லாசு பல்மாசு
![]() லாசு பல்மாசு (Las Palmas, அலுவல்முறையாக லாசு பல்மாசு தெ கிராண் கேனரியா, கேனரித் தீவுகளின் அங்கமாக உள்ள கிராண் கேனரியா தீவின் தலைநகரமும், எசுப்பானியாவின் தன்னாட்சி சமூகமான கேனரித் தீவு அரசின் இணைத் தலைநகரமும் (சான்டா குரூசு தெ டெனிரீஃபேயுடன் கூட்டாக) ஆகும். இதுவே கேனரித் தீவுகளில் உள்ள நகரங்களில் மிகப் பெரியதாகும். எசுப்பானியாவில் ஒன்பதாவது பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 383,308 ஆகும். தீவில் கிட்டத்தட்ட பாதிபேர் (45.9%) இந்த நகரத்தில் வாழ்கின்றனர்; அனைத்து கேனரித் தீவுகளில் வாழ்வோரில் இந்நகரின் மக்கள்தொகை 18.35% ஆகும். தவிரவும் நகரியப் பகுதியில் 700,000 பேர் வசிப்பதால் எசுப்பானியாவில் மிகுந்த மக்கள்தொகை உடைய நகரியப் பகுதிகளில் இது ஐந்தாவதாக உள்ளது.[1][2][3][4][5] ஐரோப்பியக் கண்டத்திற்கு வெளியே ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய நகரமாக லாசு பல்மாசு விளங்குகின்றது. இது கிராண் கேனரியாத் தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; ஆபிரிக்காவின் கடலோரத்திலிருந்து வடமேற்கே அத்திலாந்திக்குப் பெருங்கடலில் 150 கிலோமீட்டர்கள் (93 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.[6] லாசு பல்மாசில் அயன அயல் மண்டல வானிலை நிலவுகின்றது; ஆண்டு முழுமையும் மிதமான வெப்பம் உள்ளது. சிரக்கியூசு பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தாமசு விட்மோர் நடத்திய ஆய்வுகளின்படி, லாசு பல்மாசு "உலகின் சிறந்த வானிலையைக் கொண்டுள்ளது".[7] 1478இல் நகரமாக நிறுவப்பட்ட லாசு பல்மாசு, 17ஆம் நூற்றாண்டு வரை கேனரித் தீவுகளின் நடைமுறைப்படியான தலைநகரமாக விளங்கியது.[8] இன்று, சான்டா குரூசுடன் இணைந்து கேனரித் தீவுகளின் தலைநகரமாக உள்ளது. கேனரித் தீவுகளின் ஆட்சித்தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விரு நகரங்களுக்கிடையே மாறுகிறார். கேனரித் தீவு அரசின் பாதி அமைச்சகங்களும் வாரியத் தலைமையகங்களும் இங்குள்ளன. உயர்நீதி மன்றம் இங்குதான் உள்ளது. எனவே இதனை கேனரித் தீவுகளின் நீதித்துறை மற்றும் வணிகத் தலைநகரம் எனக் கூறலாம். மேலோட்டம்லாசு பல்மாசின் பழைமையான நகரப்பகுதியில் (வேகுயெட்டா) 16ஆவது நூற்றாண்டு முதல் 19ஆவது நூற்றாண்டு வரையான பல தொன்மையானக் கட்டிடங்களைக் காணலாம். 1492இல் கொலம்பசு தங்கியிருந்த வீடு பாதுகாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காக்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னதாக அவர் இங்கு தங்கியிருந்தார். இங்குள்ள பேராலயம் 1500ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள துறைமுகம் எசுப்பானியாவின் நெருக்கடி மிக்க துறைமுகங்களில் ஒன்றாகும். ஐரோப்பாவிற்கும் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்கும் இடையே மிகப் பெரிய துறைமுகமாகவும் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுமையும் இங்குள்ள இதமான வானிலை கருதி வருகின்றனர்; இங்குள்ள லாசு கேன்டெரெசு கடற்கரையும் புகழ்பெற்றது. இந்தக் கடற்கரை 3 கி.மீ. நீளமானது. முதன்மை தொழில்களாக வணிகம், சுற்றுலா, பெட்டியில் அடைத்த உணவு, மீன் பிடித்தல், கப்பல் கட்டுதல் உள்ளன. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia