பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் (பிறப்பு 18 யூலை 1982) என்பவர் ஒரு இந்திய நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். மிஸ் வேல்ட் 2000 பட்டத்தின் வெற்றியாளரான இவர், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார். சோப்ரா இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகள்உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் டைம் இவரை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்களில் ஒருவராக குறிப்பிட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், போர்ப்ஸ் இவரை உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பட்டியலிட்டது. மேலும் இவர் பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார். சோப்ரா அழகிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றார். இவர் தமிழ்ப் படமான தமிழன் (2002) வழியாக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) படத்தின் வழியாக அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்களான அந்தாஸ் (2003), முஜ்சே ஷாதி கரோகி (2004) ஆகியவற்றில் இவர் முன்னணிப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அதிக வசூல் செய்த படங்களான கொண்டார் கிரிசு மற்றும் டான் (இரண்டும் 2006) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சோப்ரா தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பின்னர் அவற்றின் தொடர்ச்சிகளிலும் அவரது பாத்திரங்களை செய்தார். ஃபேஷன் (2008) நாடகப் படத்தில் பிரச்சனைக்குரிய வடிவழகியாக நடித்ததற்காக, தேசிய திரைப்பட விருதையும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். காமினி (2009), 7 கூன் மாஃப் (2011), பர்ஃபி! (2012), மேரி கோம் (2014), தில் தடக்னே தே (2015), பாஜிராவ் மஸ்தானி (2015) போன்ற படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்ததற்காக சோப்ரா மேலும் பாராட்டுக்களைப் பெற்றார். 2015 முதல் 2018 வரை, சோப்ரா ஏபிசி பரபரப்பூட்டும் தொடரான குவாண்டிகோவில், அலெக்ஸ் பாரிஷ் ஆக நடித்தார். இதன் மூலம் அமெரிக்க நெட்வொர்க் நாடகத் தொடரில் இடம்பெற்ற முதல் தெற்காசியரானார். 2015 இல் பர்ப்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய அவர், அதன் கீழ் மராத்தி படங்களான வென்டிலேட்டர் (2016), பானி (2019) மற்றும் இந்தி திரைப்படமான தி ஸ்கை இஸ் பிங்க் (2019) உட்பட பல படங்களைத் தயாரித்தார். சோப்ரா ஹாலிவுட் படங்களான பேவாட்ச் (2017), இஸ்னாட் இட் ரொமாண்டிக் (2019), தி ஒயிட் டைகர் (2021), தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு (2021) போன்றவற்றிலும் தோற்றினார். மேலும் சிட்டாடல் (2023–தற்போது) என்ற அதிரடி திரில்லர் தொடரில் நடித்துவருகிறார். சோப்ரா மூன்று தனிப்பாடல்களை வெளியிட்டு இசையில் இறங்கினார். இவரது மற்ற தொழில் முயற்சிகளில் தொழில்நுட்ப முதலீடுகள், ஒரு சிகைபராமரிப்பு வணிகம், ஒரு உணவகம் மற்றும் ஒரு ஹோம்வேர் லைன் ஆகியவை அடங்கும். இவர் சுற்றுச்சூழல், மகளிர் உரிமைகள் போன்ற சமூகச் சிந்தனைகளை ஊக்குவிக்கிறார். மேலும் பாலின சமத்துவம், பாலின ஊதிய இடைவெளி, பெண்ணியம் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கிறார். இவர் 2006 முதல் யுனிசெப் உடன் பணிபுரிந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டுகளில் குழந்தை உரிமைகளுக்கான தேசிய மற்றும் உலகளாவிய யுனிசெப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இவரது பெயரிலான அறக்கட்டளை உடல் நலம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கியுள்ள வறிய இந்திய குழந்தைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக செயல்படுகிறது. தனியுரிமையைப் பேணினாலும், அமெரிக்கப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாசுடனான இவரது திருமணம் உட்பட சோப்ராவின் திரைக்குப் பின்னுள்ள வாழ்க்கை, கணிசமான காணொளி காட்சிப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது. இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார். துவக்கால வாழ்க்கை![]() சோப்ரா 1982, யூலை, 18 அன்று பீகாரின், ஜாம்சேத்பூரில், (இன்றைய சார்க்கண்டு) பிறந்தார். இவரது பெற்றோரான அசோக், மது சோப்ரா ஆகிய இருவரும் இந்திய ராணுவ மருத்துவர்களாவர்.[1][2] இவரது தந்தை அம்பாலாவைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி இந்து ஆவார்.[3][4][5] இவரது தாயார் ஜார்க்கண்டைச் சேர்ந்த பிகாரி-மகாஹி இந்து ஆவார். அவர் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரான டாக்டர் மனோகர் கிஷன் அகோரி மற்றும் பீகார் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான மது ஜோத்ஸ்னா அகோரி ஆகியோரின் மூத்த மகள் ஆவார்.[6][7] சோப்ராவின் தாய்வழிப் பாட்டி அகோரி, ஒரு மலையாளி ஜேக்கபைட் சிரிய கிறிஸ்தவர் ஆவார், அவர் முதலில் மேரி ஜான் என்று அழைக்கப்பட்டார்.[8] அவர் கேரளத்தின், குமரகத்தைச் சேர்ந்த காவலப்பரா நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[9] சோப்ராவுக்கு சித்தார்த் என்ற தம்பி உள்ளார், அவர் இவரைவிட ஏழு வயது இளையவர்.[10] பாலிவுட் நடிகைகள் பரினீதி சோப்ரா, மீரா சோப்ரா, மன்னாரா சோப்ரா ஆகியோர் இவரின் உறவினர்கள்.[11] சோப்ராவின் பெற்றோர் இராணுவ மருத்துவர்களாக இருந்ததால், குடும்பம் தில்லி, சண்டிகர், அம்பாலா, இலடாக்கு, இலக்னோ, பரேலி, புனே உட்பட இந்தியாவில் பல பகுதிகளுக்கு பணியின் நிமித்தமாக செல்லவேண்டி இருந்தது. இவர் படித்த பள்ளிகளில் லக்னோவில் உள்ள லா மார்டினியர் பெண்கள் பள்ளி, பரேலியில் உள்ள செயின்ட் மரியா கோரெட்டி கல்லூரி ஆகியவை அடங்கும். டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் வெளியிட்ட ஒரு நேர்காணலில், சோப்ரா தொடர்ந்து பயணம் செய்ததையும் பள்ளிகளை மாற்றுவதையும் பொருட்படுத்தவில்லை என்று கூறினார்; அவர் அதை ஒரு புதிய அனுபவமாகவும், இந்தியாவின் பன்முக கலாச்சார சமூகத்தைக் கண்டறியும் வழியாகவும் வரவேற்றார். இவர் பரேலியை தனது சொந்த நகரமாக கருதுகிறார். மேலும் அங்கு வலுவான தொடர்புகளைப் பேணுகிறார்.[12] 13 வயதில், சோப்ரா அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றார். அங்கு இவரது அத்தையுடன் வசித்தார். அங்கு நியூட்டன், சிடார் ரேபிட்ஸ், அயோவா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் பயின்றார். இவரது அத்தையின் குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தபடி இருந்தது. மாசசூசெட்ஸில் இருந்தபோது, இவர் பல நாடக தயாரிப்புகளில் கலந்துகொண்டார். மேலும் மேற்கத்திய பாரம்பரிய இசை மற்றும் கோரல் பாடல்களைப் பயின்றார். அமெரிக்காவில் தனது விடலைப் பருவத்தில், சோப்ரா சில சமயங்களில் இனப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். ஆபிரிக்க அமெரிக்கர் வகுப்பு தோழர்களால் இந்தியர் என்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சோப்ரா இந்தியா திரும்பினார். தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் மூத்த ஆண்டை பரேலியில் உள்ள இராணுவ பொது பள்ளியில் முடித்தார்.[13][14] இந்த காலகட்டத்தில், சோப்ரா உள்ளூரில் நடந்த மே குயின் அழகுப் போட்டியில் வென்றார். அதன் பிறகு இவர் ரசிகர்களால் பின்தொடரப்பட்டார்; இவருடைய குடும்பத்தினர் இவருடைய பாதுகாப்பிற்காக வெளியே போக விடாமல் வீட்டிலேயே தடுத்து வைக்கபட்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தை வென்றார். சோப்ரா அடுத்து உலக அழகி போட்டியில் வென்றார். அங்கு மிஸ் வேல்ட் 2000 மற்றும் உலக அழகி கான்டினென்டல் ராணி—ஆசியா & ஓசியானியா 30 நவம்பர் 2000 அன்று லண்டனில் மில்லெனியம் டோம் பட்டம் பெற்றார்.[15][16] மிஸ் வேர்ல்ட் வென்ற ஐந்தாவது இந்தியப் போட்டியாளர் சோப்ரா ஆவார். அவர் கல்லூரியில் சேர்ந்திருதார், ஆனால் உலக அழகி போட்டியில் வென்ற பிறகு கல்லூரியில் இருந்து வெளியேறினார். மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்ட் பட்டங்கள் தனக்கு அங்கீகாரத்தைக் கொண்டு வந்ததாகவும், திரைப்பட வாய்ப்புகளைப் பெறத் தொடங்கியதாகவும் சோப்ரா கூறினார்.[17] நடிப்பு வாழ்க்கை![]() மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தை வென்ற பிறகு, பிரியங்கா, அப்பாஸ்-மஸ்தானின் காதல் பரபரப்பூட்டும் படமான ஹம்ராஸ் (2002) என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஓப்பந்தமானார். ஆனால் இடையில் அப்படத்தில் இருந்து விலகினார்.[17][18][19] 2002 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.[20] அதன் பின்னர் பாலிவுட் திரையுலக்குச் சென்றுவிட்டார். 2003 ஆம் ஆண்டில், அவரது முதல் பாலிவுட் திரைப்படமான தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை வெளியிடப்பட்டு வெற்றியும் பெற்றதால் இவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.[21] அந்த ஆண்டின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் அத்திரைப்படமும் ஒன்றானது.[22] அவரின் அடுத்த படம், அக்ஷய் குமாருடன் நடித்த அந்தாஸ் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.[23] அப்படம் மூலம் இவர் பிலிம் பேர் சிறந்த அறிமுக நடிகை விருதையும், பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரையையும் பெற்றார். அவரின் அடுத்த சில திரைப்படங்கள் வணிக ரீதியில் மோசமாக ஓடிய படங்களாக இருந்தன.[24] 2004 ஆம் ஆண்டில், அவருடைய முஜ்சே ஷாதி கரோகி திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் அந்தப்படம் அந்த ஆண்டில் அதிக வசூலான திரைப்படங்களில் மூன்றாவதாக வந்தது.[25] அவரின் அடுத்த வெளியீடு ஐத்ராஸ், இது டெமி மூர் நடித்த டிஸ்க்ளோசர் என்ற படத்தின் இந்தி மறுஆக்கமாகும். அது இவரின் முதல் "எதிர்மறை" பாத்திரமாகும், அதில் இவர் வில்லியாக நடித்தார். இவரின் மிகவும் பாராட்டும்படியான நடிப்பு [26] இவருக்கு பிலிம்பேரின் சிறந்த வில்லன் விருதைப் பெற்றுத்தந்தது. அவர் இரண்டாவது முறையாக பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரையையும் பெற்றார். அதே ஆண்டில், டெம்ப்டேஷன் 2004 என்ற உலகச் சுற்றுலாவில் ஷாருக் கான், சைப் அலி கான், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடன் கலந்துகொண்டார். 2005 ஆம் ஆண்டில் அவரது பல படங்கள் வெளியாகின. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை வணிக ரீதியில் குறிப்பிடும்படி இல்லை.[27] 2006 ஆம் ஆண்டில், சோப்ரா அந்த ஆண்டின் பெரும் வெற்றிபெற்ற இரண்டு திரைப்படங்களில் நடித்தார் - க்ரிஷ் மற்றும் டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்.[28] நிகில் அத்வானியின் குழு படைப்பான, சலாம் ஈ இஸ்க்: எ ட்ரைப்யூட் டூ லவ் திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் சோப்ராவின் முதல் வெளியீடாகும். அந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெற தவறிவிட்டது.[29] சோப்ராவின் அடுத்த வெளியீடான, பிக் பிரதர் திரைப்படமும் வெற்றி பெறவில்லை. 2008 ஆம் ஆண்டில் சோப்ரா நடித்த ஆறு படங்கள் வெளிவந்தன. அவரின் முதல் நான்கு வெளியீடுகளான, லவ் ஸ்டோரி 2050, காட் துசி கிரேட் ஹோ, சாம்கு மற்றும் துரோனா ஆகியவை வெற்றியடையத் தவறிவிட்டன.[30] இருப்பினும் பின்னர் வந்த இவரின் இரண்டு படங்களான பேஷன் மற்றும் தோஸ்தனா ஆகியவை முறையே 26,68,00,000 மற்றும் 44,42,00,000 என்று பாக்ஸ் ஆபிசில் வசூலித்தன.[30] மேலும் பேஷனில் அவரின் நடிப்பு பிற விருதுகளுடன் பிலிம்பேர் சிறந்த நடிகை விருதைப் பெற்றுத் தந்தது. 2009 ஆம் ஆண்டில் நடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள திரைப்படங்கள், விஷால் பரத்வாஜ் இன் காமினி, ஆசுதோஷ் கோவாரிகரின் வாட்ஸ் யுவர் ராசி? மற்றும் ஜூகல் ஹன்ஸ்ராஜ் உடைய பியார் இம்பாசிபிள் ஆகியவையாகும்.[31] தனிப்பட்ட வாழ்க்கை![]() ஒரு இந்துவாக வாழும், சோப்ரா நாள்தோறும் காலையில் தன் வீட்டில் பல்வேறு மூர்த்திகள் கொண்ட சிறிய கோயிலில் பூசை செய்கிறார். இவர் ஊடக நட்பு அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர் என்றாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பகிரங்கமாக பேசத் தயங்குபவராக இருக்கிறார்.[14] சோப்ரா அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனாசுடன் பழகத் தொடங்கினார். ஜோனாஸ், கிரேக்கத்தின், கிரீட்டில் இவரது பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து, 19 யூலை 2018 அன்று இரிடம் தன் காதலைத் தெரிவித்தார்.[32] சோப்ராவும் ஜோனாசும் 2018 ஆகத்தில் மும்பையில் நடந்த பஞ்சாபி ரோகா விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2018 திசம்பரில், இந்த இணையர் ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையில், இந்து மற்றும் கிறிஸ்தவ சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொண்டனர்.[33] திருமணத்திற்குப் பிறகு, சோப்ரா சட்டப்பூர்வமாக தனது முழுப் பெயரை "பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்" என்று மாற்றிக்கொண்டார்.[34] 2022 சனவரியில், இந்த இணையருக்கு வாடகைத்தாய் முதல் குழந்தையாக, ஒரு பெண் குழந்தை பிறந்தது.[35] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia