விராட் கோலி (Virat Kohli, ஒலிப்புⓘ, பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[3]
2014 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவரிசையின் படி பன்னாட்டு இருபது20 மட்டையாளர்களின் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார். 2017 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தற்போது இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தரவரிசையில் அதிகபட்சமாக (934 புள்ளிகள்) பெற்றார். .[5][6][7] ஒருநாள் போட்டிகளில் 911 புள்ளிகள் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.மேலும் 2017 (நவம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை பன்னாட்டு ஒருநாள் போட்டி தரப்படுத்தலில் முதல் இடத்தில் இருந்தார்[8] மேலும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 897 புள்ளிகள் பெற்றுள்ளார்.[9]
2012 ஆம் ஆண்டில் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான உதவித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் 2014 ஆம் ஆண்டில் மஹேந்த்ரசிங் தோனி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதன் தலைவர் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது. இலக்குகளைத் துரத்தும் போது அதிக நூறு அடித்தவர்கள் பட்டியலில் இவருக்கு இரண்டாமிடம் கிடைத்தது. இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக விரைவாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்5000 ஓட்டங்கள் எடுத்தவர், விரைவாக நூறு ஓட்டங்களை பத்து முறை எடுத்தவர் ஆகியன ஆகும். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 1000 ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது வீரரானார். இது மட்டுமல்லாது பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்றவர், ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்கள் மற்றும் ஐம்பது ஓட்டங்கள் அதிக முறை பெற்றவர் எனும் சாதனைகளைப் படைத்தார்.[10] ஒரு நாள் தரவரிசையில் (மட்டையாளர்களுக்கானது) 909 புள்ளிகள் பெற்றார்.[11] இந்திய வீரர் பெறும் அதிகபட்ச புள்ளி இதுவாகும். மேலும் இருபது 20களில் 897 புள்ளிகளும்,[9] தேர்வுத் துடுப்பாட்டங்களில் 912 புள்ளிகளும் பெற்றார்.
ஆடுவரிசையில் நடுவில் களமிறங்கும் கோலி சில நேரங்களில் துவக்க மட்டையாளராகவும் களமிறங்கியுள்ளார். "கவர்" பகுதியில் சிறப்பாக ஆடுவதற்காக பெயர் பெற்றவர். இவர் வலது கை மிதவேகபந்து வீச்சாளரும் ஆவார்.[12]
விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது , 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, 2016மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது [13] . இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் பத்மஶ்ரீ விருது வழங்கியது.[14]. துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவது மட்டுமல்லாது இந்தியன் சூப்பர் லீக் போட்டித் தொடரில் எஃப்சி கோவா அணி,சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் தொடரில் ஐக்கிய அரபு ராயல்ஸ் மற்றும் இந்திய மற்போர் போட்டித் தொடரில் பெங்களூரு யோதாஸ் அணிகளை இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரை ஈஎஸ்பிஎன்அறிவித்தது.[15] மேலும் மதிப்புமிக்க தடகள வீரர்களில் ஒருவராக இவரை போர்ப்ஸ் இதழ் அறிவித்தது.[16]2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.[17] ஏப்ரல் 22, 2021இல் ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.[18]
பிறப்பு
விராட் கோலி நவம்பர் 5, 1988 இல் புது தில்லியில் பிறந்தார். இவர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர்.[19] இவரின் தந்தை பிரேம் கோலி குற்றவியல் வழக்கறிஞர், தாய் சரோஜ் கோலி குடும்பத் தலைவி ஆவார்.[20] இவருக்கு விகாஷ் எனும் மூத்த சகோதரரும், பாவ்னா [21] எனும் அக்காவும் உள்ளனர். கோலிக்கு மூன்று வயதாக இருக்கும் போது மட்டையை எடுத்துக் கொண்டு தனது தந்தையை பந்து வீசச் சொல்வார் என இவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.[22]
இவர் உத்தம்நகரில் வளர்ந்தார்.[23] அங்குள்ள விசால் பாரதி பொதுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை பயின்றார். 1998 ஆம் ஆண்டில் மேற்கு புதுதில்லி துடுப்பாட்ட அகாதமி துவங்கப்பட்டது. அதில் ஒன்பது வயதான கோலி முதன்முதலாக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[23] கோலியின் அருகாமையில் வசிப்பவர் அவரின் தந்தையிடம் கோலியின் திறமையை தெரு துடுப்பாட்டங்களில் விளையாடி வீணாக்க வேண்டாம் எனக் கூறி அவரை அகாதமியில் சேர்க்கும்படி வலியுறுத்தினார்.[20] அங்கு அவர் ராஜ்குமார் சர்மா அவர்களிடம் துடுப்பாட்ட நுனுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும் கிழக்கு தில்லியில் உள்ள சுமீத் தோக்ரா அகாதமி அரங்கில் போட்டிகளில் விளையாடினார்.[23] கோலியின் திறமையைப்பற்றி அவரின் பயிற்சியாளர் பின்வருமாறு கூருகிறார்.
இளமைக்காலங்களில் கோலியை அமைதியாக வைத்திருப்பது என்பது மிகவும் கடினமாகவே இருந்தது. அவர் இயல்பாகவே சிறப்பாக விளையாடும் திறமையைப்பெற்றிருந்தார். மேலும் அவரின் மனப்பாங்கு என் மனதில் பதிந்தது எனவும் கூறினார். மேலும் பயிற்சி நேரம் முடிவடைந்த பிறகும் அவர் வீட்டிற்கு செல்லமாட்டார். நான் வற்புறுத்திய பிறகும் அவர் வீட்டிற்குச் செல்லாமல் விளையாடி வந்தார் எனக் கூறினார்.[24] பின் ஒன்பதாவது படிக்கும்போது பசிம் விகாரில் உள்ள சேவியர் மடப்பள்ளியில் பயின்றார். அங்கு அவர் துடுப்பாட்டப் பயிற்சியில் ஈடுபட இது உதவியாக இருந்தது.[20] துடுப்பாட்டம் மட்டுமல்லாது கற்றலிலும் கோலி சிறப்பாக பயின்றுள்ளார். அவரைப் பற்றி அவரின் ஆசிரியர்கள் நினைவு கூறுகையில் கோலி சிறப்பான மாணவனாக இருந்தார் எனக் கூறினர்.[25] கோலியின் குடும்பம் 2015 ஆம் ஆண்டு வரை மீரா பாவிலும் அதன் பின் குருகிராமிலும் வசித்து வருகின்றனர்.
கோலியின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக ஒரு மாதமாக படுக்கையில் இருந்தார். பின் வலிப்பு காரணமாக டிசம்பர் 18, 2006 இல் காலமானார். தனது குடும்பத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் எனது வாழ்க்கையில் நான் பல நிகழ்வுகளைக் கடந்து வந்துள்ளேன். எனது தந்தையை நான் எனது இளமைக் காலத்திலேயே இழந்தேன். எனது குடும்பத்தின் தொழிலும் சரியான வருமானத்தை ஈட்டவில்லை. அதனால் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தோம். அந்த காலகட்டங்கள் மிகவும் கடினமானதாக இருந்தது. இப்போதும் அந்த நிகழ்வுகள் அனைத்தும் என் மனதில் ஆழப் பதிந்துள்ளது எனக் கூறினார்.[26] எனது சிறுவயதில் நான் துடுப்பாட்டம் விளையாடுவதற்கு எனது தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார். தினமும் பயிற்சியில் ஈடுபட அவர் உதவினார். அவரின் இழப்பை சில சமயங்களில் உணர்ந்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.[27]
சர்வதேச போட்டிகள்
ஆரம்பகாலங்களில்
ஆகஸ்டு, 2008 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரிலும் பாக்கித்தானில் நடைபெற்ற வாகையாளர் கோப்பையிலும் இந்திய அணியில் இடம்பெற்றார். இலங்கைத் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக கோலி எட்டு பட்டியல் அ துடுப்பாட்டம் துடுப்பாட்டங்களில் மட்டுமே விளையாடிருந்தார். அவரின் தேர்வு ஆச்சரியமானதாக இருந்தது.[28][29]சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததால் அந்தத் தொடர் முழுவதும் துவக்கவீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது 19 ஆவது வயதில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.[30]. தனது நான்காவது போட்டியில் தனது முதல் அரைநூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். அந்தப் போட்டி மற்றும் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது.[30] அந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஓட்டங்கள் முறையே 37, 25 மற்றும் 31 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.[30] இந்திய அணி 3-2 எனும் வித்தியாசத்தில் இலங்கையில் முதல் முறையாக வென்றது.
2019 துடுப்பாட்ட உலகக் கிண்னம்
ஏப்ரல் 2019 இல் 2019 உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.[31][32] சூன் 16, 2019 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது ஒருநாள் போட்டிகளில் விரைவாக 11,000 ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். 222 போட்டியில் இவர் இந்தச்சாதனையைப் படைத்தார்.[33] பின் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது சர்வதேசப்போட்டிகளில் விரைவாக 20,000 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். 417 ஆட்டப் பகுதிகள் விளையாடி இவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.[34]
ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் 10000 ஓட்டங்கள்
2018 அக்டோபர் 23 ஆம் நாள், இந்தியாவில், விசாகப்பட்டிணத்தில்மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் நடந்த ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் 81 ஓட்டங்களை எடுத்த போது விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார். உலக அளவில் 10000 ஓட்டங்கள் கடந்த 13 ஆவது வீரர் ஆவார். இந்திய அளவில் 10,000 ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது வீரர் ஆவார். இருப்பினும் இவர் தான் மிகக்குறைந்த போட்டிகளில் இந்த இலக்கைக்கடந்த முதல் வீரர் ஆவார்.[35]
சொந்த வாழ்க்கை
வோக் விருதுகள் வழங்கும் நிகழ்வில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா.
விராட் கோலி, அனுஷ்கா சர்மா உடன் 2013-ம் ஆண்டு முதல் உறவு வலுப்படுத்துதலில் (டேட்டிங்) இருந்தார். இந்த நட்சத்திர இணை விருஷ்கா என அழைக்கப்பட்டனர்
[36][37] இவர்களின் உறவு நிலை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின ஆனால் அதனைப் பற்றி இவர்கள் இருவரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கவில்லை.[38] டிசம்பர் 11 2017 இல் இத்தாலியில் உள்ள புளோரன்சில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்[39][40]
தான் மூடநம்பிக்கை கொண்டவர் என்று கோலி ஒப்புக் கொண்டுள்ளார். அவர் கருப்பு கைக்கடிகாரங்களை அணிந்திருந்தார். முன்னதாக, கருப்பு கையுறைகளை அணிவதன் மூலம் அதிக ஓட்டங்களை எடுக்க முடிந்தது என நம்பினார். ஒரு கருப்பு மத நூல் தவிர, அவர் 2012 முதல் தனது வலது கையில் காரா அணிந்திருக்கிறார்.[41]
வணிக முதலீடுகள்
இவரின் கருத்துப்படி கால்பந்து தனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது விளையாட்டு எனத் தெரிவித்துள்ளார்.[42] 2014ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இவர் எப் சி கோவா அணியை வாங்கினார். இதனைப் பற்றி குறிப்பிடுகையில் தனக்கு கால்பந்து மீது உள்ள ஆர்வத்தினாலும் இந்தியாவில் கால்பந்து வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தினாலும் முதலீடு செய்வதாகக் கூறினார்.[43]
செப்டம்பர் 2015 இல், கோலி சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக்கின் யுஏஇ ராயல்ஸின் இணை உரிமையாளரானார்,[44] அதே ஆண்டு டிசம்பரில், புரோ மல்யுத்த லீக்கில் ஜே.எஸ்.டபிள்யூவின் இணை உரிமையாளரானார்.[45]
நவம்பர் 2014 இல், கோலி மற்றும் அஞ்சனா ரெட்டியின் யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பிஸ் (யுஎஸ்பிஎல்) இளைஞர்களுக்கான WROGN ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் ஆண்கள் அணிந்து கொள்ளும் சாதாரண உடைகள் தயாரிக்கத் தொடங்கியது. பின்னர் இந்த நிறுவனம் மிந்த்ரா மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் உடன் இணைந்துள்ளது.[46] 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கோலி லண்டனை தளமாகக் கொண்ட 'ஸ்போர்ட் கான்வோ' என்ற சமூக வலைப்பின்னல் நிறுவனத்தின் பங்குதாரராகவும் விளம்பர தூதராகவும் அறிவிக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டில், கோலி சுமார் ₹900 மில்லியன் (ஐஅ$11 மில்லியன்) அளவில் நாடு முழுவதும் உடற்பயிற்சி நிலைய கிளைகளைத் துவங்கினார். சிசெல் இந்தியா மற்றும் கோலியின் வணிக நலன்களை நிர்வகிக்கும் சிஎஸ்இ (கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் அண்ட் என்டர்டெயின்மென்ட்) ஆகியோர் இணைந்து நிறுவிய இதற்கு சிசெல் எனப் பெயரிட்டனர்.[47] 2016 ஆம் ஆண்டில், ஸ்டெபத்லான் லைஃப்ஸ்டைலுடன் இணைந்து, ஸ்டெபத்லான் கிட்ஸ் என்ற குழந்தைகள் உடற்பயிற்சியினைத் தொடங்கினார்.[48]
ஏற்பிசைவுகள்
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்குப் பிறகு கோலியை கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் அண்ட் என்டர்டெயின்மென்ட்டின் விளையாட்டு முகவராக ஒப்பந்தம் செய்தது.இதனைப் பற்றி சஜ்தே நினைவு கூர்கையில் , "அவர் நட்சத்திரம் ஆன பிறகு நான் அவரைப் பின் தொடரவில்லை. உண்மையில், கோலாலம்பூரில் 2008 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் விராட்டைப் பார்த்தேன். அவரது அணுகுமுறை மற்றும் அவர் தனது அணியை வழிநடத்தும் விதம் ஆகியவற்றினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவருக்குள் ஒரு தீப்பொறி இருந்தது. கூட்டத்தை அமைக்குமாறு யுவியிடம் சொன்னேன். " [49] மற்ற இந்திய துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா மற்றும் முரளி விஜய் ஆகியோருடன் கோலியின் ஒப்புதல் ஒப்பந்தங்களை சஜ்தே நிர்வகிக்கிறார். அது 2013 இல் அறிவிக்கப்பட்டது கோலியின் நிறுவன ஒப்பந்தங்களின் மதிப்பு ₹1 பில்லியன் (ஐஅ$12 மில்லியன்) ஆகும்.[50] எம்.ஆர்.எஃப் உடனான இவரது ஒப்பந்தம் இந்திய துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.[49] 2017 ஆம் ஆண்டில், பூமாவுடன்₹1.1 பில்லியன் (ஐஅ$13 மில்லியன்) மதிப்புள்ள எட்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
2014 ஆம் ஆண்டில், அமெரிக்க மதிப்பீடானது கோலியின் நிறுவன மதிப்பு சுமார் 56.4 மில்லியன் US$ என்று மதிப்பிட்டது. இதன்மூலம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிரபல பிராண்டுகளின் பட்டியலில் இவரது நிறுவனம் நான்காவது இடத்தைப் பிடித்தது.[51] அதே ஆண்டில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ப்ரோ, லூயிஸ் ஹாமில்டனுக்குப் அடுத்ததாக கோலியை உலகின் இரண்டாவது அதிக சந்தைப்படுத்தக்கூடிய விளையாட்டு வீரராக மதிப்பிட்டது, இவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் உசேன் போல்ட் ஆகியோருக்கு முன்னராக இடம் பெற்றார்[52]
சாதனைகள்
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி
அதிவேக நூறு ஓட்டங்கள் அடித்தவர் (52 பந்துகளில்).[53]
அதிவேககமாக 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர்[35][65]
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் தலைவர் எனும் சாதனை படைத்தார்.[66]
சூன் 16, 2019 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது ஒருநாள் போட்டிகளில் விரைவாக 11,000 ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். 222 போட்டியில் இவர் இந்தச்சாதனையைப் படைத்தார்.[33]
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது சர்வதேசப்போட்டிகளில் விரைவாக 20,000 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். 417 ஆட்டப் பகுதிகள் விளையாடி இவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.[34]
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் இந்தியாவில் அதிக நூறு ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார் (21). சச்சினின் 20 நூறு ஓட்டங்கள் எனும் சாதனையினை முறியடித்தார்.[67]
சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்கள் எடுத்த வீரர்.[71]
அனைத்துவடிவ போட்டிகளிலும் விரைவாக 50 நூறுகள் எடுத்தவர்(அசீம் ஆம்லாவும்) (348 இன்னிங்ஸ்)[72]
அனைத்துவடிவ போட்டிகளிலும் சராசரி 50 க்கும் மேல் வைத்துள்ளார்[73]
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் வீரர்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரர். தேர்வு (937 புள்ளிகள் 9ஆகஸ்டு 23, 2018) , ஒருநாள் (911 புள்ளிகள் (பெப்ரவரி 16,2018)) மற்றும் இருபது20 (897 புள்ளிகள் (செப்டம்பர் 14, 2014)[74][75]
சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளில் 27000 ஓட்டங்களை நிறைவு செய்திருக்கும் 4வது வீரரும் 2வது இந்திய வீரருமாவார்.[76]
தலைவராக
தொடர்ச்சியாக 9 தேர்வுத் துடுப்பாட்டப் தொடர்களில் (2015-2017) வெற்றி. ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன செய்தார் (2005-2008)
தலைவரக விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் நூறுகள் அடித்தவர் மற்றும் இரண்டு ஆட்டப்பகுதிகளில் தொடர்ச்சியாக நூறுகள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார். கிறெக் சப்பல் சாதனையை சமன் செய்தார்.[77]
இருநூறுகள் அடித்த முதல் இந்தியத் தலைவர் ஆவார்.[78]
இருநூறுகள் இரண்டிற்கும் மேர்பட்ட முறைகள் அடித்த முதல் இந்தியத் துடுப்பாட்டத் தலைவர்.