வெரிடபிள் நடவடிக்கை
வெரிடபிள் நடவடிக்கை (Operation Veritable) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். பெப்ரவரி 8-மார்ச் 11, 1945 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் ஜெர்மனியின் ரைன் ஆற்றுக்கும் மியூசே ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதிகளை நேச நாட்டுப்படைகள் கைப்பற்றி ஆக்கிரமித்தன. இந்த நடவடிக்கை ரெய்க்ஸ்வால்டு சண்டை (Battle of the Reichswald) என்றும் அழைக்கப்படுகிறது. 1945 பெப்ரவரி முதல் வாரம் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் மேற்கு திசையிலிருந்து அதைத் தாக்கின. இத்தாக்குதலுக்கு நேசநாட்டு ஐரோப்பிய முதன்மைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஒரு பரந்த முனையில் ஜெர்மனியின் மேற்கு எல்லையெங்கும் தாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார். அத்திட்டத்தின் பகுதியாக ஜெர்மனியின் வடமேற்கு எல்லையில் பிரிட்டானிய ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான நேச நாட்டு 21வது ஆர்மி குரூப் தன் தாக்குதலைத் தொடங்கியது. இப்படைப்பிரிவில் பிரிட்டன் மற்றும் கனடியப் படைப்பிரிவுகள் இடம்பெற்றிருந்தன. இத்தாக்குதலுக்கு வெரிடபிள் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் நேசநாட்டுப்படைகளுக்கு மூன்று விஷயங்கள் பாதகமாக இருந்தன. முதல் கூறு: ரைன் மற்றும் மியூசே ஆறுகளுக்கு இடையேயான பகுதி காடு மண்டிக் கிடந்ததால் எண்ணிக்கையிலும், எந்திரங்களிலும் நேச நாட்டு படைகள் பெற்றிருந்த சாதக நிலை செல்லாமல் போனது. மேலும் இப்பகுதி ஜெர்மானிய எல்லை அரண்நிலையான சிக்ஃபிரைட் கோட்டின் மிகப்பலமான பிரிவுகளில் ஒன்று. பனியாற்று நகர்ச்சியால் திடமற்றுப் போயிருந்த தரையும் நேசநாட்டு கவச வண்டிகளின் ஓட்டத்துக்கு தடங்கலாக இருந்தது. இரண்டாம் கூறு: ஐசனாவரின் திட்டப்படி இத்தாக்குதல் ஒரு பெரும் கிடுக்கிப்பிடித் தாக்குதலின் (pincer encirclement) வடக்கு கிடுக்கியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் திட்டப்படி தெற்கு கிடுக்கித் தாக்குதலை நடத்த முடியவில்லை. ரூர் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த அணைகளை ஜெர்மானியப் படைகள் திறந்து விட்டதால் தெற்குக் கிடுக்கியின் படைப்பிரிவுகள் தாக்க வேண்டிய பகுதிகள் வெள்ளக்காடாயின. இதனால் தெற்குக் கிடுக்கித் தாக்குதல் தாமதமாகி, வடக்கு கிடுக்கிப் படைப்பிரிவுகள் மட்டும் முன்னேறின. இத்தாமத்ததால் ஜெர்மானிய பாதுகாவல் படைகள் தங்கள் கவனம் முழுவதையும் வடக்குக் கிடுக்கி மீது செலுத்த முடிந்தது. மூன்றாவது கூறு: தெற்கு கிடுக்கித் தாக்குதல் தள்ளிப்போனதால் ஜெர்மானியப் படைகளால் இப்பகுதியின் சிக்ஃபிரைட் அரண்நிலைகளை நன்கு பலப்படுத்த முடிந்தது. ஜெர்மானிய தளபதி ஆல்ஃபிரட் ஷ்லெம்மால் புதிய களைப்படையாத துணைப்படைகளையும் நேசநாட்டுப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடிந்தது. இக்காரணங்களால் வெரிடபிள் படைப்பிரிவுகளின் முன்னேற்றம் மிக மெதுவாகவே இருந்தது. கடுமையான எதிர்ப்புக்கிடையே நேசநாட்டுப் படைகள் மெல்ல முன்னேறின. பெப்ரவரி 22ம் தேதி பெரும் இழப்புகளுக்குப்பின் வெரிடபிள் நடவடிக்கையின் முதல் கட்டம் நிறைவேறியது. இதற்குள் வெள்ளம் வடிந்திருந்ததால், தெற்கு கிடுக்கியின் படைப்பிரிவுகளும் முன்னேறத் தொடங்கின. இந்தக் கட்டத்துக்கு பிளாக்பஸ்டர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டது. ரைன் ஆற்றின் கிழக்கு கரையிலிருந்து முடிந்த வரை படைகளையும் தளவாடங்களையும் காலி செய்த ஜெர்மானியர்கள் ஆற்றின் மீதமைந்திருந்த பாலங்கள் வழியாகப் பின்வாங்கினர். இந்தப் பின் வாங்குதலுக்கு முடிந்த வரை கால அவகாசம் அழிக்க எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகள் நேசநாட்டுப் படைகளைக் கடுமையாக எதிர்த்தன. பெரும்பாலான ஜெர்மானியப் படைகள் ரைன் ஆற்றைக் கடந்து தப்பியபின் ஆற்றின் மீதிருந்த பாலங்களை குண்டுவைத்து தகர்த்தன. மார்ச் 4ம், தேதி நேசநாட்டு கிடுக்கியின் இரு கரங்களும் ஒன்றாகி 21வது ஆர்மி குரூப், தெற்கு கிடுக்கிக் கரத்தின் அமெரிக்க 9வது ஆர்மியுடன் கைகோர்த்தது. போர் முடிந்தபின் இதனைப்பற்றி நினைவு கூர்ந்த ஐசனாவர், இந்த நடவடிக்கை போரின் மிகக் கடுமையான சண்டைகளுள் ஒன்றென்றும், கடுமையான எதிர்ப்பினூடே ஒவ்வொரு கெஜமாக எதிரியிடமிருந்து கைப்பற்ற வேண்டியிருந்ததென்றும் கூறினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia