சிவபெருமான் மும்மணிக்கோவை

சிவபெருமான் மும்மணிக்கோவை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை.

அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக மாறி மாறி வருமாறு அடுக்கப்பட்டுள்ள 30 பாடல்களைக் கொண்டது இந்த நூல்.

இதன் ஆசிரியர் இளம்பெருமானடிகள்; காலம் 8ஆம் நூற்றாண்டு.

பாடல்

அகவல் பாடல் 4
சடையே, நீரகம் ததும்பி நெருப்பு கலிக்கும்மே
மிடறே. நஞ்சகம் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
வடிவே, முளிஎரி கவைஇத் தளிர் தயங்கும்மே
அடியே, மடங்கல் மதம் சீறி மலர் பழிக்கும்மே
அஃதான்று, இனைய என்று அறிகிலம் யாமே, முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவேலோயே[1]
வெண்பா பாடல் 8
உடைதலையின் கோவை ஒருவடமோ, கொங்கை
புடைமலிந்த வெள்ளேருக்கம் போதோ, - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ[2] முக்கண்ணான்
இன்னநாள் கட்ட(து) இவள்.[3]
கட்டளைக்கலித்துறை பாடல் 24
தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிக்(கு)எற் றேஇவன்ஓர்
பேரிளங் கொங்கைப் பிணவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டம் சுமந்தையம் வேண்டி உழிதருமே. [4]

காலம் கணித்த கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. சிவனது செஞ்சடை நெருப்பில் நீர் (கங்கை) தளும்புகிறது. தொண்டையிலுள்ள நஞ்சில் அமிர்தம் ஊறுகிறது. தணலெரியும் உடலில் தளிர் பூக்கிறது. புலிமடங்கலை மிதித்த காலடி பூவாக மலர்கிறது. (என்னே விந்தை!)
  2. 'முகிணிலவோ' என்பது பாடம்
  3. (இது அகத்திணைப் பாடல்) இவள் இவனிடம் என்ன கண்டாள்? மண்டையோட்டு மாலையா, பாகத்தம்மை கொங்கைமேல் கிடக்கும் வெள்ளெருக்கம் பூவா, சடைமுடிமேல் பூத்திருக்கும் நிலாவா. (இவள் சிவனையே நினைக்கிறாளே)
  4. (இது அகத்திணைப் பாடல்) இவள் தலைமை மிக்க ஏர் இள மென் முலையாட்டி. இவள் முன் இவன் (சிவன்) எதற்காக வருகிறான்? தார் இளங் கொன்றை அணிந்துள்ளான். ஏற்றில் ஏறி ஓட்டிக்கொண்டு வருகிறான். ஒருபக்கம் பெண்ணை அணைத்துக்கொண்டு வருகிறான். இளநிலாப் பெண்ணைச் சுமந்துகொண்டு வருகிறான். (இவனைக் காமுறும் இவள் நிலை என்னவாகமோ)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya