சத்திரபதி சம்பாஜிநகர்
சத்திரபதி சம்பாஜிநகர் (பழைய பெயர்:அவுரங்காபாத், மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சி ஆகும். தென் மண்டல வரிப்பாறைகளின் மலைப்பாங்கான மேட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ள சத்திரபதி சம்பாஜிநகர் 1,175,116 மக்கள் தொகை கொண்டு மகாராட்டிரத்தின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறமாகும். இந்த நகரம் பருத்தி நெசவு மற்றும் கலை பட்டு (ஆர்டிக் சிலக்) துணிகளின் முக்கிய உற்பத்தி மையமாக அறியப்படுகிறது. இந்த நகரத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம் உட்பட பல முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த நகரம் ஒரு பிரபல சுற்றுலா மையமாகவும் உள்ளது. இதன் புறநகரில் அஜந்தா, எல்லோரா குகைகள் போன்ற சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இவை இரண்டும் 1983 ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவுரங்காபாத் குகைகள், தௌலதாபாத் கோட்டை, கிரிஸ்னேஷ்வரர் கோயில், ஜமா மசூதி, பீபி கா மக்பாரா, ஹிமாயத் பாக், பஞ்சக்கி, சலீம் அலி ஏரி ஆகியவை பிற குறிப்பிடத்தக்க சுற்றுலா பகுதிகளாகும். வரலாற்று ரீதியாக, அவுரங்காபாத்தில் 52 வாயில்கள் இருந்தன, அவற்றில் சில இன்றும் உள்ளன. இதன் காரணமாக அவுரங்காபாத் "வாயில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் தொழில் நகரம் (AURIC) நாட்டின் முதன்மையான சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் பசுமை தொழில்துறை சீர்மிகு நகரமாக மாறியது. [8] சாதவாகன வம்சத்தினரின் தலைநகரான பைத்தான் (கிமு முதல் நூற்றாண்டு-கிபி இரண்டாம் நூற்றாண்டு), அத்துடன் யாதவப் பேரரசின் தலைநகரான தௌலதாபாத் அல்லது தேவகிரி (கிபி 9 ஆம் நூற்றாண்டு கிபி 14 ஆம் நூற்றாண்டு ) போன்றவை நவீன அவுரங்காபாதின் எல்லைக்குள் அமைந்துள்ளன. 1308 இல், சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆட்சியின் போது இப்பகுதி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. 1327 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானகத்தின் தலைநகர் தில்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு (இன்றைய அவுரங்காபாத்) மாற்றப்பட்டது. அப்போதைய சுல்தானான முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் போது, அவர் தில்லி மக்களை தௌலதாபாத்திற்கு பெருமளவில் குடிபெயர உத்தரவிட்டார். இருப்பினும், முகமது பின் துக்ளக் தனது முடிவை 1334 இல் மாற்றிக் கொண்டார். அதன்பிறகு தலைநகரம் மீண்டும் தில்லிக்கு மாற்றப்பட்டது. 1499 இல், தௌலதாபாத் பகுதியானது அகமதுநகர் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1610 ஆம் ஆண்டில், எத்தியோப்பிய இராணுவத் தலைவர் மாலிக் அம்பாரால் அகமதுநகர் சுல்தானகத்தின் தலைநகராக விளங்க நவீன அவுரங்காபாத் உள்ள இடத்தில் காட்கி என்ற புதிய நகரம் நிறுவப்பட்டது. அவர் ஒரு அடிமையாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டவர். ஆனால் ஒரு பிரபலமான தலைமை அமைச்சராக உயர்ந்தார். அகமதுநகர் சுல்தானகத்தில். மாலிக் ஆம்பாருக்குப் பிறகு அவரது மகன் பதே கான் பதவியேற்றார். அவர் நகரத்தின் பெயரை ஃபதேநகர் என்று மாற்றினார். 1636 ஆம் ஆண்டில், தக்காண பிராந்தியத்தின் முகலாய அரச பிரதிநிதியாக இருந்த ஔரங்கசீப், நகரத்தை முகலாயப் பேரரசுடன் இணைத்தார். 1653 ஆம் ஆண்டில், ஔரங்கசீப் நகரத்தை "அவுரங்காபாத்" என்று பெயர் மாற்றி முகலாயப் பேரரசின் தக்காணப் பகுதியின் தலைநகராக மாற்றினார். 1724 ஆம் ஆண்டில், தக்காணத்தின் முகலாய ஆளுநர், நிஜாம் முதலாம் அசஃப் ஜா , முகலாயப் பேரரசில் இருந்து பிரிந்து தானே தனியாட்சி செய்யத் துவங்கினார். அதன்படி அவர் ஆசஃப் ஜாஹி வம்சத்தை நிறுவினார். 1763 இல் தங்கள் தலைநகரை ஐதராபாத் நகருக்கு மாற்றும் வரை, அந்த வம்சத்தினர் ஐதராபாத் இராச்சியத்தை முதலில் அவுரங்காபாத்தை தங்கள் தலைநகராக கொண்டு ஆண்டுவந்தனர். ஐதராபாத் இராச்சியம் பிரித்தானிய ஆட்சியின் போது ஒரு சமஸ்தானமாக மாறியது. மேலும் 150 ஆண்டுகள் (1798-1948) சமஸ்தானமாக நீடித்தது. 1956 வரை, அவுரங்காபாத் ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1960 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் மற்றும் மராத்தி பேசும் பெரிய மராத்வாடா பகுதி மகாராட்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. பெயர் மாற்றம்பால் தாக்கரே 1988 இல் இந்த நகரத்தின் பெயரை சம்பாஜிநகர் என மாற்ற முன்மொழிந்தார். உள்ளூர் மாநகராட்சி மன்றம் 1995 இல் பெயர் மாற்றம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. [9] 29 சூன் 2022 அன்று, சிவசேனா தலைமையிலான மகாராட்டிர அமைச்சரவை, மராட்டியப் பேரரசின் இரண்டாவது சத்ரபதியான சம்பாஜி போசலேவின் பெயரைக் கொண்டு, இந்நகரின் பெயரை சத்திரபதி சம்பாஜிநகர் என மாற்ற ஒப்புதல் அளித்தது. [10][11] இதனை அடுத்த வந்த ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு செப்டம்பர் 2023ல் உறுதி செய்தது.[12][13]மேலும் மாவட்டப் பெயர் மாற்றம் செய்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[14][15] வரலாறு![]() அகமத்நகர் சுல்தான் இரண்டாம் முர்தாசா நிஜாம் ஷாவின் முதலமைச்சரான மாலிக் அம்பாரால் காட்கி என்ற சிற்றூர் தலைநகராக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு தசாப்தத்திற்குள், காட்கியில் மக்கள்தொகை பெருகி கவர்ச்சிமிக்க நகரமாக வளர்ந்தது. மாலிக் அம்பர் 1626 இல் இறந்தார். [16] அவருக்குப் பிறகு அவரது மகன் பதே கான் பதவியேற்றார். அவர் ஊரின் பெயரான காட்கி என்பதை பதேநகர் என்று மாற்றினார் . 1633 இல் தௌலதாபாத் கோட்டையை முகலாய பேரரசின் துருப்புக்கள் கைப்பற்றியதன் மூலம், பதேநகர் உட்பட நிஜாம் ஷாஹி ஆட்சியில் இருந்த பகுதிகள் முகலாயர்களின் வசமானது. [17] 1653 ஆம் ஆண்டில், முகலாய இளவரசர் ஔரங்கசீப் இரண்டாவது முறையாக தக்காணத்தின் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் பதேநகரை தனது தலைநகராக மாற்றி அதற்கு அவுரங்காபாத் என்று பெயர் சூட்டினார். ஔரங்காபாத் சில சமயங்களில் ஔரங்கசீப்பின் ஆட்சி கால வரலாற்றாசிரியர்களால் குஜிஸ்தா புன்யாத் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. 1667 இல் ஔரங்கசீப்பின் மகன் முவாசம் இந்த மாகாணத்தின் ஆளுநரானார். அவருக்கு முன் சில காலம் மிர்சா அரசர் ஜெய் சிங் வசம் இந்த மாகாணத்தின் பொறுப்பு இருந்தது. [18] 1681 ஆம் ஆண்டில், ஔரங்கசீப் பேரரசராக முடிசூட்டப்பட்ட பிறகு, அவர் தக்காணத்தில் தனது இராணுவ போர்த் தொடர்களை நடத்துவதற்கு வசதியாக தன் அரசவையை தலைநகர் தில்லியில் இருந்து அவுரங்காபாத் நகருக்கு மாற்றினார். நகரத்தில் முகலாய உயரடுக்கினரின் வருகையானது நகரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஏராளமான பொது, தனியார் கட்டடங்கள் கட்டப்பட்டன. 1684க்குப் பிறகு ஔரங்கசீப் நகரத்தில் வசிக்க விரும்பவில்லை என்றாலும், மொகலாய தக்காணத்தின் முதன்மை இராணுவப் புறக்காவல் முகாமாக இந்த நகரம் முக்கியத்துவம் கொண்டதாகவே நீடித்தது. மேலும் செல்வத்தை ஈர்த்து அவுரங்காபாத்தை ஒரு வணிக மையமாக ஆக்கியது. பூத்தையல் வேலை செய்யப்பட்ட பட்டாடை உற்பத்தி இந்தக் காலத்தில் தோன்றியது. இத் தொழில் இன்றும் அவுரங்காபாத்தில் நடந்து வருகிறது. முகலாய அவுரங்காபாத் ஒரு கலாச்சார மையமாகவும் இருந்தது. இது பாரசீக மற்றும் உருது இலக்கியத்தின் முக்கிய மையமாக விளங்கியது. முகலாயர் காலத்தில், அவுரங்காபாத்தின் 54 புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்து 200,000 மக்கள் தொகையைக் கொண்டதாக இருந்தது. [19] 1724 ஆம் ஆண்டில், தக்காணப் பகுதியும் முகலாய தளபதியும், ஐதராபாத் நிசாமான ஆசஃப் ஜா தக்காணத்தில் தனது சொந்த வம்சத்தை நிறுவும் நோக்கத்துடன், நொறுங்கி கொண்டிருந்த முகலாயப் பேரரசில் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தார். 1763 ஆம் ஆண்டில் அவரது மகனும் வாரிசுமான நிஜாம் அலி கான் அசஃப் ஜா II தன் தலைநகரை ஐதராபாத்திற்கு மாற்றும் வரை, அவுரங்காபாத் அடுத்த 40 ஆண்டுகளுக்கு ஆசப் ஜாவின் தலைநகராக அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. [20] அதன்பிறகு சம்பாஜிநகர் அதன் சிறப்புரிமை நிலையை இழந்து பொருளாதார வீழ்ச்சி அடையும் நிலையை எய்தியது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நகரத்தின் மக்கள்தொகை குறைந்து போய், அதன் நிர்வாகம் முடங்கும் நிலைக்கு வந்தது. மேலும் அதன் கட்டிடங்கள் சிதைந்தன. இருப்பினும், ஔரங்காபாத் நிசாமின் ஆதிக்கத்தின் "இரண்டாவது நகரமாக" அரசியலின் எஞ்சிய காலம் முழுவதும் தொடர்ந்து முக்கியமானதாகவும் இருந்தது. 1816 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் சம்பாஜிநகருக்கு வெளியே ஒரு பாசறையை (கன்டோன்மென்ட்) நிறுவினர் (அவர்கள் நிசாமின் ஆதிக்கத்தில் இருந்த பிற பகுதிகளில் செய்தது போல்), ஆனால் நிசாமின் அதிகாரிகள் நகரத்திற்குள் நுழைவதை ஆதரித்தனர். [21] பிரித்தானிய மேலாதிக்கத்தின் கீழான சமஸ்தானமான, நிசாம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஐதராபாத் இராச்சியம் அரை-தன்னாட்சி கொண்ட பகுதியாக இருந்தது. அதாவது ஔரங்காபாத் கலாச்சாரம் காலனித்துவ செல்வாக்கிலிருந்து ஓரளவு விடுபட்டதாக இருந்தது. [22] சத்திரபதி சம்பாஜிநகர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்மயமாகத் தொடங்கியது, நகரத்தின் முதல் பஞ்சாலை 1889 இல் திறக்கப்பட்டது. [23] நகரத்தின் மக்கள் தொகை 1881 இல் 30,000 என்று இருந்தது. அது அடுத்த இரண்டு தசாப்தங்களில் 36,000 ஆக உயர்ந்தது. சம்பாஜிநகர் குறிப்பாக 1899-1900, 1918, 1920 ஆம் ஆண்டுகளில் தக்காணப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் குற்றங்கள் அதிகரித்தன. [24] இந்திய விடுதலையைத் தொடர்ந்து, ஐதராபாத் அரசு 1948 இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. அதன் விளைவாக அவுரங்காபாத் இந்திய ஒன்றியத்தின் ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆனது. 1956 இல், இது புதிதாக உருவாக்கப்பட்ட இருமொழி மாநிலமான பம்பாய் மாநிலத்துக்கு உட்பட்டதாக இருந்தது. மேலும் 1960 இல் இது மகாராட்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆனது. [25] நிலவியல்சத்திரபதி சம்பாஜிநகருக்கான ஆயக்கூறுகள் N 19° 53' 47" – E 75° 23' 54" ஆகும். இந்த நகரம் அனைத்து திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலைசத்திரபதி சம்பாஜிநகர் கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு சராசரி வெப்பநிலை 17 முதல் 33 °C வரை இருக்கும். பார்வையிட மிகவும் வசதியான காலம் குளிர்காலமான அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ஆகும். 1905 ஆம் ஆண்டு மே 25 அன்று 46 °செ (114 °பா) என அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 2 பிப்ரவரி 1911 இல் பதிவு செய்யப்பட்ட 2 °செ (36 °பா) ஆகும். குளிர் காலத்தில் வட இந்தியா முழுவதும் மேற்கு நோக்கி பாயும் குளிர் அலைகள் சிலசமயம் மேற்கு நோக்கி பாயும்போது மாவட்டம் சில சமயங்களில் பாதிக்கப்படுகிறது. அப்போது குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 2 °செ முதல் 4 °பா (35.6 °பா முதல் 39.2 °பா) வரை குறையும். [26] பெரும்பாலும் மழையானது சூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் பொழிகிறது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆண்டு சராசரி மழையளவு 710 மிமீ ஆகும். மழைக்காலத்தில் நகரம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மேக மூட்டம் மற்றும் கனமழை காரணமாக நகரின் தினசரி அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் 22 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. [27]
மக்கள்தொகையியல்![]()
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சம்பாஜிநகர் மக்கள் தொகை 1,175,116 ஆகும். இதில் ஆண்கள் 609,206, பெண்கள் 565,910 ஆவர். மக்கள் தொகையில் 0 முதல் 6 வயது கொண்டவர்கள் 158,779 பேர் ஆவர். அவுரங்காபாத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 889,224 பேர். கல்வியறிவு விகிதம் 75.67% ஆகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 79.34% என்றும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 71.72% என்றும் உள்ளது. அவுரங்காபாத்தில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை முறையே 229,223 மற்றும் 15,240 ஆகும். அவுரங்காபாத்தில் 2011 காலகட்டத்தில் 236659 குடும்பங்கள் வசித்துவந்தன. [4] சமயம்அவுரங்காபாத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் (51%), அதைத் தொடர்ந்து 30% முஸ்லிம்கள், 15.2% பௌத்தர்கள், 1.6% சைனர்கள். நகரில் கணிசமான எண்ணிக்கையில் சீக்கியம் மற்றும் கிறித்துவத்தை பின்பற்றுபவர்கள் உள்ளனர். பௌத்தர்கள் நவயான மரபைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் பட்டியல் சாதியினர். மொழி
நகரின் அதிகாரப்பூர்வ மொழியாக மராத்தி உள்ளது. மராத்தியே நகரத்தில் அதிகம் பேசப்படும் மொழியாகும், அதைத் தொடர்ந்து உருது மற்றும் இந்தி பேசப்படுகிறது. மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia