மேன் ஆஃப் ஸ்டீல் என்பது சூப்பர்மேன் திரைப்படத் தொடரின் மீள் உருவாக்கம்[4] ஆகும். இது சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் மூலக் கதையை சித்தரிக்கிறது. இப்படமானது ஜூன் 14, 2013 அன்று வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 2டி, 3டி மற்றும் ஐமாக்ஸில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 668 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இந்த படத்தின் தொடர்சியாக பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற படம் மார்ச் 25, 2016 அன்று வெளியானது.
உலகத்தைப் போலவே கிரிப்டான் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களை விட புத்திசாலிகள். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அவர்கள் தங்களை சுற்றியுள்ள கிரகங்களை அடிமைப்படுத்துகிறார்கள். செயற்கையாக இனப்பெருக்கம் செய்பவர்களாக இருக்கிறார்கள். முதன் முறையாக அந்த கிரகத்தின் முக்கிய பதவியில் இருப்பவர் இயற்கையாக ஒரு வாரிசை உருவாக்குகிறார்.
அந்த கிரகம் அழியத் தொடங்கும்போது தன் குழந்தையை, பறக்கும் கப்பலில் வைத்து பூமிக்கு அனுப்புகிறார். இங்கு வரும் குழந்தை ஒரு விவசாயி வீட்டில் வளர்கிறது. அபூர்வ சக்திகள் நிறைந்த அக் குழந்தையை தன் சக்தியை வெளிப்படுத்தாமலேயே வளர்க்கிறார். அபார சக்தி மிக்கவன், வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தால் உலகம் அவனை ஏற்றுக் கொள்ளாது என்று நினைக்கிறார். கிரிப்டான் கிரகத் தளபதி, அந்த கிரக மக்களை வேறுகிரகத்தில் குடியமர்த்த திட்டமிட்டு சூப்பர்மேனைத் தேடி பூமிக்கு வருகிறார். கிளார்க், எப்படி அந்த வில்லனை வென்று சூப்பர் மேனாக உருவாகிறான் என்பதுதான் மீதி திரைப்படம்.