வார்சிட்டி நடவடிக்கை
வார்சிட்டி நடவடிக்கை (Operation Varsity) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை மேற்கத்திய நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றைக் கடந்து நாசி ஜெர்மனியின் உட்பகுதியில் கால் பதிக்க மேற்கொண்ட பிளண்டர் நடவடிக்கையின் வான்வழித் தாக்குதல் பகுதியாகும். ரைன் ஆற்றைக் கடக்க பிரிட்டானிய ஃபீல்டு மார்ஷல் பெர்னார்டு மோண்ட்கோமரி தலைமையிலான 21வது நேசநாட்டு ஆர்மி குரூப் மார்ச் 24, 1945ல் முயன்றது. இதற்கு துணைசெய்யும் வகையில் இரண்டு நேசநாட்டு வான்குடை டிவிசன்கள் (பிரிட்டானிய 6வது வான்குடை டிவிசன் மற்றும் அமெரிக்க 17வது வான்குடை டிவிசன்) ரைன் ஆற்றின் கிழக்குக் கரையில் வான்வழியே தரையிறக்கப்பட்டன. கிழக்குக் கரையில் உள்ள முக்கிய பாலமுகப்புகளையும், நகரங்களையும் கைப்பற்றுவது இவைகளது இலக்கு. திட்டப்படி இரு படைப்பிரிவுகளும் தரையிறங்கி தங்கள் இலக்குகளைக் கைப்பற்றின. ஏனைய நேசநாட்டுப்படைகள் ஆற்றைக் கடந்து வந்து சேரும் வரை பாலங்களையும் நகரங்களையும் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களை சமாளித்து தக்க வைத்திருந்தன. ஜெர்மானியப்படைகளின் கடும் எதிர்த்தாக்குதலால், இவ்விரு படைப்பிரிவுகளுக்கும் 2,000 இழப்புகள் ஏற்பட்டன. ஜெர்மானியத் தரப்பில் 3,000 வீரர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர். வெற்றிகரமாக முடிவடைந்த இந்த நடவடிக்கையே இரண்டாம் உலகப் போரில் இறுதியாக நடைபெற்ற பெரும் வான்வழித் தாக்குதலாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia