டி. ஆர். இராமச்சந்திரன்
டி. ஆர். இராமச்சந்திரன் (T. R. Ramachandran; சனவரி 9, 1917[1] - நவம்பர் 30, 1990) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[2][3] கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது. வாழ்க்கைச் சுருக்கம்இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.[4] நாடகங்களில் நடிப்புஇராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு இருக்கவில்லை. குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது. தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். இக்கம்பனி சில காலத்திலேயே மூடப்பட்டதை அடுத்து உள்ளூரைச் சேர்ந்த மணி ஐயர் என்பவர் இக்கம்பனியை நடத்தி வந்தார். இவருடன் நாடகக் கம்பனியில் பணியாற்றிய எஸ். வி. வெங்கட்ராமன் (பின்னாளில் பிரபலமான இசை அமைப்பாளர்) புதிதாகத் தொடங்கிய நாடகக் கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும் அவரது குழுவினரும் சேர்ந்தனர். கருநாடகத்தில் கோலார் நகரில் தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.[4] திரைப்படங்களில் நடிப்புவெங்கட்ராமன் பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டி. ஆர். ராமச்சந்திரன் டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார்.[4] 1937 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.[4] பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார்.[4] 1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் பெரு வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு சோடியாக நடித்தார்.[5] பி. ஆர். பந்துலு தயாரித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி கணேசன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.[6] படங்கள் தயாரிப்புராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில் சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கி ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். எழுத்தாளர் தேவன் எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக நடித்தார்.[5] சொந்த வாழ்க்கைடி. ஆர். இராமச்சந்திரனின் திருமணம் 1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி என்று 2 மகள்கள். திரைப்படத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அமெரிக்காவில் மகளுடன் வசித்து வந்தார். அங்கு அவர் 1990 ஆம் ஆண்டில் காலமானார்.[6] நடித்த திரைப்படங்கள்பெற்ற விருதுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia