நசீர் அகமது
ஹபீஸ் நசீர் அகமது (Hafis Nazeer Ahamed, பிறப்பு: 16 ஏப்ரல் 1961) என அழைக்கப்படும் அகமது நசீர் செய்னுலாப்தீன் (Agamed Nazeer Zainulabdeen)[1], இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[2] முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆவார்.[3] இவர் 2015, பெப்ரவரி 6 இல் கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார். வாழ்க்கைக் குறிப்புநசீர் அகமது முசுலிம் காங்கிரசு கட்சியின் சார்பில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[4] கெய்ரோ ஜன்சம்சு பல்கலைக்கழகத்திலும், சவூதி அரேபியா பெற்றோலியப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்று மண் பொறியியலில் பட்டம் பெற்றார்.[4] அரசியலில் நுழைந்த நசீர் ஆரம்பத்தில் சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.[4] பின்னர் 2005 முதல் 2009 வரையில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றினார்.[4] அரசியல்2012, செப்டம்பர் 8 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு 11,401 விருப்பு வாக்குகள் பெற்று மாகாணசபை உறுப்பினரானார்.[1] முசுலிம் காங்கிரசு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு முசுலிம் காங்கிரசு உறுப்பினர் இவராவார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 15 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.[5] முசுலிம் காங்கிரசுடன் சுதந்திரக் கூட்டணி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் இரண்டரை ஆண்டுக் காலத்திற்கு சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினர் நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சரானார்.[6][7] முசுலிம் காங்கிரசு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இணைந்த கிழக்கு மாகாண அமைச்சரவையில் நசீர் அகமதுவுக்கு விவசாய, கால்நடை உற்பத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளின் பின்னர் 2015 பெப்ரவரி 6 இல் முசுலிம் காங்கிரசின் ஹாபிஸ் நசீர் அகமது கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] கிழக்கு மாகாணசபை 2017 செப்டம்பர் 30 இல் கலைக்கப்பட்டது.[9] நசீர் அகமது 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[10][11][12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia