மங்கோலியர்களின் மேற்கத்திய சியா படையெடுப்பு
மங்கோலியர்களின் மேற்கத்திய சியா படையெடுப்பானது மங்கோலியப் பேரரசிற்கும், மேற்கத்திய சியா (சீனம்: 西夏; பின்யின்: Xī Xià) (தாங்குடு பேரரசு அல்லது மின்யா) வம்சத்திற்கும் நடைபெற்ற தொடர் மோதல்களாகும். கொள்ளையிடுவதற்கும், ஒரு சக்திவாய்ந்த கப்பம் கட்டும் நாட்டைப் பெறுவதற்கும் மங்கோலியத் தலைவர் செங்கிஸ் கான் ஆரம்பத்தில் சில சிறு தாக்குதல்களை மேற்கத்திய சியாவிற்கு எதிராக நடத்தினார். பின் கி.பி. 1209ல் முழு படையெடுப்பைத் தொடங்கினார். இதுவே செங்கிஸ் கான் ஆரம்பித்த முதல் பெரிய படையெடுப்பாகும். மங்கோலியர்களின் சீனப் படையெடுப்பிற்கு இதுவே ஆரம்பம் ஆகும். ஒரு வருடத்திற்கு மேற்கத்திய் சியாவின் தலைநகரமான இன்சுவான் முற்றுகையிடப்பட்டது. நகரை எப்படிக் கைப்பற்றுவது என்பது மங்கோலியர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடம் குதிரையும், வில் அம்புகள் மட்டுமே இருந்தன. இதனால் ஒரு நேரத்தில் மஞ்சள் நதியை நகருக்குள் திருப்பிவிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டத்திற்காகப் போடப்பட்ட தடுப்பரண் உடைந்து மங்கோலியர்களின் கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மங்கோலியர்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அத்திட்டம் தோல்வியில் முடிந்தது. இவ்வாறு நடந்தபோதிலும் மங்கோலியர்கள் மேற்கத்திய சியாவிற்கு பிரச்சினையாக இருந்தனர். மேற்கத்திய சியாவின் பயிர்கள் அழிக்கப்பட்டன. சின் அரசமரபின் மன்னரும் உதவிக்கு வர மறுத்தார்.[1] பேரரசர் லி அன்குவான் கி.பி. 1210 சனவரியில் மங்கோலிய ஆட்சிக்கு அடிபணிந்தார். தனது விசுவாசத்தைக் காட்ட தன் மகள் சகாவை செங்கிஸ் கானுக்கு மணம் முடிக்கக் கொடுத்தார். ஒட்டகங்கள், வல்லூறுகள் மற்றும் துணிமணிகள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டன. சுமார் 10 வருடங்களுக்கு மேற்கத்திய சியா மங்கோலியர்களுக்குக் கப்பம் கட்டியது. மங்கோலியர்-சின் போரில் உதவி செய்தது. ஆனால் செங்கிஸ் கான் கி.பி. 1219ல் குவாரசமியாவின் மேல் படையெடுத்தபோது மேற்கத்திய சியா மங்கோலியப் பேரரசில் இருந்து விலகியது. சின் மற்றும் சாங் அரசமரபுகளுடன் கூட்டு வைத்துக் கொண்டது. இந்த நம்பிக்கை துரோகம் காரணமாக செங்கிஸ் கானுக்குக் கோபம் ஏற்பட்டது. இதற்குத் தண்டனையாக கி.பி. 1225ல் இரண்டாவது முறையாக மேற்கத்திய சியா படையெடுப்பிற்கு உள்ளானது. செங்கிஸ் கான் மேற்கத்திய சியாவின் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க நினைத்தார். மேற்கத்திய சியாவின் நகரங்களும், நாட்டுப் புறமும் திட்டமிடலுடன் அழிக்கப்பட்டன. கி.பி. 1227ல் தலைநகரம் முற்றுகையிடப்பட்டது. இந்த முற்றுகையின் முடிவில் செங்கிஸ் கான் உடல்நலக்குறைவால் இறந்தார். இவரது இறப்பிற்குப் பிறகு இன்சுவான் மங்கோலியர்களிடம் வீழ்ந்தது. பின்புலம்மேற்கு சியா அரசமரபு அல்லது சி சியா அல்லது தாங்குடு பேரரசு அல்லது மின்யா என அழைக்கப்படும் இந்த அரசு 1038 இல் உருவானது. இது சீனாவின் வடமேற்கு மாகாணங்களான நிங்சியா, கன்சு கிழக்கு சிங்கை, வடக்கு ஷான்க்ஷி, வடமேற்கு சின்ஜியாங், தென்மேற்கு உள் மங்கோலியா மற்றும் மங்கோலியாவின் தெற்குப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.[2][3][4] இது ஒரு சிறிய அரசு ஆகும். இது அதன் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த அண்டை நாடுகளுடன் ஆதிக்கப்போட்டியில் போராடிக் கொண்டிருந்தது. இதன் அண்டை நாடுகளாக கிழக்கு மற்றும் வட கிழக்கில் லியாவோ அரச மரபும் தென்கிழக்கில் சாங் அரச மரபும் இருந்தன. 1115 இல் லியாவோ அரசமரபை சின் அரசமரபு வெற்றி கொண்டபோது மேற்கு சியா புதிய அரச மரபுக்குக் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டது. மேற்கு சியா சாங் அரச மரபுக்கு எதிரான சின் அரச மரபின் போரில் சின் அரசு மரபுக்கு உதவி செய்தது. இதன்மூலம் மேற்கு சியா ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பளவை சாங் பகுதிகளிலிருந்து பெற்றது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல மேற்கு சியா மற்றும் சின் அரச மரபுக்கு இடையேயான நட்பானது குறைந்து கொண்டே சென்றது. மேற்கு சியாவின் நான்காவது ஆட்சியாளரான பேரரசர் ரென்சோங் இறந்த பிறகு பேரரசர் குவான்சோங் ஆட்சிக்கு வருகிறார். இதன் பிறகு மேற்கு சியாவின் சக்தியானது குறையத் தொடங்குகிறது. ராணுவ ரீதியாக அண்டை நாடான சின் அரசமரபை விட மேற்கு சியாவின் பலம் குறைவாக இருந்த போதிலும் வடக்கு புல்வெளியில் அது ஆதிக்கம் செலுத்தியது. மேற்கு சியா அடிக்கடி துரத்தப்பட்ட கெரயிடு தலைவர்களை வரவேற்றது. இதற்குக் காரணம் வடக்கு புல்வெளியில் இருந்த மக்களுடனான வணிகத் தொடர்பு மற்றும் அங்கிருந்து அகதிகளாக வந்தவர்களை மங்கோலிய பீடபூமியில் ஒரு கருவியாக மேற்கு சியா உபயோகித்தே ஆகும்.[5] 1190 களின் இறுதி மற்றும் 1200 களின் ஆரம்பத்தில் தெமுசின் தனது சக்தியை மங்கோலியாவில் உறுதிப்படுத்தினார். கெரயிடு தலைவர் ஓங் கானின் இறப்பு முதல் 1203 இல் தெமுசினின் மங்கோலியப் பேரரசு வளர்ந்து வந்த வரை கெரயிடு தலைவர் நில்கா செங்கும் தனது ஆதரவாளர்களின் சிறு படையுடன் மேற்கு சியாவிற்கு சென்றார்.[5] ஆனால் அவரது ஆதரவாளர்கள் மேற்கு சியா மக்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்த போது நில்கா செங்கும் மேற்கு சியாவில் இருந்து துரத்தப்பட்டார்.[5] ஆரம்பகால தாக்குதல்கள்தனது எதிரி நில்கா செங்கும் மேற்கு சியாவில் தஞ்சமடைந்ததை காரணம் காட்டி தெமுசின் 1205 இல் எட்சின் பகுதியில் தாக்குதல் நடத்தினார்.[5][6][7] மங்கோலியர்கள் எல்லைப்புற குடியிருப்பு பகுதிகளை கொள்ளையிட்டனர். ஒரு மேற்கு சியா உயர்குடி மங்கோலிய மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்டார்.[8] கன்சோவு (தற்கால ஜங்யே) தாக்குதலின்போது மங்கோலியர்கள் அந்நகரத்தின் தளபதியின் மகனை பிடித்தனர்.[9] அச்சிறுவன் மங்கோலிய படையில் இணைந்தான். மங்கோலிய பெயரையும் வைத்துக் கொண்டான். அவன் பெயர் சகன். அவன் தெமுசினின் பாதுகாவலர்களின் தளபதியானான்.[10] அடுத்த வருட வருடமான 1206 இல் தெமுசின் அதிகாரப்பூர்வமாக செங்கிஸ்கான் என்ற பட்டம் பெற்றார். அனைத்து மங்கோலியர்களின் ஆட்சியாளரானார். இதுவே அதிகாரபூர்வமாக மங்கோலியப் பேரரசின் தொடக்கமாகும். லீ அங்குவான் என்பவர் ஒரு கலகம் ஏற்படுத்தி மேற்கு சியாவின் ஹுவாங்சோங்கைக் கொன்றார். தனக்கு பேரரசர் க்ஷியான்சோங் என்று பெயர் வைத்து ஆட்சி செய்தார். 1207 இல் செங்கிஸ்கான் மேற்கு சியாவின் மீது மற்றொரு தாக்குதல் நடத்தினர். இப்போது ஓர்டோ பகுதி தாக்கப்பட்டது. மஞ்சள் ஆற்றின் கரையில் அமைந்திருந்த முக்கிய பகுதியான உகை கொள்ளையிடப்பட்டது. 1208 இல் செங்கிஸ்கான் பின்வாங்கினார்.[7][11] ஒரு முழு அளவிலான படையெடுப்புக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். மேற்கு சியாவை தாக்குவதன் மூலம் அவருக்கு ஒரு கப்பம் கட்டும் நாடு கிடைக்கும். மேலும் பட்டுப் பாதையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன் மூலம் அவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்.[12] மேலும் மேற்கு சியாவில் இருந்து அதை விட செல்வம் நிறைந்த சின் அரச மரபின் மீது தாக்குதல் நடத்தலாம்.[13] முதல் படையெடுப்பு1209 இல் மேற்கு சியாவை வெல்ல செங்கிஸ் கான் தனது பயணத்தை தொடங்கினார். லீ அங்குவான் சின் அரசமரபிடம் இருந்து உதவி வேண்டினார். ஆனால் புதிய சின் பேரரசர் வன்யன் யோங்ஜி உதவி அனுப்ப மறுத்தார். "எங்களது எதிரிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் போது எங்களுக்கு சாதகமே. இதனால் எங்களுக்கு என்ன ஆபத்து?" என்று கூறினார்.[14] வோலஹோய் நகருக்கு வெளியில் கவோ லியாங்-ஹுயியால் தலைமை தாங்கப்பட்ட ஒரு படையை தோற்கடித்த பின்னர் செங்கிஸ் கான் நகரைக் கைப்பற்றினார். மஞ்சள் ஆற்றின் போக்கில் முன்னேற தொடங்கினார். கியேமன் கோட்டையை அடையும் வரை அவர் தான் சென்ற பாதையில் பல நகரங்களை வென்றார். அக்கோட்டை தான் ஹெலன் மலைகளின் வழியே மேற்கு சியாவின் தலைநகரான இன்சுவானுக்கு செல்லும் ஒரே ஒரு வழியை பாதுகாத்தது.[5][15][16] அக்கோட்டையில் 70,000 வீரர்கள் வரை கொண்ட ராணுவமும் 50,000 துணை படையினரும் இருந்தனர். இதன் காரணமாக கோட்டையைப் பிடிப்பது மிகக் கடினமாக இருந்தது. இரண்டு மாதம் போர் வெற்றி தோல்வியின்றி நடந்தது. பிறகு மங்கோலியர்கள் தோற்று ஓடுவதைப் போல ஓடினர். மேற்கு சியா ராணுவம் வெயி-மிங் லிங்-குங் தலைமையில் வெளிப்பகுதிக்கு மங்கோலியர்களை துரத்திக்கொண்டு வந்தது. அங்கு எளிதில் தோற்கடிக்கப்பட்டது.[15][16] தன் பாதையில் எந்த தடைகளும் இல்லாமல் போன பிறகு செங்கிஸ் கான் தலைநகரை நோக்கி முன்னேறினார். நல்ல அரண்களைக் கொண்டிருந்த இன்சுவான் சுமார் 150,000 வீரர்களை கொண்டிருந்தது. இது மங்கோலிய ராணுவத்தை போல் கிட்டத்தட்ட இரு மடங்காகும்.[17] மங்கோலியர்கள் அப்போதுதான் முதன் முதலாக முற்றுகை போர் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களிடம் நகரை வெல்லுவதற்கு தேவையான கருவிகளோ அல்லது அனுபவமோ இல்லை. அந்த நகரத்திற்கு மங்கோலியர்கள் மே மாதத்தில் வந்தனர். ஆனால் அக்டோபர் வரை அவர்களால் நகருக்குள் செல்ல முடியவில்லை.[5] ஆறு மற்றும் அதன் பாசன கால்வாய்களை திசை திருப்பி நீரை நகருக்குள் செலுத்தி வெள்ளம் ஏற்படுத்த செங்கிஸ் கான் முயற்சித்தார். மங்கோலியர்கள் ஜனவரி 1210 இல் இன்சுவான் மதில் சுவர்களை தாண்டி செல்ல இருந்தனர். ஆனால் ஆற்றின் பாதையை மாற்றிய தடுப்பரண் உடைந்தது. இதன் காரணமாக மங்கோலிய கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மங்கோலியர்கள் உயர் நில பகுதிகளுக்கு சென்றனர்.[5] இந்தப் பின்னடைவு ஏற்பட்ட போதிலும் மங்கோலியர்கள் இன்னும் மேற்கு சிவாவிற்கு ஒரு ஆபத்தாகவே விளங்கினார். மேற்கு சியாவின் பயிர்கள் அழிக்கப்பட்டு மற்றும் சின் அரசிடமிருந்து எந்த உதவியும் வராத நேரத்தில் லீ அங்குவான் மங்கோலிய ஆட்சிக்கு அடிபணிவதாக ஒப்புக்கொண்டார். தனது விசுவாசத்தை காட்டுவதற்காக தன் மகள் சகாவை செங்கிஸ் கானுக்கு மணமுடித்துக் கொடுத்தார். மேலும் ஒட்டகங்கள், வல்லூறுகள் மற்றும் துணிமணிகளை கொடுத்தார்.[18] மங்கோலியர்களுக்கு கப்பம் கட்டும் நாடாக மேற்கு சியா1210 இல் மேற்கு சியா சின் அரசமரபை தாக்கியது. இதற்கு காரணம் மங்கோலியர்களுக்கு எதிரான போரில் மேற்கு சியாவை சின் அரசமரபு ஆதரிக்காததே ஆகும்.[19] அடுத்த வருடம் மங்கோலியர்கள் மேற்கு சியாவுடன் இணைந்து 23 ஆண்டுகாலம் நடக்கப்போகும் சின் அரச மரபுக்கு எதிரான போரை தொடங்கினர். அதே வருடம் லீ அங்குவான் தனது பதவியிலிருந்து விலகினார். பேரரசர் ஷென்ஜோங் ஆட்சியை கைப்பற்றிய பிறகு லீ அங்குவான் இறந்தார். மேற்கு சியா சின் அரச மரபுக்கு எதிரான போரில் மங்கோலியர்களுக்கு ஆதரவளித்த போதும் 1217 இல் மத்திய ஆசிய படையெடுப்புகளுக்கு செங்கிஸ் கான் மேற்கு சியாவின் படைகளை கேட்டபோது அது படைகளை அனுப்ப மறுத்தது. மேற்கு சியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக மங்கோலியர்கள் அங்கிருந்து பின் வாங்கும் முன்னர் அதனை முற்றுகையிட்டனர்.[20][21] 1219 இல் செங்கிஸ் கான் மத்திய ஆசியாவில் இருந்த குவாரசமியப் பேரரசுக்கு எதிராக படை எடுத்தார். மேற்கு சியாவின் ராணுவ உதவியை கேட்டார். எனினும் மேற்கு சியாவின் பேரரசர் மற்றும் அவரது இராணுவ தளபதி அசா ஆகியோர் படையெடுப்புக்கு வர மறுத்தனர். "குவாரசமியாவை தாக்க செங்கிஸ்கானிடம் சிறு படையே இருப்பின் அவர் தன்னை பெரிய சக்தியாக கூறிக்கொள்ள தகுதியற்றவர்" என்று கூறினர்.[12][22] கோபமடைந்த செங்கிஸ்கான் பழிவாங்க சபதம் எடுத்துக் கொண்டு குவாரசாமியாவை தாக்க புறப்பட்டார். அதே நேரத்தில் மேற்கு சியா சின் மற்றும் சாங் அரசமரபுகளுடன் மங்கோலியர்களுக்கு எதிராக கூட்டணி ஏற்படுத்த முயற்சித்து.[23] இரண்டாவது படையெடுப்பு1221 இல் குவாரசமியாவை தோற்கடித்த பிறகு செங்கிஸ்கான் மேற்கு சியாவின் நம்பிக்கை துரோகத்திற்கு பதிலடி கொடுக்க தனது ராணுவத்தை தயார் செய்தார். அதே நேரத்தில் பேரரசர் ஷென்ஜோங் 1223 இல் பதவியிலிருந்து விலகினார். அவரது மகன் க்ஷியான்சோங் பதவிக்கு வந்தார். 1225 இல் செங்கிஸ்கான் சுமார் 180,000 வீரர்களைக் கொண்ட படையுடன் தாக்கினர்.[24] காரா கோடோவை வென்ற பிறகு மங்கோலியர்கள் நிதானமாக தெற்கு நோக்கி முன்னேறினர். மேற்கு சியாவின் துருப்புகளின் தளபதியான அசாவால் மங்கோலியர்களை போரில் சந்திக்க முடியவில்லை. ஏனெனில் தலைநகரில் இருந்து களைப்படைய வைக்கும் 500 கிலோ மீட்டர் பாலைவன பயணத்தை மேற்கு நோக்கி அவர்கள் செய்ய வேண்டி இருந்தது.[9] யுத்தத்தில் அவர்களை சந்திக்க எந்த ராணுவமும் இல்லாத அந்த நேரத்தில் மங்கோலியர்கள் தேர்ந்தெடுத்து தங்களது இலக்குகளை தாக்கினர். ஒவ்வொரு நகரமும் கைப்பற்றப்படும் போது கைதிகள், கட்சி மாறியவர்கள், ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அடுத்த நகரத்தை தாக்கினர்.[9] மேற்கு சியாவின் கடும் எதிர்ப்பால் கோபமடைந்த செங்கிஸ்கான் கிராமப்புறங்களை அழித்தார். நகரங்கள் மற்றும் கோட்டைகளை அழிக்குமாறு தனது தளபதிகளுக்கு ஆணையிட்டார்.[12][23][25] காரா கோடோவை வென்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு மங்கோலியர்கள் கிலியன் மலைகள் எட்சின் ஆற்றை கிழக்கு நோக்கி திருப்புகின்ற இடத்தை அடைந்தனர். அப்பகுதி காரா கோடோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தெற்கில் அமைந்துள்ளது.[9] அந்த இடத்தில் செங்கிஸ்கான் தனது ராணுவத்தை பிரித்தார். மேற்கு பகுதி நகரங்களை கவனித்துக்கொள்ள தளபதி சுபுதையை அனுப்பினார். அதேநேரத்தில் முக்கிய இராணுவமானது கிழக்கு நோக்கி முன்னேறி மேற்கு சியா பேரரசின் இதய பகுதியை நோக்கி சென்றது.[9] செங்கிஸ்கான் சுசோவு பகுதியை முற்றுகையிட்டார். அது ஐந்து வாரங்களுக்குப் பிறகு வீழ்ந்தது.[26] பிறகு கன்சோவு பகுதியை நோக்கி முன்னேறினார். இதுதான் அவரது தளபதி சகான் பிறந்து வளர்ந்த நகரமாகும்.[27] சகானின் தந்தை தான் இன்னும் அந்த நகரத்தின் படைக்குத் தளபதியாக இருந்தார். எனவே சகான் அவருடன் பேச்சு வார்த்தைக்கு முயற்சித்தார். ஆனால் அவரது தந்தைக்கு அடுத்த இடத்தில் இருந்த தளபதி கலகம் ஏற்படுத்தி சகானின் தந்தையை கொன்றான். சரணடைய மறுத்தான்.[10] அந்த நகரத்தை வெல்ல ஐந்து மாதங்கள் ஆனது. கோபம் கொண்ட செங்கிஸ்கான் பழிவாங்க நினைத்தார். ஆனால் சகான் அவரை சமாதானப்படுத்தினார். எனவே சகானின் தந்தையை கொன்ற 35 சதிகாரர்கள் மட்டும் கொல்லப்பட்டனர்.[10][28] மேற்கு சியா பேரரசின் இரண்டாவது பெரிய நகரமான உவேவை தனது துருப்புக்கள் நெருங்கியபோது 1226 ஆகஸ்டில் செங்கிஸ்கான் வெப்பத்தில் இருந்து விலகிச் செல்ல கிலியன் மலைகளுக்கு சென்றார்.[10] தங்களது தலைநகரிலிருந்து உதவி வராத காரணத்தால் உவே நகரம் சரணடைய முடிவு செய்தது. இதன் காரணமாக அழிவிலிருந்து தப்பியது.[10] இந்த நேரத்தில் பேரரசர் க்ஷியான்சோங் இறந்தார். இதன் காரணமாக மொசு பதவிக்கு வந்தார். அந்நேரத்தில் மங்கோலியர்கள் மேற்கு சியாவின் தலைநகரை நெருங்கிக் கொண்டிருந்தனர். நாடு வீழ்ந்து கொண்டிருந்தது.[29] இலையுதிர் காலத்தில் செங்கிஸ்கான் தனது துருப்புகளுடன் இணைந்தார். லியாங்ஜோவு பகுதியை கைப்பற்றினார். ஹெலன் ஷான் பாலைவனத்தை கடந்தார். இன்சுவானில் இருந்து வெறும் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லிங்வுவை நவம்பரில் முற்றுகையிட்டார்.[28][29] அங்கு மஞ்சள் ஆற்று யுத்தத்தில் மேற்கு சியா 300,000க்கும் மேற்பட்ட படைவீரர்களைக் கொண்டு எதிர் தாக்குதல் நடத்தியது. உறைந்திருந்த ஆறு மற்றும் கால்வாய்களின் கரையில் மங்கோலிய வீரர்களுடன் சண்டையிட்டது.[29][30] மங்கோலியர்கள் மேற்கு சியா துருப்புகளை தோற்கடித்தனர். யுத்தத்திற்குப் பிறகு 3 லட்சம் மேற்கு சியா வீரர்களின் உடல்கள் எண்ணப்பட்டதாக கூறப்பட்டது.[30] 1227 இல் இன்சுவானை அடைந்த செங்கிஸ்கான் அதை முற்றுகையிட்டார். அதேநேரத்தில் சின் அரசிடமிருந்து உதவிப் படைகள் வர வாய்ப்பு இருந்த காரணத்தால் சின் அரசையும் தாக்க முயற்சிகள் மேற்கொண்டார். சின் அரசமரபை முழுவதும் வெல்வதற்கு அவர் மேற்கொண்ட ஒரு முயற்சியாகவும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். செங்கிஸ்கான் தனது மகன் ஒக்தாயி மற்றும் தளபதி சகான் தலைமையில் தெற்கு எல்லைக்கு படைகளை அனுப்பினார். வெயி ஆறு மற்றும் தெற்கு ஷான்க்ஷி அருகில் இருக்கும் பகுதிகளை அவர்கள் தாக்கினர். மேலும் சின் மலைகளை தாண்டி சின் தலைநகரமான கைஃபேங்கை தாக்க சில துருப்புக்களையும் அனுப்பினார்.[26] செங்கிஸ்கான் நேரடியாகச் சுபுதையுடன் இணைந்து தென்மேற்கில் தற்போதைய நிங்க்ஷியா மற்றும் கன்சு பகுதிகளில் 150 கிலோ மீட்டர் அகல பகுதி வழியே தாக்குதல் நடத்தி சென்றார்.[31] சுபுதை லியுபான் மலைகளின் வடக்கு பகுதிகளை கடந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒவ்வொரு பட்டணமாக வென்றார். தாவோ ஆற்று பள்ளத்தாக்கு மற்றும் லன்சோவு பகுதிகளை வென்றார்.[26][32] அதே நேரத்தில் செங்கிஸ்கான் கிங் ஷுயி ஆற்றின் போக்கில் தெற்குப் பகுதிக்கு சென்றார்.[32] மேற்கு சியாவில் இன்சுவான் ஆறு மாதங்களுக்கு முற்றுகையிலேயே இருந்தது. அதே நேரத்தில் லோங்டே பகுதியில் செங்கிஸ்கான் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். எனவே சகானை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்.[33] பேரரசர் அடிபணிவதாக ஒத்துக் கொண்டதாகவும் ஆனால் தகுந்த பரிசுகளை ஏற்பாடு செய்ய ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு இருப்பதாகவும் சகான் தெரிவித்தார்.[26][33] செங்கிஸ்கான் ஒத்துக்கொண்டார் ஆனால் அதே நேரத்தில் ரகசியமாக பேரரசரை கொல்ல திட்டமிட்டார்.[33] அமைதிப் பேச்சு வார்த்தைகளின் போது செங்கிஸ்கான் லியுபான் மலைகளின் அருகில் இருந்த குயுவான் பகுதியில் தனது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அந்நேரத்தில் சின் அரசிடம் இருந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தார். சின் மற்றும் சாங் அரசுகளின் எல்லை அருகே சின் அரசை தாக்க தயாரானார்.[34][35] ஆனால் ஆகஸ்ட் 1227 இல் செங்கிஸ்கான் இறந்தார். வரலாற்றுரீதியாக அவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில் ராணுவ நடவடிக்கைகளில் எதுவும் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக அவரது மரணம் ரகசியமாக வைக்கப்பட்டது.[36][37] செப்டம்பர் 1227 இல் பேரரசர் மொசு மங்கோலியர்களிடம் சரணடைந்தார். பின் கொல்லப்பட்டார்.[35][38] பிறகு மங்கோலியர்கள் இரக்கமின்றி இன்சுவானை சூறையாடினர். நகர மக்களைக் கொன்றனர். நகரத்திற்கு மேற்கு பகுதியில் இருந்த ஏகாதிபத்திய கல்லறைகளை சூறையாடினர். மேற்கு சியா அரசை முழுவதுமாக அழித்தனர்.[23][35][39][40] செங்கிஸ்கானின் இறப்புஆகஸ்ட் 1227 இல் இன்சுவான் வீழ்ந்தபோது செங்கிஸ்கான் இறந்தார். அவரது இறப்பிற்கான சரியான காரணம் இன்றும் மர்மமாகவே உள்ளது. மேற்கு சியாவிற்கு எதிரான போரின் போது குதிரையிலிருந்து கீழே விழுந்தது, உடல்நலக்குறைவு அல்லது, வேட்டையாடும்போது அல்லது போரின் போது ஏற்பட்ட காயம் என பல்வேறாக இவரது இறப்பிற்கான காரணங்கள் கூறப்படுகிறது.[24][36][40][41][42] கலிசிய-வோலினிய கிரானிக்கல் ஆனது இவர் மேற்கு சியாவிற்கு எதிரான போரில் இறந்ததாகவும், செங்கிஸ்கான் தனது இறுதி யுத்தத்தில் தனது காலில் பெற்ற அம்பு காயத்தால் தொற்று ஏற்பட்டு இறந்ததாக மார்க்கோ போலோவின் நூலும் கூறுகின்றன.[36] பிற்கால மங்கோலிய நூல்கள் போரில் பரிசாக பெற்ற ஒரு மேற்கு சியா இளவரசியை செங்கிஸ்கான் இறப்பிற்கு காரணமாகக் கூறுகின்றன. 17ஆம் நூற்றாண்டின் ஒரு ஆரம்பகால நூலானது அந்த இளவரசி ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்து இவரை குத்தியதாக கூறுகின்றது. ஆனால் சில மங்கோலிய எழுத்தாளர்கள் இக்கதையை நம்ப மறுக்கின்றனர். இது எதிரிகளான ஒயிராட்களின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.[43] போருக்குப் பிறகு![]() இரண்டாவது படையெடுப்பின் போது மேற்கு சியாவின் அழிவானது கிட்டத்தட்ட முழுமையாக நடத்தப்பட்டது. யோவான் மேன் எனப்படும் எழுத்தாளரின் கூற்றுப்படி மேற்கு சியா எனும் நாடு இருந்தது வரலாற்று நிபுணர்கள் தவிர பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இதற்கு காரணம் அதை முழுமையாக அழிக்க செங்கிஸ்கான் உத்தரவிட்டதே ஆகும். மேலும் அவர் "இதுதான் முதன் முதலில் பதிவிடப்பட்ட இனப்படுகொலை முயற்சியின் உதாரணம்" என்கிறார்."[44] எனினும் மேற்கு சியாவின் அதிகார இனம் மேற்கு சிச்சுவான், வடக்கு திபெத் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து. இவர்கள் வடகிழக்கு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம்பெயர்ந்த இடங்களில் சில நேரங்களில் இவர்கள் உள்ளூர் ஆட்சியாளர்களாக மாறினர்.[45] திபெத்தின் யர்லுங் ஆற்றின் மேல் பகுதிகளில் ஒரு சிறு மேற்கு சியா மாநிலம் நிறுவப்பட்டது. அதே நேரத்தில் மற்ற மேற்கு சியா மக்கள் தற்போதைய ஹெனான் மற்றும் ஹீபே மாகாணங்களுக்கு குடிபெயர்ந்தனர்.[39] சீனாவில் மிங் அரசமரபின் நடுக்கால ஆட்சி வரை மேற்கு சியாவின் எஞ்சிய மக்கள் காணப்பட்டனர்.[46] மங்கோலியப் பேரரசானது செங்கிஸ்கான் இறந்தபோதிலும் கடைசியில் மேற்கு சியாவை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றது. பிறகு செங்கிஸ்கானின் வழிவந்தவர்களின் தலைமையில் எஞ்சிய சீனாவை வெல்ல முயற்சித்தது. சின் அரசாங்கமானது 1211 இல் ஆரம்பித்து நடந்துவந்த மங்கோலிய தாக்குதல்களால் நிலப்பகுதி மற்றும் துருப்புகளை இழந்தது. பிறகு 1234 இல் தோற்கடிக்கப்பட்டது. தென்மேற்கு சீனாவின் தலி ராச்சியமானது 1253 இல் தோற்கடிக்கப்பட்டது. தெற்கு சீனாவின் சாங் அரசாங்கமானது 1235 இல் ஆரம்பித்து நான்கு தசாப்தங்களுக்கு நடந்த போர்களுக்கு பிறகு 1279 இல் சரணடைந்தது. உசாத்துணைமேற்கோள்கள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia