கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்கம்பாரம்பரிய கிரேக்கத்தில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் காலம் பொதுவாக கிமு 500 இல் தொடங்கி கிமு 404 இல் முடிவடைந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இது விவாதத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. மற்ற கிரேக்க நகர அரசுகளை விட பண்டைய ஏதென்சு அதிக கதைகள், நாடகங்கள் மற்றும் பிற எழுத்ததாக்கப் படைப்புகளை விட்டுச் சென்றதால், இந்த நூற்றாண்டானது பொதுவாக ஏதெனியன் பார்வையில் இருந்து ஆய்வு செய்யப்படுகிறது. நமது முக்கிய ஆதாரமான ஏதென்சிலிருந்து ஒருவர் பார்த்தால், இந்த நூற்றாண்டு கிமு 510 இல் ஏதெனியன் சர்வாதிகாரியின் வீழ்ச்சி மற்றும் கிளீசுத்தனீசுவின் சீர்திருத்தங்களுடன் தொடங்குகிறது என்று கருதலாம். எவ்வாறாயினும், முழு கிரேக்க உலகத்தையும் ஒருவர் பார்த்தால், கிமு 500 இல் ஐயோனியன் கிளர்ச்சியை அதன் தொடக்கமாக வைக்கலாம். இது கிமு 492 இன் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்புக்குத் தூண்டுகோலானது. பாரசீகர்கள் ("மேடிஸ்" என்று அழைக்கப்படுபவர்கள்) இறுதியாக கிமு 490 இல் தோற்கடிக்கப்பட்டனர். கிமு 480-479 இல் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பும் தோல்வியடைந்தது. டெலியன் கூட்டணி பின்னர் ஏதெனியன் மேலாதிக்கமாக உருவாகி ஏதெனியப் பேரரசாக உருவெடுத்தது. ஏதென்சின் அத்துமீறல்கள் நட்பு நகர அரசுகளில் பல கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. அவை அனைத்தும் ஏதென்சின் படை பலத்தால் அடக்கப்பட்டன. ஆனால் ஏதெனியன் ஆதிக்கம் இறுதியாக எசுபார்த்தாவை ஏதென்சுக்கு எதிராக எழவைத்தது. அது கிமு 431 இல் பெலோபொன்னேசியப் போருக்குக் காரணமாயிற்று. இரு தரப்பினரும் சோர்வடைந்த பிறகு, கொஞ்சகாலம் அமைதி ஏற்பட்டது. பின்னர் எசுபார்த்தாவின் நன்மைக்காக போர் மீண்டும் தொடங்கியது. கிமு 404 இல் இறுதியாக ஏதென்சு தோற்கடிக்கப்பட்டது. மேலும் சில உள் ஏதெனியன் கிளர்ச்சிகள் கிரேக்கத்தில் 5 ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. கிளீசுத்தனீசுகிமு 510 இல், பிசிசுட்ரேடசின் மகனான ஏதெனிய கொடுங்கோலன் இப்பியாசை தூக்கி எறிவதற்கு எசுபார்த்தன் துருப்புக்கள் உதவின.[1] எசுபார்த்தாவின் மன்னரான முதலாம் கிளிமினெசால், இசகோரஸ் தலைமையிலான எசுபார்டன் சார்பு சிலவர் ஆட்சியை ஏற்படுத்தினார்.[2] ஆனால் அவர்களது போட்டியாளரான கிளீசுத்தனீசு, நடுத்தர வர்க்கத்தின் ஆதரவுடனும், சனநாயகவாதிகளின் உதவியுடனும் ஆட்சியைப் பிடித்தார். கி.மு. 508 மற்றும் 506 ஆம் ஆண்டுகளில் இவ்விசயத்தில் கிளீமினெஸ் தலையிட்டார். ஆனால் அப்போது ஏதெனியர்களின் ஆதரவைப் பெற்ற கிளீஸ்தீனசைத் தடுக்க முடியவில்லை. கிளிஸ்தனீஸ் சீர்திருத்தங்கள் மூலம், ஏதென்சின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் (சுதந்திர குடிமக்களுக்கு மட்டும்) வழங்கினார். மேலும் ஆஸ்ட்ராசிசம் என்னும் நாடுகடத்தலை ஒரு தண்டனையாக நிறுவினார்.[3] சனநாயகத்தில் குடிமக்கள் அனைவரும் சரிசமம் என்பதை தெமெ நிர்வாகப் பிரிவின் வழியாக கொண்டுவரப்பட்டது. குடியுரிமை பெற ஒரு குடிமகன் தன்னை தெமெ பிரிவின் பட்டியலில் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும். தெமெக்களில் வசிக்கும் 10,000 குடிமக்கள் தங்கள் அதிகாரத்தை பேரவையில் (கிரேக்க மொழியில் எக்லேசியா ) பயன்படுத்தினர். அதில் குடிகளிலிருந்து குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 குடிமக்கள் குழுவினர் தலைமைவகித்தனர். நகரத்தின் நிர்வாகம் புவியியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்டது. கடற்கரை, நகரம், வேளாண்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய குடிகளாக வகைப்படுத்தப்பட்ட கலப்பு அரசியல் குழுக்களைக் கொண்டிருப்பது இதன் நோக்கம் ஆகும். நகரத்தின் பிரதேசம் பின்வருமாறு 30 திரிட்டிகளாக பிரிக்கப்பட்டது:
இந்த சீர்திருத்தங்கள் இறுதியில் கிமு 460 மற்றும் 450 களில் பரந்த அளவிலான சனநாயகம் தோன்ற வழிகோலியது. பாரசீகப் போர்கள்ஐயோனியாவில் ( துருக்கியின் நவீன ஏஜியன் கடற்கரை பகுதி) மிலீட்டஸ் மற்றும் ஆலிகார்னாசசு போன்ற பெரிய பகுதிகளை உள்ளடக்கிய கிரேக்க நகரங்கள், தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் கிமு 6 ஆம் நூற்றாண்டின் நடுவில் பாரசீகப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தன. கிமு 499 இல் ஐயோனியன் கிளர்ச்சியில் பாரசீகர்களுக்கு எதிராக கிரேக்கர்கள் கிளர்ந்தெழுந்தனர். மேலும் ஏதென்சும் வேறு சில கிரேக்க நகர அரசுகளும் அவர்களுக்கு உதவியாகச் சென்றன. இருப்பினும் கிமு 494 இல் லேட் சமரில் அவர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு சின்ன ஆசியாவில் உள்ள கிரேக்க நகரங்கள் பாரசீக கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் சென்றன. ![]() கிமு 492 இல், பாரசீக தளபதிகள் மார்தோனியசு மற்றும் தேடிஸ் ஆகியோர் ஏஜியன் தீவுகளின் மீது கடற்படைத் தாக்குதலைத் தொடங்கினர். இதனால் அவர்கள் கீழ்ப்படிந்தனர். பின்னர் ஏதென்சைக் கைப்பற்றுவதற்கு கிமு 490 இல் மராத்தானில் பாரசீகப் படைகள் இறங்குவதில் தோல்வியுற்றனர். கிமு 490 இல், பாரசீக பேரரசர் டேரியஸ், ஐயோனிய நகரங்களை அடக்கி, கிரேக்கர்களை தண்டிக்க ஒரு கடற்படையை அனுப்பினார். நூறாயிரக்கணக்கான பாரசீகர்கள் அட்டிகாவில் தரையிறங்கி, ஏதென்சைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் மராத்தான் சமரில் 9000 ஏதெனியன் ஹாப்லைட்டுகள் மற்றும் ஏதெனியன் தளபதி மில்டியாடீசு தலைமையிலான 1000 பிளாட்டீயர்களைக் கொண்ட கிரேக்க இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர். அங்கிருந்து பின்வாங்கிய பாரசீக கடற்படை ஏதென்சை கடல்வழியாக தாக்கச் சென்றது. ஆனால் அது ஏதெனியப் படைகளின் காவலில் இருந்ததைக் கண்டு, தாக்குதல் முயற்சியை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றது. கிமு 483 இல் சமாதானத்தின் அடுத்த காலகட்டத்தில், லாரியனில் (ஏதென்சுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய மலைத்தொடர்) வெள்ளித் தாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வெட்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாலத்துகள் வெள்ளியானது, ஏஜினாவின் கடற்கொள்ளையை எதிர்த்துப் எதிர்த்துப் போராட 200 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. கிமு 480 இல், டேரியசின் வாரிசான முதலாம் செர்கஸ், தார்தனெல்சு நீரிணையின் மீது மீது 1200 கப்பல்களைக் கொண்டு அமைக்கபட்ட இரட்டைப் மிதவைப்பாலத்தின் வழியாக 300,000 வீரர்கள் கொண்ட படைகளை அனுப்பினார். இந்த இராணுவம் தெஸ்சாலி மற்றும் போட்டியாவில் இறங்குவதற்கு முன் திரேசைக் கைப்பற்றியது, அதே நேரத்தில் பாரசீக கடற்படை கடற்கரையை கடந்து தரைப்படைகளுக்கு தேவையானதை செய்தது. இதற்கிடையில் கிரேக்க கடற்படை, ஆர்ட்டிமீசியன் முனையில் பாரசீகர்களைத் தடுக்கப் பாய்ந்தது. தெர்மோபைலேச் சமரில் எசுபார்த்தன் மன்னர் லியோனிடாசுவால் நடத்தப்பட்ட சமரால் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, செர்க்செஸ் அட்டிகாவிற்கு முன்னேறினார், அங்கு அவர் ஏதென்சைக் கைப்பற்றி எரித்தார். ஆனால் அதற்கு முன்னதாக ஏதெனியர்கள் கடல் வழியாக நகரத்தை காலி செய்து சென்றுவிட்டிருந்தனர். அதன்பிறகு தெமிஸ்ட்டோகிளீசின் தலைமையின் கீழ் அவர்கள் சலாமிஸ் சமரில் பாரசீக கடற்படையை தோற்கடித்தனர். கிமு 479 இல், கிரேக்கர்கள், எசுபார்த்தன் தலைவரான பாசேனியசின் தலைமையின் கீழ், பிளாட்டியா சமரில் பாரசீக இராணுவத்தை தோற்கடித்தனர். ஏதெனியன் கடற்படை பின்னர் பாரசீகர்களை ஏஜியன் கடலில் இருந்து துரத்தியது, கடைசியில் மைக்கேல் சமரில் அவர்களின் கடற்படையை தீர்க்கமாக தோற்கடித்தது. மேலும் கிமு 478 இல் ஏதெனியன் கடற்படை பைசாந்தியத்தைக் கைப்பற்றியது. அதன்பிறகு ஏதென்சு அனைத்து தீவு அரசுகளையும், சில முக்கிய நாடுகளையும் தன் கூட்டணியில் சேர்த்தது, இது டெலியன் கூட்டணி என்று அழைக்கப்பட்டது. கூட்டணியின் கருவூலம் புனிதமான டெலோஸ் தீவில் வைக்கப்பட்டது. எசுபார்த்தன்கள், பாரசீகத்துக்கு எதிரான கிரேக்கப் போரில் கலந்து கொண்டிருந்தாலும், மேற்கொண்டு எதிலும் ஈடுபடாமல் விலகி இருந்தனர். இதனால் ஏதென்சானது தன் பிராந்தியத்தில் சவாலற்ற கடற்படை மற்றும் வணிக சக்தியாக மாறியது. டெலியன் கூட்டணி மற்றும் ஏதெனியன் ஆதிக்கம்![]() கிரேக்கத்தின் மீதான பாரசீக படையெடுப்பின் முடிவானது, கிரேக்க விவகாரங்களில் ஏதெனியன் ஆதிக்கம் ஒரு நூற்றாண்டு நிலவ வழிவகுத்தது. ஏதென்சு கடற்பரப்பில் சவாலற்றதும், முன்னணி வணிக ஆற்றலாகவும் இருந்தது, இருப்பினும் கொரிந்து ஒரு தீவிர போட்டியாளராக இருந்தது. இந்தக் காலக்கடத்திய ஏதென்சில் முன்னணி அரசியல்வாதியாக பெரிக்கிளீசு இருந்தார். அவர் டெலியன் கூட்டணி உறுப்பு நாடுகள் செலுத்திய திரைப்பணத்தைப் பயன்படுத்தி பார்த்தினன் மற்றும் பாரம்பரிய ஏதென்சின் பிற பெரிய நினைவுச்சின்னங்களைக் கட்டினார். கிமு 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கூட்டணி ஒரு ஏதெனியன் பேரரசாக மாறியது. கிமு 454 இல் கூட்டணியின் கருவூலத்தை டெலோசிலிருந்து பார்த்தீனானுக்கு மாற்றியதன் மூலம் இது தெரியவருகிறது. ![]() ஏதென்சின் செல்வ வளம் கிரேக்கம் முழுவதிலுமிருந்து திறமையான நபர்களை ஈர்த்தது. மேலும் கலைகளை ஆதரிக்கும் புரவலர்களாக ஒரு பணக்கார வகுப்பையும் உருவாக்கியது. ஏதெனியன் அரசு கற்றல் மற்றும் கலைகளுக்கு, குறிப்பாக கட்டிடக்கலை வளர்ச்சிக்கு நிதியுதவி செய்தது. ஏதென்சு கிரேக்க இலக்கியம், மெய்யியல் (பார்க்க கிரேக்க மெய்யியல்) மற்றும் கலைகள் (பார்க்க கிரேக்க நாடகம்) ஆகியவற்றின் மையமாக மாறியது. மேற்கத்திய கலாச்சார மற்றும் அறிவார்ந்த வரலாற்றின் மிகப் பெரிய ஆளுமைகள் சிலர் இந்தக் காலத்தில் ஏதென்சில் வாழ்ந்தனர்: நாடக கலைஞர்களான எசுக்கிலசு, அரிஸ்டாஃபனீசு, யூரிப்பிடீசு, சாஃபக்கிளீசு, மெய்யியலாளர்கள் அரிசுட்டாட்டில், பிளேட்டோ, சாக்கிரட்டீசு, வரலாற்றாசிரியர்கள் எரோடோட்டசு, துசிடிடீசு, செனபோன், கவிஞர் சிமோனிடிஸ் மற்றும் சிற்பி பீடியசு ஆகியோர் ஆவர். பாரசீகர்களுக்கு எதிரான தொடர் போரகளில் மற்ற கிரேக்க நகர அரசுகள் ஏதெனியன் தலைமையை ஏற்றுக்கொண்டன. கிமு 461 இல் பழமைவாத அரசியல்வாதியான சிமோனின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஏதென்சு பெருகிய முறையில் பரவலான ஏகாதிபத்திய சக்தியாக மாறியது. கிமு 466 இல் யூரிமெடோன் சமரில் கிரேக்க வெற்றிக்குப் பிறகு, பாரசீகர்கள் இனி ஒரு அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதன்பிறகு நக்சஸ் போன்ற சில அரசுகள் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்ல முயன்றன. ஆனால் அவை ஏதென்சுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைவதை தடுக்க ஏதெனியன் தலைவர்கள் பொதுவாக முயலவில்லை. மேலும் கிமு 458 இல் இரு தரப்பினருக்கும் இடையில் போர் வெடித்தது. சில ஆண்டுகள் முடிவில்லா போருக்குப் பிறகு, டெலியன் கூட்டணி மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணி (எசுபார்த்தா மற்றும் அதன் கூட்டாளிகள்) இடையே 30 ஆண்டுகால அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேக்கர்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையில் கால்லியாஸ் அமைதி உடன்பாடு (கிமு 450) ஏற்பட்டது. பெலோபொன்னேசியன் போர்கிமு 431 இல், ஏதென்சு மற்றும் எசுபார்த்தா மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு இடையே மீண்டும் போர் வெடித்தது. பெலோபொன்னேசியன் போரின் உடனடி காரணங்கள் குறித்து பண்டைய வரலாற்றாசிரியர்களின் கூறும் காரணங்கள் வேறுபடுகின்றன. இருப்பினும், துசிடிடீசு மற்றும் புளூட்டாக் ஆகிய இருவராலும் மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. போருக்கு முன்னர், கொரிந்தியாவும் அதன் குடியேற்றங்களில் ஒன்றான கோர்சிரா (இன்றைய கோர்ஃபு ) ஒரு உரசலில் ஈடுபட்டன. அதில் ஏதென்சு தலையிட்டது. விரைவில், ஏதென்சு கோர்சிராவை தன் கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. இதையடுத்து கொரிந்துக்கு ஏதென்சுமீது மன வருத்தம் உண்டானது. அதே சமயம் ஏதென்சுக்கு திரை செலுத்திவந்த பொடிடேயா (நவீனகால நியா பொடிடாயாவிற்கு அருகில்) ஏதென்சுக்கு எதிராக கலக் குரலை எழுப்பியது. இதனால் அந்த நகரத்தை ஏதெனியர் முற்றுகை இட்டனர். இறுதியாக, ஏதென்ஸ் மெகாரியன் மக்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த மெகாரியன் ஆணைகள் எனப்படும் பொருளாதாரத் தடை ஆணைகளை வெளியிட்டது. இந்த நடவடிக்கைகள் மூலமாக முப்பது ஆண்டு அமைதியை ஒப்பந்தத்தை மீறியதாக பெலோபொன்னேசிய கூட்டாளிகளால் ஏதென்சு குற்றம் சாட்டப்பட்டது. இதனால் எசுபார்த்தா முறைப்படி ஏதென்சு மீது போரை அறிவித்தது. ![]() பல வரலாற்றாசிரியர்கள் இந்த செயல்களை எசுபார்த்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையிலான பெலோபொன்னேசியன் போரின் தொடக்கத்திற்கான ஒரு சாக்காக மட்டுமே கருதுகின்றனர். கிரேக்க விவகாரங்களில் ஏதென்சின் மேலாதிக்கத்தால் எசுபார்த்தா மற்றும் அதன் கூட்டாளிகளிகளிடையே வளர்ந்து வந்த வெறுப்பே அடிப்படைக் காரணம் என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஏதென்சு (ஒரு கடற்படை சக்தி) மற்றும் எசுபார்த்தா (நிலம் சார்ந்த இராணுவ சக்தி) ஆகியவை ஒருவரையொருவர் தங்கள் பிடியில் கொண்டுவருவது கடினமாக இருந்ததால், போர் 27 ஆண்டுகள் நீடித்தது. அட்டிகாவை ஆக்கிரமிப்பதே எசுபார்த்தாவின் ஆரம்ப உத்தியாக இருந்தது. ஆனால் ஏதெனியர்கள் தங்கள் மதில் சுவர்களுக்குப் பின்னால் பின்வாங்கி இருந்தனர். முற்றுகையின் போது நகரில் பிளேக் நோய் பரவியது, பெரிக்கிளீசு மரணம் உட்பட பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஏதெனியன் கடற்படை பெலோபொன்னீசில் துருப்புக்களை தரையிறக்கியது, நௌபாக்டஸ் (கிமு 429) மற்றும் பைலோஸ் (கிமு 425) ஆகிய சமர்களில் வென்றது. ஆனால் இந்த யுக்திகளால் இரு தரப்பிற்கும் தீர்க்கமான வெற்றியைப் பெற முடியவில்லை. பல ஆண்டு முடிவில்லாத போர்த்தொடருக்குப் பிறகு, மிதவாத ஏதெனியன் தலைவர் நிக்கியாஸ் நிக்கியாஸ் அமைதி உடன்பாட்டைக் (கிமு 421) கொண்டவந்தார். இருப்பினும், கிமு 418 இல், எசுபார்த்தாவிற்கும் ஏதெனியன் கூட்டாளியான ஆர்கோசுக்கும் இடையிலான பகை மீண்டும் சண்டைக்கு வழிவகுத்தது. மாண்டினியாவில் எசுபார்த்தாவானது ஏதென்சு மற்றும் அதன் கூட்டாளிகளின் ஒருங்கிணைந்த படைகளை தோற்கடித்தது. சண்டையின் மறுதொடக்கமானது ஏதென்சில் ஆல்சிபியாடீசு தலைமையிலான போர் ஆதரவுப் பிரிவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. கிமு 415 இல், சிசிலியில் பெலோபொன்னேசியக் கூட்டாளியான சிராகூசுக்கு எதிராக ஒரு பெரிய போர்ப் பயணத்தைத் தொடங்க அல்சிபியாடீசு ஏதெனியன் சட்டமன்றத்தை வற்புறுத்தினார். நிசியாஸ் சிசிலியன் படையெடுப்பு குறித்து சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர் அல்சிபியாடீசுடன் இணைந்து போர்ப் பயணத்தை வழிநடத்த நியமிக்கப்பட்டார். எர்ம்மசின் புனிதத்தன்மை அவமதிப்பு விவகாரத்தில் தண்டனைக்கு உள்ளாகவிருந்த நிலையில், அல்சிபியாடீசு ஏதென்சுக்கு செல்லாமல் எசுபார்த்தாவுக்கு அரசியல் தஞ்சமாக வந்து சேர்ந்தார். அவர் தொடங்கிய போர் பயணத்தை நிசியாசின் கைகளில் விட்டுவிட்டார். அல்சிபியாடீசு எசுபார்த்தாவை சைராகுசுக்கு உதவியாக படைகளை அனுப்பும்படி வற்புறுத்தினார். இதன் விளைவாக, கிமு 413 ஏதெனியன் போர்ப் பயணம் ஒரு முழுமையான பேரழிவாக மாறி முழுப் படையும் இழந்தது. நிசியாஸ் சிறைபிடிக்கப்பட்டவர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த நேரத்தில், ஏதென்சின் கடற்படை மேலாதிக்கத்தை எதிர்கொள்ள எசுபார்த்தா ஒரு கடற்படையை (பாரசீகர்களின் உதவியுடன்) உருவாக்கியது. மேலும் அது லைசாந்தர் என்னும் ஒரு சிறந்த கடற்படைத் தலைவரைக் கொண்டிருந்தது. அவர் ஏதென்சின் தானிய இறக்குமதிக்கு ஆதாரமாக உள்ள ஹெலஸ்பாண்டை ஆக்கிரமித்து மூலோபாயமான இடத்தைக் கைப்பற்றினார். உணவுப் பற்றாகுறையால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஏதென்சு, லைசாந்தரை எதிர்கொள்ள அதன் கடைசி எஞ்சிய கடற்படையை அனுப்பியது. அவர் ஈகோஸ்ப்பொட்டாமியில் (கிமு 405) அவர்களைத் தீர்க்கமாக தோற்கடித்தார். ஏதென்சின் கடற்படையின் முழுமையான அழிவானது ஏதென்சை ஒன்றுமற்ற நிலைக்கு உள்ளாகும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. கிமு 404 இல் ஏதென்சு சரண்டைந்தது. எசுபார்த்தா கடுமையான முடிவுகளை ஏதென்சை எடுக்கவைத்தது: ஏதென்சு தனது நகர மதில் சுவர்கள், கடற்படை, வெளிநாட்டு உடைமைகள் என அனைத்தையும் இழந்தது. லைசாந்தர் ஏதெனியன் சனநாயகத்தை ஒழித்து, அதற்கு பதிலாக ஏதென்சை ஆள எசுபார்த்தாவின் ஆதரவுபெற்ற முப்பது பேர் கொண்ட குழுவை நியமித்தார். அடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia