வ. வே. சுப்பிரமணியம்

வ. வே. சுப்பிரமணிய ஐயர்
பிறப்பு2 ஏப்ரல் 1881
அக்ரஹாரம், வரகனேரி,திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு4 சூன் 1925(1925-06-04) (அகவை 44)
பாபநாசம் ஏரி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
பாபநாசம் ஏரியில் மூழ்கி இறப்பு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வ. வே. சு. ஐயர்
கல்விலிங்கன் இன், இலண்டன்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம், இலக்கியம்
பெற்றோர்(கள்)வெங்கடேச ஐயர், காமாட்சியம்மாள்

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், 2 ஏப்ரல் 1881–4 ஜூன் 1925)[1] இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ்ச் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.[2]

பிறப்பு

வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார்.[3] வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

கல்வி

வ.வே.சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.[4]

தொழில்

வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907-இல் வ.வே.சு. ரங்கூன் வழி லண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

இலண்டனில் அரசியல் போராட்டம்

பட்டம் பெற வந்த வ.வே.சு. வை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு. ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சு.வும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.

1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்தியா ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ.வே.சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ.வே.சு. வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் டிங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர்.

பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு. சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு. ஐயரை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சு. ஐயரும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவு பார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரித்தானிய உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9 இல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

புதுச்சேரி அரசியல் வாழ்க்கை

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உளக்கிடக்கையாக விளங்கிய கொரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

முதல் உலகப் போரின்போது, வ.வே.சு. வை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது. கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வ.வே.சு. தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வ.வே.சு. ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.

புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வ.வே.சு. மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.

அகிம்சாவாதியாதல்

இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு. பிரிட்டிஷில் இருந்து இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வ.வே.சு. 1920-இல் பொது மன்னிப்புப் பெற்றுத் திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு. ஏற்றார். 1920-இல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரைக் காவுகொள்ள நினைத்தது. தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.

பாரதியுடன் நட்பு

மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா. கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வ.வே.சு.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு., நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னார்கள். "பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்.

வ.வே.சு. வின் உருவ அமைப்பு

முழு உருவப்படம்
முழு உருவப்படம்

வ.வே.சு. கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் கறுப்பு தாடி; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; நடப்பதற்கும் நடை என்று பெயர், ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு.

தமிழ் குருகுலமும் ஒப்பற்ற பணிகளும்

1922-இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடங்கினார்.[5] அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924-இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.

தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன.

சர்ச்சை

1925-இல் வ.வே.சு. வின் பரத்வாஜ் குருகுலத்தில் பிராமணச் சிறுவர்களுக்குத் தனியாகவும் பிராமண அல்லாத சிறுவர்களுக்குத் தனியாக உணவளிக்கப்படுகின்றது என்ற செய்தியை ஓமந்தூர் ராமசாமியின் மகன் சுந்தரம் பெரியாரிடம் (ஈ. வே. ராமசாமி) கூறியதும் சர்ச்சையை உண்டாக்கியது. பெரியார் , பிராமணரல்லாதோர் இந்திய தேசிய காங்கிரசில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டிக் கட்சியிலிருந்து வெளியேறிச் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.

தமிழிலக்கிய பங்களிப்பு

மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.

  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
  • இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
  • 1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இலேயே நூலாக வெளிவந்தது. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
  • கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
  • கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
  • பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.
  • இலண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
  • மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, "கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  • பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.

மறைவு

தம் குருகுல மாணவர்களுடன் 1925 சூன் 3 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். 1925 சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வ.வே.சு. ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.[1]

நினைவு இல்லம்

தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் வரகனேரி, அக்ரஹாரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவரது நினவாகத் சேரன்மகாதேவியில் வ.வே.சு. ஐயர் மாணவர் விடுதி உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 முனைவர் சி. சேதுராமன் (10 சூலை 2011). "தமிழ்ச் சிறுகதையின் தந்தை". திண்ணை. Retrieved 5 சூன் 2016.
  2. Ebeling (2010), ப. 244
  3. பெ. சு. மணி (27 செப்டம்பர் 2009). "தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்". தினமனி. Retrieved 5 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. 100010509524078 (2017-06-04). "வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925". Maalaimalar (in English). Archived from the original on 2021-11-06. Retrieved 2021-11-06. {{cite web}}: |last= has numeric name (help)CS1 maint: unrecognized language (link)
  5. "வ வே சுப்பிரமணிய ஐயர் 10". Hindu Tamil Thisai. Retrieved 2021-11-06.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya