ஒலிம்பிக் விளையாட்டுக்களின் சின்னமாக ஒலிம்பிக் வளையங்கள் திகழ்கின்றன.
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Summer Olympic Games) அல்லது ஒலிம்பியட்டின் விளையாட்டுக்கள் (Games of the Olympiad) பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு விளையாட்டு நிகழ்வாகும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தக் கொடுக்கப்படும் வாய்ப்பை இந்த நகரங்கள் பெரும் கௌரவமாகக் கருதுகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இரண்டாண்டுகள் கழித்து குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. இவை குளிர் பிரதேசங்களில், மலைப்பாங்கான நகரங்களில் நடத்தப்படுகின்றன. குளிர்கால ஒலிம்பிக்கை விட கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெரும்பான்மையான நாடுகள் பங்கேற்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைக் கிரேக்கத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்துள்ளன. கிரேக்க இராச்சியங்களின் வீழ்ச்சியால் பல நூற்றாண்டுகளாக தடைபட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பியர் தெ குபர்த்தென் மீண்டும் நிறுவினார். தற்கால கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏதென்ஸ் நகரில் 1896இல் முதன்முதலாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் ஒலிம்பிக் போட்டிகளில் 200 கிரேக்கப் போட்டியாளர்களும் 13 நாடுகளிலிருந்து 45 போட்டியாளர்களும் பங்கேற்றனர். 1904 முதல் முதல் மூன்று இடங்களை எட்டிய போட்டியாளர்களுக்கு (அல்லது அணிகளுக்கு) பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
துவக்ககால ஒலிம்பிக் போட்டிகளில் 42 போட்டிகளே இருந்தன; ஆனால் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 302 போட்டிகளில் 10,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.[1]
அனைத்து கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் ஐந்து நாடுகள் – கிரீசு, பிரான்சு, பெரிய பிரித்தானியா, சுவிட்சர்லாந்து மற்றும் ஆத்திரேலியா – தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளன. அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் குறைந்தது ஒரு தங்கப் பதக்கமாவது பெற்ற நாடாக பெரிய பிரித்தானியா விளங்குகிறது.
இதுவரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற மொத்த பதக்கப் பட்டியல்
தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்த இடங்கள். கோடைக்கால ஒலிம்பிக்கை ஒருமுறை நடத்திய நாடுகள் பச்சை வண்ணத்திலும் இரண்டு அல்லது மேற்பட்ட முறைகள் நடத்தியவை நீல வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளன.
^அ: 1900 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 95 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[3] பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தரவுதளத்தில் 1900 ஒலிம்பிக் போட்டிகளில்[4] 85 நிகழ்வுகளாகப் பதியப்பட்டுள்ளன. இந்த வேறுபாடு பில் மல்லோன் எழுதிய "1900 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் — பகுப்பாய்வும் சுருக்கங்களும்"[5] என்ற பதிப்பிலிருந்து எழுந்திருக்கலாம்; இதில் மல்லோன் எந்தெந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் தன்மையானவை என்ற தனது கருத்தையொட்டி எழுதியுள்ளார். ^ஆ: 1904 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 91 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[6] பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தரவுதளத்தில் 1904 ஒலிம்பிக் போட்டிகளில்[7] 94 நிகழ்வுகளாகப் பதியப்பட்டுள்ளன. இந்த வேறுபாடு பில் மல்லோன் எழுதிய "1904 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் — பகுப்பாய்வும் சுருக்கங்களும்"[8] என்ற பதிப்பிலிருந்து எழுந்திருக்கலாம்; இதில் மல்லோன் எந்தெந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் தன்மையானவை என்ற தனது கருத்தையொட்டி எழுதியுள்ளார். ^இ: 1920 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 154 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[9] பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தரவுதளத்தில் 1920 ஒலிம்பிக் போட்டிகளில்[10] 156 நிகழ்வுகளாகப் பதியப்பட்டுள்ளன. ^ஈ: ஆத்திரேலிய ஒதுக்கிடம் சட்டங்களால், 1956 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான 6 குதிரையேற்ற நிகழ்வுகளை மெல்பேர்ண் நகரில் மற்ற விளையாட்டு நிகழ்வுகள் நடப்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே ஸ்டாக்ஹோம் நகரில் நடத்தியது; இதில் 72 போட்டியாளர்கள் 5 நாடுகளலிருந்து கலந்து கொண்டனர். இவர்கள் மெல்பேர்ணுக்கு வரவில்லை. ^உ: 1956 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 145 நிகழ்வுகள் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் வலைத்தளம் தவறாக குறிப்பிடுகிறது;[11] உண்மையில் 145 நிகழ்வுகள் மெல்பேர்ணிலும் 6 நிகழ்வுகள் ஸ்டாக்ஹோமிலும் நடந்தமையால் மொத்தம் 151 நிகழ்வுகள் என்றிருக்க வேண்டும்.
குறிப்பு: 1916, 1940, மற்றும் 1944 ஆண்டுகளில் விளையாட்டுப் போட்டிகள் கைவிடப்பட்டாலும் அவற்றிற்கும் உரோம எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன;இது ஒலிம்பிக் சாசனத்தின்படி விளையாட்டுக்களை எண்ணாது ஒலிம்பியடுகளை கணக்கில் கொள்வதால் விளைகின்றது. எதிராக குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இம்முறை பின்பற்றப்படாது கைவிடப்பட்ட 1940 & 1944 விளையாட்டுக்களுக்கு எண்கள் தரப்படவில்லை.