சா. ஜே. வே. செல்வநாயகம்
தந்தை செல்வா[1] என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (Samuel James Velupillai Chelvanayagam, மார்ச் 31, 1898 - ஏப்ரல் 26, 1977) அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர்.[2][3] ஆரம்ப வாழ்க்கைசெல்வநாயகம் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார். செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார். செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா ஆவார். செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். ![]() அரசியலில்ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி பூங்கோதை சந்திரஹாசன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். தேர்தல் வரலாறு
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia