சக்திகாந்த தாஸ், (பிறப்பு: 26 பெப்ரவரி 1957) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராகத் தற்போதுள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். பொருளாதார விவகாரச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், உரத்துறைச் செயலாளர் உட்பட இந்திய ஆட்சிப் பணியில் மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.
இளமையும் கல்வியும்
இவர் ஒடிசா மாநிலத்தில் பிறந்தவரார். புவனேஷ்வர் நகரில் டிமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்பஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புதுதில்லி புனித ஸ்டீபன் கல்லூரியில் இளநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்றார். இந்திய மேலாண்மை கழகத்தில் நவீனப் பொருளாதார நிர்வாகமும், இன்ஸ்டிட்யூட் பக்ளிக் என்டர்பிரைஸில் நிதி நிர்வாகத்தில் அலுவல்ரீதியான பயிற்சியும் பெற்றார். இந்திய நிர்வாக அலுவலர் கல்லூரியில் திட்ட மேலாண்மைப் படிப்பில் பட்டயம் பெற்றவர். மேலும் இந்திய மேலாண்மை கழகத்திலும் ஹிமாச்சல் பிரதேச பொது நிர்வாகக் கல்வி நிறுவனத்திலும் பயிற்சி பெற்றவராவார்[1][2]
தொழில்துறைத் தலைமைச் செயலர், வருவாய்த்துறை சிறப்பு ஆணையர், வணிகவரித் துறை செயலர், ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் குழுகத்தின் திட்ட இயக்குநர், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரமாவட்ட ஆட்சித் தலைவர் எனத் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.[1] மற்றும் மத்தியப் பொருளாதார விவகாரச் செயலாளர், மத்திய வருவாய்த் துறைச் செயலாளர், நிதி அமைச்சகத்தின் சிறப்புச் செயலர் மற்றும் கூடுதல் செயலர் என இந்திய அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்.[1]