ஊர்த்துவ தாண்டவம் அல்லது ஊர்த்தவ தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். காளி தேவிக்கும் - சிவபெருமானுக்கும் நடந்த நாட்டியப் போட்டியின் போது சிவபெருமான் இறுதியாக தனது வலது காலை தலைக்கு மேல் உயர்த்தி ஆடினார். ஆனால் காளியால் சிவபெருமானைப் போன்று வலது காலை தலைக்கு உயரே தூக்கி ஆட இயலாத காரணத்தினால் நாட்டியப் போட்டியில் தோல்வி அடைகிறார்.[1]
சிவனும், சக்தியும் சமமென சக்தி உணரததால், சிவனின் சாபப்படி, உக்கிரமான காளியாக மாறினாள். தில்லையில் சிவனை அடைய தவம் செய்தாள். ஆனால் சிவன் காட்சியளிக்காததால் மேலும் உக்கிரமாக மாறினாள். அதனால் தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். தேவர்கள், முனிவர்களின் வைத்த கோரிக்கையையும் நிராகரித்தாள். ஆடல்கலையின் வல்லவனான சிவனை தன்னுடன் போட்டிக்கு அழைத்தாள்.
சிவனுக்கும், காளிக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. கடுமையான போட்டியில் இருவரும் சமநிலையில் இருந்தார்கள். அப்போது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார் சிவன். முனிவர்களும், தேவர்களும் இருந்த சபையில் காலை உயர்த்த விரும்பாத காளி, போட்டியில் பின்தங்கினாள். சிவபெருமான் போட்டியில் வென்றார். காலை உயர்த்தி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தாண்டவமாடியமையினால் சிவபெருமான் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி என்றும், ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.