45-ஆவது சதுரங்க ஒலிம்பியாது (45th Chess Olympiad, அங்கேரியம்: 45. sakkolimpia) என்பது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பால் (பிடே) அங்கேரியின்புடாபெசுட் நகரில் 2024 செப்டம்பர் 10 முதல் 23 வரை ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பன்னாட்டு சதுரங்கக் குழுப் போட்டியாகும். 1926 இல் 2-ஆவது அதிகாரப்பூர்வமற்ற சதுரங்க ஒலிம்பியாது போட்டிகளை நடத்திய அங்கேரி அதற்குப் பிறகு முதல் தடவையாக ஒலிம்பியாது போட்டிகளை 2024 இல் நடத்தியது.[1]
மொத்தம் 1,884 போட்டியாளர்கள் இதில் பங்குபற்றினர்: இவர்களில் 975 பேர் திறந்த சுற்றிலும், 909 பேர் பெண்கள் சுற்றிலும் விளையாடினர். 195 நாடுகளில் இருந்து 197 பதிவு செய்யப்பட்ட குழுக்கள் திறந்த சுற்றில் பங்குபற்றின, பெண்கள் சுற்றில் 181 நாடுகளில் இருந்து 183 குழுக்கள் பங்குபற்றின.[2] இரு பிரிவுகளும் குழுப் பங்கேற்பு சாதனைகளை நிகழ்த்தின. பெண்கள் நிகழ்வில் பல தேசிய அணிகள் முதற்தடவையாகப் பங்கேற்றன. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பல வீரர்கள் விளையாட முடிவு செய்தனர், இது பிடே மகளிர் ஆணையத்தால் நடத்தப்படும் "தேசியப் பெண் குழு முன்முயற்சி", "செஸ்மொம்" (ChessMom) நிகழ்ச்சிகளின் விளைவாகும். பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், குழந்தைப் பராமரிப்பு வழங்குவதை ஆதரித்தல் ஆகியன இவற்றில் சில.[3] கூடுதலாக, இரண்டு பிரிவுகளிலும் ஏதிலி அணிகள் பங்கேற்ற முதல் சதுரங்க ஒலிம்பியாது இதுவாகும். பிடேயின் அகதிகளுக்கான முன்முயற்சியின் மூலம் "பாதுகாப்பிற்கான சதுரங்கம்" முயற்சிகள் இதற்குக் காரணம்.[4] நிகழ்வின் தலைமை நடுவராக சிலோவாக்கியாவின் பன்னாட்டு நடுவர் இவான் சிரோவி இருந்தார்.
2022 பெண்கள் போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்ற பிறகு, சதுரங்க ஒலிம்பியாதில் நாட்டின் முதல் ஒட்டுமொத்த வெற்றிகளான திறந்த, மற்றும் பெண்கள் ஆகிய இரண்டிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. 2018 க்குப் பிறகு ஒரே நாடு இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். மேலும் முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியா அவ்வாறு செய்த மூன்றாவது நாடு ஆனது. இந்தியாவின் குகேசு தொம்மராஜு 3056 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் (10 புள்ளிகளில் 9 புள்ளிகளைப் பெற்றார்) திறந்த நிகழ்வில் ஒரு தனிப்பட்ட வீரருக்கான அதிகபட்ச செயல்திறனைக் கொண்டிருந்தார். இசுரேலிய வீராங்கனையான தானா கொச்சாவி பெண்கள் நிகழ்வில் 2676 என்ற செயல்திறன் மதிப்பீட்டில் மிக உயர்ந்த தனிப்பட்ட செயல்திறனைக் கொண்டிருந்தார் (இவர் சாத்தியமான 8 புள்ளிகளில் 8 புள்ளிகளைப் பெற்றார்).
95வது பிடே மாநாடும் இந்த ஒலிம்பியாது போட்டியின் போது நடந்தது, அதில் பிடே-யின் பொதுச் சபை உருசிய, பெலாருசிய வீரர்கள் மீதான தடையை உறுதிசெய்தது.[5]