பெரிய மலை(வரை)களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில்பொ.ஊ.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.[1]
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும்[2]மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.[3]