மக்கள்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்
இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியாவில் 28 மாநிலங்களும் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளும் உள்ளன.[1] 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1.2 பில்லியன் (1,210,569,573) மக்கள்தொகை கொண்ட, இந்தியா, சீனக் குடியரசிற்குப் பிறகு உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கி.மீ. (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. உலகப் பரப்பளவில், இந்தியா 2.4% நிலப்பரப்பைக் கொண்டுள்ளது மற்றும் உலக மக்கள் தொகையில் 17.5% உள்ளது.[2] இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு![]() உத்தரப்பிரதேசம் (16.51%) மகாராஷ்டிரா (9.28%) பீகார் (8.6%) மேற்கு வங்காளம் (7.54%) மத்தியப் பிரதேசம் (6%) தமிழ்நாடு (5.96%) ராஜஸ்தான் (5.66%) கருநாடகம் (5.05%) குஜராத் (4.99%) ஆந்திரப் பிரதேசம் (4.1%) ஏனைய (30.41%)
பிரித்தானியாவின் இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 இல் நடத்தப்பட்டது. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இது 1951 முதல் நிகழ்ந்தது. இந்தியாவில் கணக்கெடுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரின் அலுவலகத்தால் நடத்தப்படுகிறது, இது ஒரு மத்திய அரசு நடத்தும் மிகப்பெரிய நிர்வாக பணிகளில் ஒன்றாகும்.[3] சமீபத்திய மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவை அடிப்படையாகக் கொண்டவை. 2001–2011 தசாப்தத்தில், இந்தியாவின் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.15 சதவீதத்திலிருந்து, 1.76 சதவீதமாகக் குறைந்துள்ளது. தசாப்த கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஆகியவை 55.1 சதவீத வேகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன, அடுத்தடுத்து மேகாலயா (27.8 சதவீதம்), அருணாச்சல பிரதேசம் (25.9 சதவீதம்) உள்ளன. நாகாலாந்து மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தை -0.5 சதவீதமாகப் பதிவு செய்தது. இந்தியாவில் 641,000 மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன, மொத்த மக்கள் தொகையில் 72.2 சதவீதம் பேர் இந்த கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். அவற்றில் 145,000 கிராமங்களில் 500-999 நபர்களின் மக்கள் தொகை உள்ளது; 130,000 கிராமங்கள் 1000-1999 மக்கள்தொகை அளவையும் 128,000 கிராமங்கள் 200-499 மக்கள்தொகை அளவையும் கொண்டுள்ளன. 10,000 நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 3,961 கிராமங்கள் உள்ளன. இந்தியாவின் 27.8 சதவீத நகர்ப்புற மக்கள் 5,100 க்கும் மேற்பட்ட நகரங்களிலும், 380 க்கும் மேற்பட்ட நகர்ப்புற ஒருங்கிணைப்புகளிலும் வாழ்கின்றனர். 1991-2001 தசாப்தத்தில், முக்கிய நகரங்களுக்கு இடம்பெயர்வு நகர்ப்புற மக்கள்தொகையை விரைவாக அதிகரித்தது. கடந்த தசாப்தத்தில் கடைசியாக வசித்தவர்களின் அடிப்படையில், நிகர குடியேறியவர்களின் அடிப்படையில், மகாராஷ்டிராவில் 2.3 மில்லியனுடன் அதிக குடியேற்றம் இருந்தது, அதைத் தொடர்ந்து தேசிய தலைநகர் டெல்லி (1.7 மில்லியன்), குஜராத் (0.68 மில்லியன்) மற்றும் ஹரியானா (0.67 மில்லியன்). உத்தரப்பிரதேசம் (-2.6 மில்லியன்), பீகார் (-1.7 மில்லியன்) ஆகியவை மாநிலங்களுக்கு இடையேயான குடியேற்றத்திற்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள், மொத்த இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (47.90 சதவீதம்) ஆகும். பாலின விகிதத்திற்கான தேசிய சராசரி 2001 இல் 933 ஆக இருந்து 2011 இல் 940 ஆக உயர்ந்துள்ளது. தேசிய குழந்தை பாலின விகிதம் 2001 இல் 927 ஆக இருந்து 2011 இல் 914 ஆக குறைந்துள்ளது. 2 சூன் 2014 அன்று தெலுங்கானா அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட பின்னர், தெலுங்கானா மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆந்திர மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களிலிருந்து பிரிக்கப்பட்டது. பட்டியல்
குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia