய இரத்த உறைவால் இறந்தார்,பத்து நாட்களுக்கு முன் 59 ஆம் வயதில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர்.உடலளவில் மிகுந்த சிரமத்துடன் த மிஸ்ஃபிட்ஸ் படத்தில் அவர் நடித்ததன் காரணமாக அவர் திடீர் மரணமடைந்ததாக ஊகங்கள் உள்ளன.கேபிள் அவரது மூன்றாவது மனைவி, கரோல் லம்பார்ட் அருகில் க்ளொன்டேல், கலிபோர்னியாவில் புதைக்கப்பட்டார். கேபிள் பற்றிய கூற்றுகள்![]() ஒரு முறை த மிஸ்ஃபிட்ஸ் ஆசிரியரான ஆர்தர் மில்லர் கேபிளைப் பற்றிக் கூறும் போது "[மற்றவர்களை] எப்படி வெறுப்பது என்று தெரியாத மனிதன்" என்று கூறினார். நடிகை ஜோன் கிராஃபோர்ட் கேபிளைப் பற்றிக் கூறும் போது "அவர் எங்கு சென்றாலும் ஓர் மன்னனைப் போல இருந்தார்" என்றார். இராபர்ட் டெய்லர் கேபிள் "ஓர் உயர்ந்த மனிதர், இனி மற்றொரு கிளார்க் கேபிள் உருவாவது சந்தேகமே, அவர் ஒரு தனித்துவமானவர்" என்று கூறினார். இவர் தனது ஒப்புமைக்குப் பொருத்தமில்லை என்று உணர்ந்த திரைக் கதை அம்சங்களை மாற்றியதன் காரணமாக விமர்சிக்கப்பட்டார். கதாசிரியர் லார்ரி கெல்பர்ட் கூறியதாக ஒரு முறை ஜேம்ஸ் கார்னர் கூறியதாவது "கேபிளை உடையும் நீர் மூழ்கிக் கப்பல் கீழே கொண்டு செல்ல முடியாது (ரன் சைலன்ட், ரன் டீப் படத்தின் கடைசிப் பகுதி அதன் அடிப்படையான புத்தகத்தில் இருந்து வேறுபட்டு முடிவடைந்ததைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிட்டது), ஏனெனில் கேபிள் மூழ்குவதில்லை" என்றார். திரைப்படங்கள்கேபிள் 1924 மற்றும் 1930 இடையே 13 படங்களில் ஒரு துணை நடிகராக தோன்றினார். பிறகு அவர் 17 "குறும்படம்" படங்களில் அவராகவும், 67 திரையரங்குகளில் வெளியான படங்களிலும் தோன்றினார்.காம்பாக்ட் அமெரிக்கா என்னும் ஒரு இரண்டாம் உலகப் போர் பிரச்சார படத்திலும் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia