அசோக் குமார் சென்
அசோக் குமார் சென் (Ashoke Kumar Sen)(10 அக்டோபர் 1913 - 21 செப்டம்பர் 1996) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் அமைச்சராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் அதிக முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது மட்டுமல்லாமல், ஏழுக்கும் மேற்பட்ட பிரதமர்களிடம் அமைச்சராகவும் இருந்தார். பல தசாப்தங்களாக, இவர் தவிர்க்க முடியாத மத்திய சட்ட அமைச்சராக இருந்தார். சுயசரிதைஅசோக் குமார் சென், 1913இல் ஒரு பிரபலமான பைத்யா பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மாவட்ட ஆட்சியராக இருந்தார். இவரும் அண்ணன் சுகுமார் சென்னும் ஒடிசாவின் சம்பல்பூர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களாக இருந்தனர். சுகுமார் சென் இந்திய அரசு ஊழியரும், இந்தியாவின் முதல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்தியா, சூடான் , நேபாளத்தின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக இருந்துள்ளார்.[1] சுகுமார் சென், இங்கிலாந்தின் இலண்டன் பொருளியல் பள்ளியில் படிக்கும்போது இவரது கல்விக்கு நிதியளித்தார். இலண்டனிலிருந்து திரும்பியதும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நகரக் கல்லூரியில் சட்டம் கற்பிக்கத் தொடங்கினார்.[2] பின்னர் தனது 26வது வயதில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சட்டப் பய்ற்சியினைத் தொடங்கினார். இவர் ஏற்கனவே வணிகச் சட்டம் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அதற்கு இந்தியாவின் எதிர்கால தலைமை நீதிபதியான சுதி ரஞ்சன் தாஸ் அணிந்துரை வழங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 1943 இல், அசோக் குமார் சென் தனது மூத்த வழக்கறிஞர் சுதி ரஞ்சன் தாஸின் ஒரே மகள் அஞ்சனா தாஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.[3] இவர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பல முறை இருந்தார்.[2] நாடாளுமன்ற வாழ்க்கைஇவரது சட்ட அறிவின் காரணமாக, மேற்கு வங்க முதலமைச்சர் பிதான் சந்திர ராய், இவரை பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு பரிந்துரை செய்தார். தனது அமைச்சரவையில் இவரைச் சேர்த்துக் கொள்ள நேரு விரும்பினார். எனவே இவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடச் சொன்னார். 1957ஆம் ஆண்டில், கொல்கத்தா வடமேற்கு மக்களவைத் தொகுதி பொதுவுடைமைக் கட்சியின் கோட்டையாக இருந்தது. தேர்தலில் வெற்றிபெற சென் 1956இல் முயற்சித்தார். ஆனால் ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், அடுத்த ஆண்டில், இவர் 100,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். இவர் 1957 முதல் 1977 வரை அந்த இடத்தை தக்கவைத்துக்கொண்டார். மேலும் 1980 முதல் 1989 வரை மீண்டும் கல்கத்தா வடமேற்கு தொகுதியை பிரதிநிதுத்துவப்படுத்தினார். 1989இல் தேவி பிரசாத் பால் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[4] சென், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது , எட்டாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.[5] பின்னர் இவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஏப்ரல் 1996 வரை மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அமைச்சர் பணிஅசோக் சென் நேருவின் கீழ் மத்திய சட்ட அமைச்சராக இருந்தார். மேலும், இவர் தகவல் தொடர்பு, எஃகு, சுரங்கங்கள் போன்ற பிற துறைகளுக்கும் பொறுப்பு வகித்தார்.[5] இவர் கடைசியாக ராஜீவ் காந்தியின் கீழ் சட்ட அமைச்சராக இருந்தார். 1989இல் தனது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் மாநிலத் தேர்தலில் இவரது கட்சி தோல்வியடைந்த பின்னர் பதவி விலகினார்.[6] பிற நடவடிக்கைகள்தனது வாழ்நாளில், சென், பசிம் பங்கா சேவா சமிதி என்ற ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இவரது வாழ்நாளில், பல அரிய தொகுப்புகளுடன் கூடிய ஒரு பெரிய சட்ட நூலகத்தையும் உருவாக்கினார். இந்த நூலகம் உலகின் மிகப்பெரிய தனியார் சட்ட நூலகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நினைவுச்சின்னங்கள்இவர் பெயரில் இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு கட்டிடம் உள்ளது. இவரது உருவப்படமும் அங்கு தொங்குகிறது. சென் மீது பல ஆவணப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. குடும்பம்இவரது அண்ணன் சுகுமார் சென் தவிர, இவருக்கு மற்றொரு சகோதரர் அமியா குமார் சென், இரவீந்திரநாத் தாகூரின் கூட்டாளியாக இருந்தார். தாகூர் குடும்ப செய்தித்தாள் பற்றிய புத்தகத்தை எழுதிய அமியா, முன்பு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், கொல்கத்தா நகரக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார். இவர், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் என்பவரின் மாமாவும் ஆவார். மேற்கோள்கள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia